Published:Updated:

தி.மலை: 7 ஆண்டுகளாக வாடகை பாக்கி; ஜேசிபி கொண்டு இடித்துத் தள்ளப்பட்ட `அம்மா இல்லம்' - பின்னணி என்ன?

இடிக்கப்பட்ட 'அம்மா இல்லம்'

வாடகை பாக்கி தராமல் இழுத்தடித்துவந்ததால், அ.தி.மு.க நிர்வாகியின் கட்சி அலுவலகமான `அம்மா இல்லம்' நில உரிமையாளரால் இடித்துத் தள்ளப்பட்டது.

தி.மலை: 7 ஆண்டுகளாக வாடகை பாக்கி; ஜேசிபி கொண்டு இடித்துத் தள்ளப்பட்ட `அம்மா இல்லம்' - பின்னணி என்ன?

வாடகை பாக்கி தராமல் இழுத்தடித்துவந்ததால், அ.தி.மு.க நிர்வாகியின் கட்சி அலுவலகமான `அம்மா இல்லம்' நில உரிமையாளரால் இடித்துத் தள்ளப்பட்டது.

Published:Updated:
இடிக்கப்பட்ட 'அம்மா இல்லம்'

திருவண்ணாமலை அ.தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் பெருமாள்நகர் ராஜன். இவர், மா.செ-வாக இருந்த சமயத்தில்... திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில், வாடகைக்கு ஓர் இடத்தைப் பெற்று `அம்மா இல்லம்' என்ற பெயரில் கட்சி அலுவலகம் ஒன்றைக் கட்டியிருக்கிறார். அதன் ஒரு பகுதியைக் கட்சி அலுவலகமாகவும், மற்றொரு பகுதியை கணிப்பொறி பயிற்சி மையம் மற்றும் தையல் பயிற்சி மையமாகவும் அமைத்து செயல்படுத்திவந்திருக்கிறார். அந்த இடத்தின் உரிமையாளருக்கு சிறிது காலம் மட்டுமே வாடகை வழங்கிவந்தவர், ஒருகட்டத்தில் வாடகையையே தராமல் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடம்
சம்பவ இடம்

இது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடாக மாறியுள்ளது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள்நகர் ராஜனிடம் இருந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தயிடம் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க கட்சி அலுவலகத்தை வேங்கிக்கால் பகுதியில் புதிதாகத் தொடங்கியிருக்கிறார் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி. அதன் பின்னர், அம்மா இல்லம் செயல்படாமலே இருந்துவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையில், அந்த இடத்தை... மற்றொரு அ.தி.மு.க பிரமுகரான சஞ்சீவி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார் நிலத்தின் உரிமையாளர். இருப்பினும் அந்த இடத்தை காலி செய்யாமல் இருந்துவந்தாராம் முன்னாள் அ.தி.மு.க மா.செ ராஜன். இந்நிலையில், அண்மையில் ஒருநாள் ராஜன் வெளியில் சென்றுள்ள செய்தியறிந்த மற்றொரு அ.தி.மு.க தரப்பினர், கடந்த 31-ம் தேதி இரவு ஜே.சி.பி எந்திரத்தைக்கொண்டு அம்மா இல்லத்தை இடித்துத் தள்ளியுள்ளனர். இதை அறிந்த ராஜனின் ஆதரவாளர்கள், மறுநாள் காலையில் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போலீஸ் பேச்சுவார்த்தை
போலீஸ் பேச்சுவார்த்தை

ஜெயலலிதா பெயரில் இயங்கிய அ.தி.மு.க நிர்வாகியின் அம்மா இல்லம் கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "பெருமாள்நகர்.ராஜன், முன்னாளில் மாவட்டச் செயலாளராக இருந்த தருணத்தில்... வசதிபடைத்த போளூர் மார்வாடி உரிமையாளர் ஒருவரிடம் திருவண்ணாமலையில் இருந்த இடத்தை வாடகை ஒப்பந்தத்துக்குக் கேட்டிருக்கிறார். அந்த இடத்தில் பி.வி.சி கம்பெனி நடத்தப்போவதாக ராஜன் சொல்லியதால், `இதனால் நல்ல வாடகை வருமானம் வருமே' என்ற நம்பிக்கையில், அந்த மார்வாடி உரிமையாளரும் இடத்தை வாடகை ஒப்பந்தத்துக்கு வழங்கியிருக்கிறார். ஆனால், ராஜனோ பி.வி.சி கம்பெனி அமைக்காமல், `அம்மா இல்லம்' என்ற கட்சி அலுவலகத்தை அங்கு ஆரம்பித்துவிட்டார். இதை அறிந்த இடத்தின் உரிமையாளரோ... `என்னப்பா நீ, சொன்னதை விட்டுட்டு கட்சி அலுவலகம் ஆரம்பிச்சிருக்கே... இதனால் பின்னாளில் எனக்குப் பிரச்னை வருமே' என்று கேட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு, `இல்லை... இல்லை... அதெல்லாம் வராது. நான் பார்த்துக்கொள்கிறேன்' என அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூறி அனுப்பியிருக்கிறார் ராஜன். அவர் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்து எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், தொடக்கத்தில் சுமார் 11 மாதங்கள் மட்டுமே உரிமையாளருக்கு வாடகை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு, ஏழு ஆண்டுகளாக வாடகை கொடுப்பதையே நிறுத்தியிருக்கிறார் ராஜன். இதனால் மனஅழுத்தத்துக்கு ஆளான உரிமையாளர், `இந்த மொத்த இடத்தையும் நீங்களே விலைக்கு வாங்கிக்கோங்க. இல்லைன்னா வாடகை பாக்கியை ஒழுங்கா கொடுங்க' என்று கேட்டிருக்கிறார். ஆனால், ராஜனோ இரண்டில் எதையுமே செய்யாமல் தட்டிக்கழித்து வந்திருக்கிறார். இந்நிலையில், திருவண்ணாமலை அ.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சீவி என்பவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தை விற்பனை செய்துள்ளார் நிலத்தின் உரிமையாளர்.

சம்பவ இடம்
சம்பவ இடம்

அந்த இடத்துக்கான மின் இணைப்பு விவரம் முதல் அனைத்தையும் தன் பெயருக்கு சரியாக மாற்றிக்கொண்ட சஞ்சீவி, ராஜனைச் சந்தித்து இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளார். `நான் இடத்தை காலி செய்ய வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் தர வேண்டும்' என கூறி வாக்குவாதம் செய்தாராம் ராஜன். இந்தக் கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துவந்திருக்கிறது. இந்நிலையில், ராஜன் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும் செய்தி அறிந்த நிலத்தின் உரிமையாளர் தரப்பு, ஜே.சி.பி வண்டியை எடுத்துச் சென்று 'அம்மா இல்லம்' கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்கள். அதை அறிந்து வந்து அங்கு வாக்குவாதம் செய்த ராஜன் தரப்பினர் அளித்த புகார் அடிப்படையில், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள்" என்றனர் மெதுவாக.

இந்தச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் கேட்டபோது, ``147, 294B, 541, 506/2, 427, 3(1) பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு தரப்பின் மீதும் 143, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம்." என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism