Published:Updated:

கள்ள ஓட்டு போட்டார்கள்... காவல் அதிகாரிகளை மிரட்டினார்கள்!

கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணசுந்தரம்

- தோல்விக்கு காரணம் சொல்லும் கல்யாணசுந்தரம்!

கள்ள ஓட்டு போட்டார்கள்... காவல் அதிகாரிகளை மிரட்டினார்கள்!

- தோல்விக்கு காரணம் சொல்லும் கல்யாணசுந்தரம்!

Published:Updated:
கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணசுந்தரம்

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆளும்கட்சியான தி.மு.க அராஜக போக்கைக் கையாண்டதாக அ.தி.மு.க-வினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதை நிரூபிப்பது போல மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில், ‘அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுத்து, வேட்பாளரின் வெற்றியை மாற்றி அறிவிக்க வைத்துவிட்டார்கள்’ என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரியே வாக்குமூலம் கொடுத் துள்ளார். இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக பேசிவரும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“சட்டமன்றத் தேர்தல் தொடங்கி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை அ.தி.மு.க தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறதே?’’

``2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அம்மாவின் மறைவுக்குப் பிறகு, கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புகளால் அந்தப் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அடைந்தது தோல்வியே இல்லை. கடந்த முறை தி.மு.க ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த பிறகு, 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வால் எதிர்க்கட்சியாகக்கூட வர முடியவில்லை. அதுதான் மிகப்பெரிய தோல்வி. ஆனால், நாங்கள் தொடர்ச்சியாகப் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும், ஊடகங்களின் ஆதரவு தி.மு.க-வுக்கு இருந்தபோதும் எங்கள் கூட்டணி 75 இடங்களைப் பிடித்தது. ஆனால், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான மோசடிகளை செய்து, தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. அதனால், இது எங்களுக்கு ஏற்பட்ட தோல்வியல்ல... ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தோல்வி.’’

“என்ன மாதிரியான மோசடிகள் அரங்கேறின?’’

``வாக்களிக்கும் இயந்திரங்களில் நாம் எந்த சின்னத்துக்கு வாக்களிக்கிறோமோ, அதற்கான காகிதம் அச்சாகி வெளியேவரும். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் அந்த நடைமுறை இருந்தது. ஆனால், அந்த ஏற்பாட்டை சாக்குபோக்கு சொல்லி தேர்தல் அதிகாரிகள் தட்டிக்கழித்துவிட்டார்கள். அதைவிட, வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடந்த அராஜகங்கள் சொல்லி மாளாது. தபால் வாக்குகளை எண்ணிக் கொண்டிருந்தபோது, குறிப்பிட்ட கட்சிகளின் ஏஜென்ட்டுகள் இல்லாமலேயே, வாக்குப்பதிவு எந்திரத்தின் சீலை உடைத்து வாக்குகளை எண்ண ஆரம்பித்துவிட்டனர். இதுபோன்ற பல முறைகேடுகள் நடந்தன.’’

``இதுகுறித்து வாக்கு எண்ணிக்கையின்போதே நீங்கள் புகார் அளித்திருக்கலாமே?’’

``அதிலும் சிக்கல்கள் இருந்தன... குறிப்பாக, ஒரு வார்டு ஏஜென்டை மட்டும் உள்ளே வரச் சொல்லிவிட்டு, அனைத்து வார்டுகளின் தபால் வாக்குகளையும் எண்ணிவிட்டார்கள். வெளியில் வந்து கட்சி நிர்வாகிகளிடம் கம்யூனிகேட் செய்வதற்குள்ளாகவே முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஆளுங்கட்சி தோல்வியடைந்த இடங்களில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து முடிவுகளை மாற்றி அறிவிக்க வைத்துவிட்டார்கள். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் நடந்த விவகாரமே இதற்கு சாட்சி. இது ஒருபுறம் என்றால், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் குறிப்பிட்ட கவுன்சிலர்களை வாக்களிக்க விடாமல், தங்களுக்கு வேண்டிய கவுன்சிலர்களை வாக்களிக்க வைத்து தலைவர்களைத் தேர்ந் தெடுத்துக்கொண்டார்கள். இவ்வளவு சிக்கல் களுக்கு இடையிலும் இதையெல்லாம் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம்; புகாரும் அளித்துள்ளோம்.”

``ஆனால், அ.தி.மு.க ஆளும்கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சிகள் உங்கள்மீது இதேபோன்ற குற்றச் சாட்டுகளை வைத்தனவே?’’

``அ.தி.மு.க ஆட்சியிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விஷயங்கள் நடந்து, சரி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், வட்டச் செயலாளர் பூத்துக்குள் சென்று வாக்குப் பெட்டிகளை உடைத்தது, பெண் அதிகாரிகளை வாடி, போடி என்று பேசியது என இப்போது நடந்ததுபோல எங்கள் ஆட்சியில் நடக்க வில்லையே. சினிமாவில் காட்டுவதைப்போல திட்டமிட்டு அராஜகம் செய்தார்கள். கள்ள ஓட்டு போட்டார்கள், பெண் காவல் அதிகாரி களை மிரட்டினார்கள், அரசு ஊழியர்களை அச்சுறுத்தினார்கள். இந்தக் கலாசாரம் தமிழ்நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.’’

கள்ள ஓட்டு போட்டார்கள்... காவல் அதிகாரிகளை மிரட்டினார்கள்!

``இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வினரும் வாக்குக்குப் பணம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டதே?’’

``எங்கள்மீது அப்படி ஒரு வழக்குகூட பதிவுசெய்யப்படவில்லை. நாங்கள் பணம் கொடுத்தோம் என்று எங்களுக்கு எதிராகப் போராட்டமும் நடக்கவில்லை. ஒருவேளை அ.தி.மு.க-வினர் பணம் கொடுத்திருந்தாலும், அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை யார் கையில் இருக்கிறது? எங்கள் கட்சி என்றில்லை... எந்தக் கட்சியிலும் சில தவறுகள், விதிமீறல்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறதுதான். ஆனால், அதை அரசு எந்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஆளும்கட்சி நடத்தும் அராஜகத்துடன் ஒப்பிடக் கூடாது.”

“நீங்கள் இவ்வளவு குற்றம்சாட்டினாலும், உங்கள் கட்சி தரப்பிலிருந்து ஒருமித்த குரலில் எதிர்ப்பு இல்லையே?’’

``ஆங்காங்கே சில போராட்டங்கள் நடந்தன. நாங்கள் புகார் கொடுத்து பல இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் காலமிருக்கிறது. தமிழகம் முழுவதும் தரவுகளை எடுத்து வருகிறோம். நிச்சயமாக நீதிமன்றத்துக்குச் செல்வோம். மக்களிடமும் எடுத்துரைப்போம்.”

“நீங்கள் குறிப்பிடுவதுபோல பணத்தையும் அதிகாரத்தையும் மட்டுமே வைத்து, தி.மு.க இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது சாத்தியமா?’’

``மக்கள் விருப்பப்பட்டு வாக்களித்து விட்டார்கள் என்று சொல்வதற்கு தி.மு.க ஆட்சிக்கு வந்து இந்தப் பத்து மாத காலத்தில் நல்லது எதுவும் நடக்கவில்லையே. சட்டம் ஒழுங்கு மீறல்கள்தான் தமிழகம் முழுவதும் அரங்கேறியிருக்கின்றன. கொடுத்த வாக்குறுதி களையே சரியாக நிறைவேற்ற முடியாமல் திணறிவருகிறது ஆளும்கட்சி.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism