Published:Updated:

`மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சி; வெள்ளோட்டம்தான் இந்த வெற்றி!' - பா.வளர்மதி

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பிரமாண்ட வெற்றி பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறுகிறார்.

பா.வளர்மதி
பா.வளர்மதி

`உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட இடங்களில் 57 சதவிகித இடங்களை அ.தி.மு.க வென்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தலில், அரியலூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், நாமக்கல், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தி.மு.க.வை விட அதிக இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. மற்ற மாவட்டங்களில் சறுக்கல்தான் என்றாலும் இதுவே பெரிய சாதனைதான்' என்கிறார் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சியை பிடிப்பதற்கான வெள்ளோட்டம்தான் இந்த வெற்றி.
பா.வளர்மதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.வளர்மதி, ``அ.தி.மு.க-வுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் பிரமாண்டமான வெற்றிதான். அம்மாவுக்குப் பிறகு அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த மூன்று வருடங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள், அவமரியாதைகள், பொய்யான பிரசாரங்கள் என நாங்கள் சந்தித்த சோதனைகள் ஏராளம். உள்ளாட்சித் தேர்தலை நடத்திட முயலும்போதெல்லாம் நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெற்றுவிட தி.மு.க-வினர் துடியாய் துடித்தனர்.

இன்று அதே தி.மு.க-வினர் தேர்தல் முடிவுகளை விரைந்து அறிவிக்குமாறு நீதிமன்றத்தை நாடுகின்றனர். இதிலிருந்தே தேர்தல் எந்தளவுக்கு நியாயமாக நடந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். இவ்வளவு சோதனைகளையும் தாண்டி, அம்மா இல்லாத இந்தக் காலகட்டத்திலும் கட்சி 50 சதவிகித இடங்களை வென்றுள்ளது என்றால் அது சாதனைதான்” என்றவரிடம், ``இத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்குமா? இம்முடிவுகள் உங்களுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளதா” என்றோம்.

பா.வளர்மதி
பா.வளர்மதி

``எங்களுக்கு எந்தச் சறுக்கலும் இல்லை. ஆறு மாதத்துக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணிக் கட்சிகளை மீண்டும் ஒருங்கிணைத்து, மக்களின் ஆதரவுடன் ஆறே மாதத்தில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சியைப் பிடிப்பதற்கான வெள்ளோட்டம்தான் இந்த வெற்றி” என்றார்.