Published:Updated:

புதுக்கோட்டை: `உங்க பேரு லிஸ்ட்லயே இல்லை!’ -முதல்வரைப் பார்க்க அதிமுக எம்.எல்.ஏ-க்கு அனுமதி மறுப்பு

அ.தி.மு.க எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
அ.தி.மு.க எம்.எல்.ஏ ரத்தினசபாபதி

`விமான நிலையத்துக்குள் உள்ளே போகக் கூடாதுன்னா, எல்லாரையும் போக விடாம தடுத்திருக்கணும். உங்க பேரு லிஸ்ட்லயே இல்லைனு சொல்லி, என்னை மட்டும் அனுமதிக்க மறுத்துட்டாங்க’ - அ.தி.மு.க எம்.எல்.ஏ ரத்தினசபாபதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விராலிமலையில் ஜல்லிக்கட்டுக் காளை, அதை அடக்கும் வீரர் சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். முன்னதாக, காலையில் முதலமைச்சர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து இறங்கியபோது, அவரை அமைச்சர்கள், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க தொண்டர்கள் எனப் பலரும் வரவேற்றனர். இந்தநிலையில், முதலமைச்சரை வரவேற்கச் சென்ற அறந்தாங்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

ரத்தினசபாபதி
ரத்தினசபாபதி

உள்ளே விடுவோர் பட்டியலில் ரத்தினசபாபதி பெயர் இல்லை என்று கூறி வாசலிலேயே நிறுத்தப்பட்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி வாசலிலேயே காத்திருந்திருக்கிறார். அப்போது எம்.எல்.ஏ-வுக்கும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்குமிடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல், மீண்டும் மாலையிலும் முதலமைச்சரை வழியனுப்ப விமான நிலையத்துக்குள் செல்ல முயன்ற ரத்தினசபாபதிக்குப் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தும், முதலமைச்சரைப் பார்த்து வழியனுப்ப முடியவில்லையே எனக் கொதிப்படைந்து போயிருக்கிறார் அவர்.

இது பற்றி அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதிடம் பேசினோம். ``விமான நிலையத்துக்கு உள்ளே நுழைவுவாயிலிலேயே காரை நிறுத்திட்டாங்க. அங்கேருந்து ரொம்ப தூரம் நடந்து சென்று உள்ளே செல்ல முயன்றபோது, உள்ளே விடுறதுக்கு மறுத்துட்டாங்க. விமான நிலையத்துக்குள் போகக் கூடாதுன்னா, எல்லாரையும் போக விடாம தடுத்திருக்கணும். என்னைத் தவிர மற்ற எம்.எல்.ஏ-க்கள் எல்லாரும் போயிட்டாங்க. எனக்குக் கீழே உள்ள பொறுப்பில் இருக்குறவங்களும் போயிட்டு வந்துட்டாங்க. `உங்க பேரு லிஸ்ட்லயே இல்லை’ன்னு சொல்லி, என்னை மட்டும் அனுமதிக்க மறுத்துட்டாங்க.

ரத்தினசபாபதி
ரத்தினசபாபதி

ஒரு மணி நேரம் காத்திருந்தோம். கடைசியாக முதலமைச்சரே வெளியே வந்துட்டாரு. எங்க ஊரில் திட்டங்களைத் தொடங்க வந்த முதலமைச்சரை வரவேற்று, நிகழ்வுகளிலெல்லாம் கூடவேதான் நின்றேன். நான் தடுக்கப்பட்டது குறித்து காலையிலேயே புகார் வாசிக்கிறதா என்று அவரிடம் சொல்லலை. இந்த நிலையில்தான், முதலமைச்சரை வழியனுப்பி நன்றி சொல்ல மாலை விமான நிலையத்துக்குள் செல்ல முயன்றபோதும் தடுத்து நிறுத்திட்டாங்க. இந்த முறை என்னோடு சேர்த்து கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகத்தையும் நிறுத்திட்டாங்க. ஏன் என்னை அனுமதிக்கலைனு தெரியலை. இது பற்றி முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். விரைவில் இது குறித்துப் பேசுவேன்" என்றார்.

`தமிழகத்தின் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு