Published:Updated:

`தேர்தலை எதிர்கொள்வது எப்படி?' - அமைச்சர்களுக்கு டிப்ஸ் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த மாவட்டங்களில் தி.மு.க-வைவிட அதிக இடங்களில் அ.தி.மு.க வெற்றிபெற வேண்டும் அதற்கான திட்டமிடல்களை வகுத்துக்கொடுங்கள்' என்றிருக்கிறார்.

`தன்னலமற்ற முறையில் கடின உழைப்பால்தான் நான் இன்று முதலமைச்சராக உங்கள் முன்னிலையில் உட்கார்ந்திருக்கிறேன். நீங்களும் உழையுங்கள். உங்களுக்கு ஏற்ற பதவிகள் கிடைக்கும்' என்று தொண்டர்களை உற்சாகமூட்டும் விதத்தில் பேசியிருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதோடு, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு தொகுதியில் உள்ள பிரச்னைகளைக் கையில் எடுங்கள் என்று உள்ளாட்சித் தேர்தலில் புது வியூகத்தைப் புகுத்த இருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.

அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்
அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்

அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், அம்மா பேரவையின் மாநிலச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பை ஏற்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தன்னலமற்ற உழைப்பால்தான் முதலமைச்சர் பதவி தமக்குக் கிடைத்ததாகவும், நீங்களும் உழையுங்கள் உங்களுக்கு ஏற்ற பதவிகள் கிடைக்குமென்று தொண்டர்களை உற்சாகமூட்டும் விதத்தில் பேசியிருக்கிறார். அதோடு, அம்மா பேரவையில் தான் இருந்தபோது செய்த பணிகள் குறித்தும் தெரிவித்தார். மேலும், அம்மா பேரவையினர் அரசின் திட்டங்களை கிராமம் முதல் நகரங்கள் வரை மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரியவைக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் வருவதால், இதுவரையிலும் நாம் கொண்டாடாத விதத்தில் வெகுவிமரிசையாக விழாவினைக் கொண்டாட வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் அம்மா பேரவை சார்பாகப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், முக்கிய அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில், `9 மாவட்டங்களுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த மாவட்டங்களில், தி.மு.க வைவிட அதிக இடங்களில் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கான திட்டமிடல்களை வகுத்துக்கொடுங்கள்' என்று அசைன்மென்ட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதேபோல், கூட்டணிக் கட்சிகள் எத்தனை சீட் கேட்பார்கள், அவர்களுக்கு எத்தனை சீட் ஒதுக்க வேண்டும், மாவட்டங்களில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை எப்படி எதிர்கொண்டு வாக்குகளாக மாற்றுவது என்பது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடக்காத மாவட்டங்களில் முக்கிய அமைச்சர்கள் மேற்பார்வையிட இருக்கிறார்கள். கடந்த தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளிடம் நடந்துகொண்டது போல் இந்த முறை நடந்துகொள்ளக்கூடாது என்று கடுமையான உத்தரவை முதல்வர் பிறப்பித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதோடு, இந்தமுறை அதிக இடங்களில் வெற்றிபெற்று, கட்சியில் தனது பெயரை நிலைநிறுத்த வேண்டும். அதற்கான வேலையை இப்போதிருந்தே பார்க்கத் தொடங்குங்கள் என்று அமைச்சர்களுக்கு மறைமுக உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள், அ.தி.மு.க வட்டாரத்தில். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில், கட்சிரீதியாகவும் ஆட்சிரீதியாகவும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டதாக அ.தி.மு.க -வினரின் பேச்சு மெல்ல மெல்ல எழத்தொடங்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு