சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு இளவரசி ஆம்புலன்ஸ் மூலம் சிறையிலிருந்து இன்று மதியம் 3.20 மணியளவில் அழைத்துவரப்பட்டார்.
சி.டி.ஸ்கேன் மூலம் அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்துவருகிறது. இதையொட்டி, பாதுகாப்புப் பணியில் இருக்கிற பெங்களூரு போலீஸார் தமிழக செய்தியாளர்களைத் தடுத்து வெளியேற்றினர். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்துக்குள் தமிழக செய்தியாளர்களை அனுமதிக்காமல் பேரிகார்டுகளை வைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காய்ச்சல், மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சை அவரது உடல் நன்றாக ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, ``ஆக்சிஜன் அளவு நேற்று 95 சதவிகிதமாக இருந்தது. இன்று 98 சதவிகதமாக அதிகரித்துள்ளது. உட்கொள்ளும் மருந்துகளுக்கும் அவரின் உடல் ஒத்துழைக்கிறது. சுய நினைவுடன் இயல்பாக இருக்கிறார். சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்ற உறவினர்கள் கேட்டார்கள்.

அதற்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இதுவரை 7,500-க்கும் அதிகமான கோவிட் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ வசதிகளும் இருக்கிறது. தொடர்ந்து இங்கேயே சிகிச்சை எடுக்க சசிகலா தரப்பும் ஒப்புக்கொண்டனர்" என்றார். இந்தநிலையில், இளவரசியும் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.