Published:Updated:

`நீங்கள் செய்யாவிட்டால் நாங்கள் செய்வோம்!’ - ஊட்டியில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட அ.தி.மு.க பேனர்கள்

இளம் பெண் சுபஸ்ரீ பேனர் விழுந்து உயிரிழந்ததையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட அ.தி.மு.க பேனர்கள், காவல்துறையினரின் கண்டிப்பால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.

A.I.A.D.M.K Flex Banner
A.I.A.D.M.K Flex Banner ( கே.அருண் )

சென்னையில் அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் விழுந்து இளம் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், இதையும் மீறி ஆளும் கட்சியினர் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பேனர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுவருகின்றன.

A.I.A.D.M.K Flex Banner
A.I.A.D.M.K Flex Banner

இன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலந்துகொள்வதற்காகத் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்துள்ளார். இவரை வரவேற்று ஆளும் கட்சியினர் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் ராட்சத ஃப்ளெக்ஸ் பேனர்களை வைத்தனர். ஊட்டி குன்னூர் சாலை, சேரிங்கிராஸ், ஆட்சியர் அலுவலக முன்புறம், ஊட்டி தொட்டபெட்டா சாலை என எல்லா இடங்களிலும் சாலைகளில் அதிகளவு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் சாலையை மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டன. இதனால் நேற்று உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலரும் புகார் தெரிவித்தனர். எனினும், மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையினரோ கண்டுகொள்ளவில்லை. இரவு மக்களின் எதிர்ப்பு வலுக்க காவல்துறையினர் உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். இதனால் இரவோடு இரவாக அனைத்து பேனர்களையும் அகற்றினர். பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டதை உறுதி செய்த பின்னரே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொட்டபெட்டா சாலை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்சிகளில் பங்கேற்றார்.

Ooty
Ooty

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ``அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வரவேற்று நகரில் பல இடங்களில் பேனர்களை வைத்தனர். உடனடியாக அனைத்து பேனர்களையும் அகற்ற சொல்லுங்கள். இல்லாவிட்டால் நீங்களே அகற்றுங்கள் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் கட்சியினரை அழைத்து இரவு 9 முதல் 1 மணிவரை அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன” என்றனர்.