Published:Updated:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! - மாற்றங்கள் ஏற்படுத்திய கடிதம்

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் முக்கியமானவர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை குறித்தும், அதனை விமர்சித்தும் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி இருந்தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த கடிதம் எழுதிய பலரின் கட்சி அதிகாரம் தற்போது பறிக்கபட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது...?

கடந்த வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து, அக்கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்து, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராகுல்காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று, ஆகஸ்ட் 10 ம் தேதியோடு பதவி காலம் முடிவடைந்தது.அதனால், `காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?’ என்ற கேள்வி கட்சி நிர்வாகிகளிடையே எழுந்து புது புது குழப்பங்களை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு தான் வரப்போவதில்லை என்று மறுத்துவிட, வேறு வழியின்றி மீண்டும் `கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார்’ என செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் ஒன்று சேர்ந்து கடிதம் ஒன்றை எழுதி, இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் பார்வைக்கு அனுப்பிவைத்தனர். அதில், `கட்சியின் நலன் கருதி நிரந்தரத் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும்' என்றும் கோரியிருந்தனர்.

இந்தக் கடிதம், பா.ஜ.க தூண்டுதலின் பேரில்தான் காங்கிரஸ் கட்சியிலுள்ள சில தலைவர்களே இப்படிச் செயல்படுகிறார்கள்' என்ற சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, "காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் மூலமே தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். நியமனம் மூலம் பதவிக்கு வரும் தலைவர்களுக்கு கட்சியினரிடம் ஒரு சதவிகித ஆதரவுகூட இருக்காது. உட்கட்சித் தேர்தல் நடத்தப்படாவிட்டால் இன்னும் 50 ஆண்டுக்காலத்துக்கும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கும்'' என்று கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் புது சர்ச்சையை கிளப்பினார்.

மேலும், பா.ஜ.க-வுக்கு உதவுவதற்காக இதைச் செய்திருப்பதாகவோ அல்லது அந்தக் கட்சியின் உத்தரவின் பேரில் இதைச் செய்திருப்பதாகவோ நிரூபித்தால், தான் ராஜினாமா செய்வேன் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகளுக்கிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில், காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியில், அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் இந்த குழு தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ள குழுவில் ஏ.கே.அந்தோனி, அகமத் படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கட்சியின் மைய தோ்தல் ஆணையக் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில், மதுசூதன் மிஸ்திரி, ராஜேஷ் மிஸ்ரா, கிருஷ்ண பைரே கௌடா, எஸ்.ஜோதிமணி, அர்விந்தா் சிங் லவ்லி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த, மறுசீரமைப்பில் ராகுல் காந்தியின் ஆதரவாளரான ரன்தீப் சுர்ஜிவாலாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் காங்கிரஸ் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் அதிக சக்தி கொண்ட ஆறு பேர் கொண்ட குழுவில் இடம்பெற்று உள்ளார்.

சோனியா காந்திக்கு எழுதிய சர்ச்சைக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்ட ஜிதின் பிரசாத், மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராகவும், ராகுல் காந்தியின் ஆதரவாளராக அறியப்படும் மாணிக்கம் தாகூர் தெலுங்கானாவின் புதிய செயலாளராகவும் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலாம் நபி ஆசாத் தவிர, அம்பிகா சோனி, மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் பொதுச் செயலாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நிறுவன விஷயங்களில் சோனியா காந்திக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில் அம்பிகா சோனி இடம்பெற்று உள்ளார்.

Congress CWC: `சலசலப்பை ஏற்படுத்திய கடிதம்’ - ராகுல் கருத்தும் அதிருப்தியும்..!
அடுத்த கட்டுரைக்கு