Published:Updated:

`இணைப்பு விழாவை ரத்து பண்ணிடுங்க; டென்ஷனா இருக்காங்க!'-அமைச்சரால் கொதித்த தீபா பேரவையினர்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

``பதவியையும், அதை வைத்துப் பணம் சம்பாதிப்பதும் குறிக்கோளாக கொண்டு அ.தி.மு.க-வில் இணைய விரும்பும் தீபா பேரவையினர் அ.தி.மு.க-வில் இணைவது கட்சிக்குப் பெரிய ஆபத்து'' எனக் கொதிக்கிறார்கள் ரர-க்கள்.

அ.தி.மு.க-வுடன் இணைய விரும்பும் தீபா பேரவையினர்
அ.தி.மு.க-வுடன் இணைய விரும்பும் தீபா பேரவையினர்

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அரசியலை விட்டு விலகுகிறேன் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான ஜெ.தீபா, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிப்படையாக அறிவித்தார்.

இந்த நிலையில், தீபா பேரவையைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், அ.தி.மு.க-வுடன் இணையும் படலங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆனால், அ.தி.மு.க-வுடன் இணைய விரும்பும் தீபா பேரவை நிர்வாகிகளை, அ.தி.மு.க-வினர் போட்டியாக நினைப்பதுடன், அவர்கள் அ.தி.மு.க-வில் இணைவதை எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள். அப்படி திருச்சியில் நடந்த இணைப்பு நிகழ்ச்சி அ.தி.மு.க-வினரின் எதிர்ப்பு காரணமாக ரத்தானது. இதனால் சாலை மறியல் என அடுத்தடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மேடையில் ஆர்சி.கோபி
மேடையில் ஆர்சி.கோபி

நேற்று மாலை 7 மணி அளவில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தீபா பேரவை நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக திருச்சி முழுக்க பிரமாண்டமான போஸ்டர்கள், விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் திருச்சி முன்னாள் மாவட்டச் செயலாளரான ஆர்.சி கோபி தலைமையில் விழா நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ப.குமார் முன்னிலையில் அமைச்சர்கள் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான தீபா பேரவை நிர்வாகிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இணைவதாக இருந்தன.

தொண்டர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரின் வருகைக்காக மண்டபத்தில் காத்திருந்தனர். இந்த நிலையில், இந்த விழாவுக்கு ஸ்ரீரங்கம் அ.தி.மு.க பகுதிச் செயலாளர் டைமண்ட் திருப்பதி தலைமையிலான அ.தி.மு.க தொண்டர்கள் கட்சி நிர்வாகிகளை புறக்கணித்து, இணைப்பு விழா நடைபெறுவதாக கூறி விழாவுக்கு வரும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் ப.குமாரை முற்றுகையிடத் தயாராக இருந்தனர். இந்தத் தகவல் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள், இணைப்பு விழா நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்யும்படி ஆர்.சி.கோபியிடம் தெரிவிக்க, அவரும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக மேடையில் அறிவித்தார்.

சாலைமறியல்
சாலைமறியல்

அதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த தீபா பேரவை நிர்வாகிகள், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், இது உட்கட்சி விவகாரம். இதனால் சாலை மறியலில் ஈடுபடுவதும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும் முறையல்ல என எச்சரித்து அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்கள். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் பகுதி அ.தி.மு.க-வினரோ, ``கட்சியைக் கலைப்பதாக தீபா அறிவிப்பதற்கு முன்பாகவே, அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக தீபாவால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர் ஆர்.சி.கோபி. அப்படி நீக்கம் செய்து அடுத்த சில தினங்களில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.சி.கோபி, அ.தி.மு.க-வில் தனக்கு நல்ல பதவி கொடுத்தால் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைவேன்” என அறிவித்தார்.

அ.தி.மு.க-வுக்கும் மக்களுக்கும் விசுவாசமாக உள்ளவர்தான் தேவையே தவிர, பதவியையும், அதை வைத்து பணம் சம்பாதிப்பதும் குறிக்கோளாக உள்ள கோபி போன்றவர்கள் அ.தி.மு.க-வில் இணைவது பெரிய ஆபத்து. அதுமட்டுமல்லாமல், கட்சி நிகழ்ச்சி நடத்தினால் லோக்கல் நிர்வாகிகளுக்கும், பகுதிச் செயலாளருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தவகையில் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளரான டைமண்ட் திருப்பதிக்கு இந்த நிகழ்ச்சி குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை. இது எந்த விதத்தில் சரி. அதனால் இது குறித்து எங்கள் மாவட்டச் செயலாளர் ப.குமாரை முற்றுகையிட இருந்தோம்.

அ.தி.மு.கவில் இணைவதாக அறிவித்த ஆர்.சி.கோபி
அ.தி.மு.கவில் இணைவதாக அறிவித்த ஆர்.சி.கோபி

எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்யக் கூறிவிட்டார்கள்” என முடித்தார்கள். சாலை மறியலில் ஈடுபட்ட தீபா பேரவையைச் சேர்ந்த படையப்பா ரங்கராஜ் என்பவர், ``நாங்கள் அனைவரும் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜெ பேரவையில் இணைந்து செயல்பட்டோம். தற்போது ஜெயலலிதாவின் வழியில் கட்சியைப் பலப்படுத்தவே, தாய்க் கலக்கத்தில் இணைய விரும்புகிறோம். ஆனால், நாங்கள் கட்சியில் இணைவதால், அ.தி.மு.க-வில் உள்ள ஒரு சிலரின் பதவிக்கும், வருமானத்துக்கும் ஆபத்து என்பதால், நாங்கள் கட்சியில் இணைவதை தடுக்கிறார்கள். இது கட்சிக்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம்” என்றார். தீபா பேரவை அ.தி.மு.க இரண்டும் இணைந்தாலும்கூட, நிர்வாகிகளுக்கு இடையேயான மோதல் ஓயாது போல.