Election bannerElection banner
Published:Updated:

பத்தரை சதவிகித இட ஒதுக்கீடு... 30 தொகுதி?- உறுதியாகும் அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி!

எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்

சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் அறிவித்தார். உடனே, பா.ம.க கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று ராமதாஸ் ட்வீட் செய்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி - அ.தி.மு.க இடையேயான கூட்டணி இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. தொகுதி உடன்படிக்கை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், முதல்வர் இல்லத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் அந்தக் கட்சியின் தலைமை தீவிரமாக இருக்கிறது. சசிகலா வருகைக்கு முன்பாக, கூட்டணி விவகாரங்களிலுள்ள சிக்கல்களைக் களைய முடிவெடுத்தது. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது அ.தி.மு.க கூட்டணிக்குள் கொண்டுவர முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். தைலாபுரத்தில் ஏற்கெனவே இரண்டு முறை அமைச்சர்கள் குழு சென்று ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்டால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என ராமதாஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் பிறகு கடந்த 3-ம் தேதி அன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் பா.ம.க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையிலும் இட ஒதுக்கீடு குறித்துப் பேசப்பட்டது. 20 சதவீத இடஒதுக்கீடு என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள். உங்களது வேறு கோரிக்கைகளை முழுமையாக அரசு நிறைவேற்றும் என்ற உறுதியையும் கொடுத்தனர். அதேபோல் தொகுதி விஷயத்தில் 30 தொகுதிகள் வரை அ.தி.மு.க தரப்பு கொடுக்கத் தயாராக இருந்தது. ஆனால், பா.ம.க தரப்பில் 40 வரை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...
எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...

இந்தநிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் விவசாயக் கடன் தள்ளுபடி என முதல்வர் அறிவித்தார். உடனே, `பா.ம.க கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி’ என்று ராமதாஸ் ட்வீட் செய்தார். அதையே தங்களுக்குச் சாதகமான ஒரு விஷயமாக அ.தி.மு.க பார்க்க ஆரம்பித்தது. மீண்டும் பேச்சுவார்த்தை வேகம் எடுத்திருக்கிறது. இந்த முறை இது இறுதிக்கட்டத்தை எட்டத் தொடங்கியிருக்கிறது.

அ.தி.மு.க தரப்பு இட ஒதுக்கீடு விவகாரத்தில் இறங்கிவந்திருக்கிறது. ஏற்கெனவே அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் வழங்க முதல்வர் தரப்பு ஒப்புதல் கொடுத்திருக்கிறது. ராமதாஸ் எதிர்பார்ப்பது போன்று இருபது சதவிகிதம் என்று இல்லாமல் பத்தரை சதவிகித உள் ஒதுக்கீட்டை அளிக்க அரசுத் தரப்பு தயாராகியிருக்கிறது.

பா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி?! -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்?

இந்த சதவிகிகிதத்தைக் கூட்ட ராமதாஸ் தரப்பும் முயன்றுவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து, அரசுத் தரப்பிலிருந்து இது குறித்த அறிவிப்பு வரும் பட்சத்தில் ராமதாஸ், முதல்வர் எடப்பாடியின் வீட்டுக்குச் சென்று நன்றி தெரிவிக்கத் தயாராக இருக்கிறார். அதோடு கூட்டணிக்கும் அப்போதே ஒப்புதல் தரவிருக்கிறார்.

தைலாபுரத்தில் பா.ம.க - அ.தி.மு.க தலைவர்கள்
தைலாபுரத்தில் பா.ம.க - அ.தி.மு.க தலைவர்கள்

மேலும், சீட் விஷயத்திலும் கொஞ்சம் இறங்கிவர பா.ம.க முடிவெடுத்திருக்கிறது. முப்பத்தைந்து சீட் வரை பா.ம.க இறங்கிவந்திருக்கிறாது. அ.தி.மு.க தரப்பு 30-லிருந்து 32 சீட் வரை ஏறியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இரண்டு கட்சிகளின் கூட்டணி சுபமாக நிறைவடையும் என்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு