Published:Updated:

தேனி: `மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் தாங்க..!’ - துணை முதல்வரை மறித்த அ.தி.மு.க தொண்டர்

பன்னீர்செல்வம்

தேனியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மறித்து, தனது மருத்துவ செலவுக்குப் பணம் கேட்டார் தொண்டர் ஒருவர்.

தேனி: `மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் தாங்க..!’ - துணை முதல்வரை மறித்த அ.தி.மு.க தொண்டர்

தேனியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மறித்து, தனது மருத்துவ செலவுக்குப் பணம் கேட்டார் தொண்டர் ஒருவர்.

Published:Updated:
பன்னீர்செல்வம்

தேர்தல் வேலைகளில் கட்சிகள் ஈடுபட்டுவரும் நிலையில், பிரசாரத்துக்குத் தயார்நிலையில் இருக்கிறார் துணை முதல்வரும், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். பிரசார வாகனத்தைத் தயார் செய்த ஓ.பி.எஸ்-ன் இளைய மகன் ஜெயபிரதீப், அதை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை போட்டிருக்கிறார். இன்னும் சில நாள்களில் ஓ.பி.எஸ் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்
துணை முதல்வர் ஓ.பி.எஸ்

இந்தநிலையில், இன்று தேனியிலுள்ள தனியார் மண்டபத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். உடன், அவருடைய மகனும்., தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்குமாரும், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையனும், அரசு அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து ஓ.பி.எஸ் கிளம்பும் நேரத்தில், கட்சித் தொண்டர்கள் பலரும் அவரை சந்தித்துப் பேசினர். அவர்களிடம் வரிசையாக நின்று பேசிக்கொண்டே நகர்ந்துவந்தார் துணை முதல்வர்.

மூக்கையா
மூக்கையா

அப்போது, கையில் குச்சியுடன் நின்றிருந்த அ.தி.மு.க கரைவேட்டி கட்டிய வயதான முதியவர் ஒருவர், ஓ.பன்னீர்செல்வத்திடம் கைகளை நீட்டி ஏதோ சொல்ல, தன்னுடைய பாக்கெட்டைப் பார்த்தார் ஓ.பி.எஸ். சட்டென அருகிலிருந்த தன் பாதுகாவலரிடம் கையை நீட்ட, அவருடைய கைக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. அதைஅந்த வயதான கட்சித் தொண்டரிடம் நீட்ட, அதை வாங்க மறுத்து, அவர் ஏதோ சொல்ல, `இதைப் பிடிங்க...’ எனச் சைகையில் காட்டிவிட்டு, அந்தப் பணத்தை முதியவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார் ஓ.பி.எஸ்!

மூக்கையா
மூக்கையா

யார் அந்த முதியவர்... ஓ.பன்னீர்செல்வத்திடம் என்ன பேசினார் என அறிய, அந்த முதியவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ``என் பேரு மூக்கையா. 67 வயசு ஆகுது. என் சொந்த ஊர் ஜங்கால்பட்டி பக்கத்துல இருக்குற நாராயணபுரம். போடி தொகுதி. எங்க ஊர்ல, அ.தி.மு.க கிளைக்கழகச் செயலாளரா இருந்தேன். 2001, நவம்பர் மாசம், தேனியில நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்துக்காக வந்தப்போ, பஸ்டாண்ட் கிட்ட எனக்கு விபத்து ஏற்பட்டு இரண்டு காலும் முறிஞ்சுபோச்சு. எந்திரிச்சு நடக்கவே முடியாத நிலைமையில, இப்போ குச்சசிவெச்சுதான் நடக்குறேன்.

OPS
OPS

விபத்து நடந்தப்போ பேருக்குனு என்னை வந்து பாத்தாங்க. அதுக்கப்புறம், எனக்கு மருத்துவச் செலவுக்குக்கூட பணம் கொடுக்க ஆள் இல்லை. ஒரு கட்சிக்காரங்ககூட வரலை. நானும், கட்சி மேலிடத்துக்கு எத்தனையோ மனுக்கள் எழுதிப் போட்டுட்டேன். ஆனா, எந்த பதிலும் இல்ல. இப்போகூட ஒரு மனு எழுதிப் போட்டிருக்கேன்” எனக் கூறியபடி, சென்னைக்கு பதிவு தபால் அனுப்பியதற்கான அஞ்சலக ரசீதைக் காட்டினார் மூக்கையா.

`ஓ.பன்னீர்செல்வத்திடம் நீங்கள் என்ன கேட்டீர்கள்?’ என நாம் கேட்க, ``என்னோட மருத்துவச் செலவுக்கு ரூ5 லட்சம் கேட்டேன். ஆனா, 1,000 ரூபாயைக் கொடுத்துட்டுப் போறாரு. கட்சியில என்னைக் கண்டுக்க யாருமே இல்லை. அடுத்ததா, முதல்வரைப் பார்க்கப்போறேன். அங்கேயும் பதில் இல்லைன்னா, என்ன செய்யறதுனுதான் தெரியலை” என்றார் விரக்தியோடு.