Published:Updated:

`மத்திய அமைச்சர் தொட்டதால் பால் தாக்கரே நினைவிடம் கெட்டுவிட்டது' - சிவசேனா பேச்சு!

பால் தாக்கரே நினைவிடத்தில் ராணே
பால் தாக்கரே நினைவிடத்தில் ராணே

மத்திய அமைச்சர் நாராயண் ராணே வந்து சென்றதால் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக்கூறி சிவசேனாவினர் பால் தாக்கரேயின் நினைவிடத்தைப் புனிதப்படுத்தியதாகத் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணே சமீபத்தில் மத்திய அமைச்சராக்கப்பட்டார். மும்பையில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்காக ஜன் ஆஷிர்வாத் யாத்திரையை பாஜக நடத்திவருகிறது.இதை நாராயண் ராணே மும்பையில் வியாழக்கிழமை தொடங்கி, ஏழு நாள்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். `முதல் நாளில் மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவேன்’ என்று சொன்னதோடு சொன்னபடி செய்தும் காட்டினார். சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்றவர் ராணே என்பதால், அவர் பால் தாக்கரே நினைவிடத்துக்கு வரக் கூடாது என்று சிவசேனா எச்சரித்திருந்தது. இதையடுத்து தாக்கரே நினைவிடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவசேனாவினரும் அதிக அளவில் கூடியிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பாஜக-வினருடன் மோதிக்கொள்ள வேண்டாம் என்று சிவசேனா தொண்டர்களைக் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது. இதனால் ராணே வந்து சென்றபோது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

மகாராஷ்டிரா: `நேரம் வந்தால் சேனா பவனை இடிப்போம்’ -பாஜக உறுப்பினர் கருத்துக்கு உத்தவ் தாக்கரே பதிலடி
பால் தாக்கரே நினைவிடத்தில் ராணே
பால் தாக்கரே நினைவிடத்தில் ராணே

ஆனால் ராணே வந்து நினைவிடத்தைத் தொட்டு மரியாதை செலுத்திச் சென்றதால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக சிவசேனாவினர் தெரிவித்தனர். அதோடு நினைவிடத்தை புனிதப்படுத்தவும் செய்தனர். பசுவின் கோமியத்தை தெளித்ததோடு, பால் ஊற்றி புனிதப்படுத்தினர். சிவசேனா தலைவர்களில் ஒருவரான அப்பா பாட்டீல் உட்பட சில தலைவர்கள் இந்தக் காரியத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பா பாட்டீல் கூறுகையில், "சிலர் வந்து சென்றதால் பால் தாக்கரே நினைவிடத்தின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது. எனவே கோமியம் தெளித்து, பாலாபிஷேகம் செய்து புனிதப்படுத்தினோம். சிவசேனாவின் நினைப்பு இப்போதுதான் ராணேவுக்கு வந்திருக்கிறது. சிவசேனாவைவிட்டுச் சென்ற பிறகு பல ஆண்டுகளாக பால் தாக்கரே நினைப்பே ராணேவுக்கு வரவில்லை. நினைவிடத்துக்கு வந்து சென்ற பிறகு பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மகாராஷ்டிராவை அழித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ராணேயின் இது போன்ற நினைப்பை எந்தவித சிவசேனா தொண்டராலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார். பால் தாக்கரேவின் நினைவிடத்தைப் புனிதப்படுத்திய சிவசேனாவினரின் செயல் பாஜக-வினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அதோடு இந்தச் செயலைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. `நினைவுச்சின்னங்கள் ஒன்றும் தனியார் சொத்து இல்லை’ என்று அந்தக் கட்சி தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு