Published:Updated:

`இரவில் ஆலோசனை; ஓ.பி.எஸ்ஸின் மாஸ்டர் பிளான்?'- மறைமுகத்தேர்தலை தேனி அ.தி.மு.க புறக்கணித்த பின்னணி

நேற்று தேனி வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், பண்ணைவீட்டில் இரவில் ஆலோசனை நடத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த தி.மு.க கவுன்சிலர்
ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த தி.மு.க கவுன்சிலர்

தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் மூன்று ஒன்றியங்களுக்குத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் மறைமுகத் தேர்தலுக்கு வராததே இதற்கு காரணம்.

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த தி.மு.க கவுன்சிலர்
ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த தி.மு.க கவுன்சிலர்

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, கடமலை மயிலை, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய எட்டு ஒன்றியங்களுக்கு நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், சின்னமனூர், பெரியகுளம், தேனி ஆகிய மூன்று ஒன்றியங்களில் எதிர்க்கட்சியான தி.மு.க பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றின. கடமலை மயிலை ஒன்றியத்தில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க சம பலத்துடன் இருந்தன.

`ரூ.10 லட்சம் பேரம்... அ.ம.மு.க ஆதரவு யாருக்கு?' - தேனி ஒன்றியங்களைக் கைப்பற்றுமா அ.தி.மு.க?

இந்நிலையில், பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் 8வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் செல்வத்தை தனது பக்கம் இழுத்தது அ.தி.மு.க. இதே போல, சின்னமனூர் ஒன்றியம் பொட்டிபுரம் 1-வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தியையும் தனது பக்கம் இழுத்தது அ.தி.மு.க. இதனால், இரு ஒன்றியங்களிலும், அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சம பலத்துடன் இருந்தனர்.

இன்று நடைபெற்ற ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில், தேனி ஒன்றியத்தில் தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்கள் அ.தி.மு.க பக்கம் சாயாமல் இருந்ததால், வெற்றிபெற்றது. 12வது வார்டு தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சக்ரவர்த்தி தேனி ஒன்றியக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு கட்சிகளும் சம பலத்துடன் இருந்த சின்னமனூர், கடமலை மயிலை மற்றும் பெரியகுளத்தில் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் மறைமுகத் தேர்தலைப் புறக்கணித்தனர்.

தி.மு.க-விலிருந்து அ.தி.மு.க பக்கம் சாய்ந்த கவுன்சிலர்களும் இதில் அடக்கம். தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். மறைமுகத் தேர்தல் நடத்த பெரும்பான்மை இல்லாத காரணத்தால், இறுதியாக மூன்று ஒன்றியங்களிலும் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தேனி ஒன்றியத்தைக் கைப்பற்றிய தி.மு.க
தேனி ஒன்றியத்தைக் கைப்பற்றிய தி.மு.க

தி.மு.க கவுன்சிலர்களை விலைக்கு வாங்கியதாகக் கூறி, அ.தி.மு.க-விற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி, சின்னமனூரில், தேனி தி.மு.க பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் போராட்டம் நடத்தினார்.

நேற்று தேனி வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், பண்ணை வீட்டில் இரவு ஆலோசனை நடத்தினார். அதில், மூன்று ஒன்றியங்களில் தேர்தல் புறக்கணிக்கலாம் எனத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி புறக்கணித்தால் மறைமுகத்தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற மாஸ்டர் பிளானை போட்டுக் கொடுத்தது ஓ.பி.எஸ் என்கின்றனர் அவரது நெருங்கிய சகாக்கள்.

தங்களது கவுன்சிலர்களைப் பாதுகாக்குமா தேனி தி.மு.க என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய ஒன்றியங்களை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது. கம்பம் ஒன்றியத்தை அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ஜ.க கைப்பற்றியுள்ளது.

`விலைபோகும் ஒன்றியக் கவுன்சிலர்கள்!' - பெரும்பான்மை கிடைத்தும் தேனி தி.மு.க திணறல்