Published:Updated:

முரண்பாடுகளின் கூடாரம் தி.மு.க! - விளாசும் கல்யாணசுந்தரம்...

கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணசுந்தரம்

ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி... எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி... பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருக்கவேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்குக் கிடையாது.

முரண்பாடுகளின் கூடாரம் தி.மு.க! - விளாசும் கல்யாணசுந்தரம்...

ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி... எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி... பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருக்கவேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்குக் கிடையாது.

Published:Updated:
கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணசுந்தரம்

தருமபுரம் ஆதீனம் நிகழ்வில் ஆளுநர் கான்வாய் மீது தாக்குதல் நடந்ததாக எழுந்த புகாருக்குக் கண்டனம் தெரிவித்து சட்டசபையிலிருந்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. இதையடுத்து பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க அடிமையாக இருக்கிறது என்ற விமர்சனம் மீண்டும் தொடர்கிறது. அந்த விமர்சனம் குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்திடம் உரையாடினோம்...

“பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க இப்போதும் அடிமையாக இருப்பதாக விமர்சனம் தொடர்கிறதே..?”

“ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி... எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி... பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருக்கவேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்குக் கிடையாது. மத்திய அரசின் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த முடியாதபடி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்தியபோது ஆளுநரை மீறி அவசரச் சட்டம் கொண்டுவந்து செயல்படுத்தினோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க 25 இடங்கள் ஒதுக்கியது. ஆனால், நாங்கள் பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் 20 இடங்கள் மட்டுமே ஒதுக்கினோம். இப்போது சொல்லுங்கள், யார் அடிமையாக இருக்கிறார்கள் என்று!”

“மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க பேசினால், பா.ஜ.க-வுக்கு முன்பாக நீங்கள் வெளிநடப்பு செய்கிறீர்கள் என்பதை வைத்துத்தானே இந்த விமர்சனமே எழுந்திருக்கிறது?”

“தி.மு.க., நீட் விலக்கு தீர்மானம் கொண்டுவந்தபோது, நாங்கள் ஆதரவு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்தோம். ஆனால், அதே தீர்மானத்தை எங்கள் ஆட்சியில் கொண்டுவந்தபோது தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தார்கள். இப்போதும் மாநில அரசின் உரிமைகளுக்காக குடியரசுத் தலைவர், பிரதமரைச் சந்திக்க நாங்களும் வருகிறோம் என்றுதான் சொல்கிறோம். ஆனால், கட்சி அலுவலகத்தைத் திறக்க பா.ஜ.க தலைவர்களை அழைத்து அவர்கள் காலில் விழுந்தவர்கள் தி.மு.க-வினர்தான். மொத்தத்தில் முரண்பாடுகளின் கூடாரம் தி.மு.க.”

“தமிழ்நாட்டில் மதம், மொழி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறதே?”

“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பா.ஜ.க உள்ளிட்ட எந்த அமைப்பும் இப்படிச் சர்ச்சையைக் கிளப்பவில்லையே... காரணம், எங்கள் ஆட்சியில் யாராக இருந்தாலும், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு செயல்படவேண்டிய கட்டாயம் இருந்தது. தி.மு.க அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதில் தோற்றுவிட்டது. எங்கள் ஆட்சியின்போது கோவையில் பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மேடையில் இஸ்லாமியர்களைப் பற்றித் தவறாகப் பேசினார். அவர்மீது உடனே வழக்கு பதிவுசெய்தோம். ஆனால், சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்களில் எத்தனை பேர்மீது தி.மு.க இப்போது வழக்கு பதிவு செய்திருக்கிறது? பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களைச் சட்டத்தைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும். அந்த அறிவு தி.மு.க-வுக்கு இல்லை.”

“அப்படியென்றால் இப்போது தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் பதற்றத்துக்குக் காரணம் பா.ஜ.க இல்லை என்கிறீர்களா?”

“ஒருவேளை பா.ஜ.க தமிழ்நாட்டில் கலவரத்தை நடத்தி, அதை நாங்கள் கண்டிக்கவில்லையென்றால் எங்கள்மீது குற்றம்சாட்டலாம். எங்களைப்போல பா.ஜ.க-வும் எதிர்க்கட்சியாக தி.மு.க அரசின் செயல்பாட்டைக் கேள்வி கேட்கிறது. இது எப்படிச் சர்ச்சையாகும்? நிர்வாகம் செய்யத் தெரியாத அரசாக தி.மு.க இருப்பதைத்தான் இது காட்டுகிறது.”

“ஆளுநரும் பா.ஜ.க-வும் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுப்பதுதான் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம் என்கிறார்களே?”

“முதல்வருக்குரிய அதிகாரத்தோடும், ஆளும் அரசுக்குரிய தகுதியோடும் தி.மு.க-வினருக்கு ஆளுநரைக் கையாளத் தெரியவில்லை. தி.மு.க எப்போதெல்லாம் ஆளும் அரசாக வருகிறதோ, அப்போதெல்லாம் ஆளுநரே வேண்டாம் என்பார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது சட்டையைக் கிழித்துக்கொண்டு அவரிடமே சென்று முறையிடுவார்கள். தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத தோல்வியைச் சமாளிக்கவே ‘ஆளுநர் சரியில்லை, பா.ஜ.க சர்ச்சையை ஏற்படுத்துகிறது’ என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.”

“சட்டப்பேரவையில் தொடங்கி பொதுவெளி வரையிலும் அ.தி.மு.க தலைவர்கள் தி.மு.க-வினரால் தொடர்ந்து கேலி செய்யப்படுகிறார்களே?”

“தி.மு.க-வுக்குத் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். செங்கல்லைத் தூக்கி வந்து நகைச்சுவை செய்து சுற்றிக்கொண்டிருந்தார் உதயநிதி. அவரைப் பார்த்து ஊரே சிரித்தது. அவர் எங்கள் தலைவர்களைப் பார்த்து ‘காரை எடுத்துக்கொள்ளுங்கள்... ஆனால், கமலாலயத்துக்குச் செல்லாதீர்கள்’ என்கிறார். உண்மையில் கமலாலயத்துக்கு முதன்முதலில் சென்றது கருணாநிதிதான்... அடுத்து சென்றது ஸ்டாலின். உதயநிதிக்கு இந்த அரசியல் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.”

முரண்பாடுகளின் கூடாரம் தி.மு.க! - விளாசும் கல்யாணசுந்தரம்...

“அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுகின்றனவே?”

“உட்கட்சித் தேர்தலில் மனஸ்தாபங்கள் ஏற்படுவது இயல்புதான். அதுதான் ஜனநாயகமும்கூட. அப்பாவுக்குப் பிறகு மகன்... மகனுக்குப் பிறகு பேரன் என்ற வழி வழியான வாரிசு அதிகார மாற்றம் அ.தி.மு.க-வில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.”

“ஆனால், வலுவான தலைமை இல்லாததால் வந்த குழப்பம் என்கிறார்களே?”

“உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக, தி.மு.க-வினர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்கள். இதைப் பார்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘கூட்டணிக் கட்சிகள் முன், குறுகி நிற்கிறேன்’ என்று அறிக்கையேவிட்டார். ஆனாலும் சிலர் ராஜினாமா செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். முதல்வராக இருக்கும்போதே தனது கட்சித் தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்தான் தி.மு.க-வின் தலைவராக இருக்கிறார். இவர்கள் அ.தி.மு.க தலைவர்களை வலுவற்றவர்கள் என்கிறார்கள்... இது எவ்வளவு நகைப்புக்குரியது!”

“ஒற்றைத் தலைமையின்கீழ் அ.தி.மு.க வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?”

“யூகத்தின் அடிப்படையில், உதயநிதிக்கு பதிலாக கனிமொழி வருவாரா என்று எப்படி விவாதம் செய்ய முடியாதோ அப்படித்தான் ஒற்றைத் தலைமை குறித்த விவாதத்தையும் பார்க்கிறேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism