அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், தேர்தல் பணிக்குழுத் தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறவிருக்கிற இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி வரப் போகிறது என்பதை தமிழக அளவிலும், இந்திய அளவிலும் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தத் தேர்தல் முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையப் போகிறது.
குறிப்பாக இந்தத் தேர்தல் களம், திண்டுக்கல்லில் முதன்முதலாக போட்டியிட்டு அ.தி.மு.க பெற்ற வெற்றியைப்போல சரித்திரம் படைக்கும்.
பிரசாரத்துக்காகச் செல்லும் இடங்களிலும், சந்திக்கும் மக்கள் மத்தியிலும் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தல் தமிழக அளவில் பெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதற்கான மையப்புள்ளியாக இருக்கும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தனித்து போட்டியிடுகிறோம். அ.தி.மு.க-வினர் பல்வேறு அணிகளாகப் பிரிந்து கிடப்பதாகக் கூறுகிறார்கள். 98.5 சதவிகிதம் அ.தி.மு.க-வினர் ஒருங்கிணைந்து இந்தத் தேர்தலைச் சந்திப்பதால் இந்த வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
களத்திலே தீவிரமாக இறங்கி இருக்கிறோம். இந்த முறை இடைத்தேர்தல் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையும்.

இந்தக் களத்தில் எங்களின் வேகத்தையும், விவேகத்தையும் நீங்களே காணப் போகிறீர்கள். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எங்கள் தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள். எந்தத் தேர்தலை எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதை அறிந்தவர்கள் அ.தி.மு.க-வினர். அதனால் திட்டமிட்டு வெற்றியை நோக்கி அமைதியான முறையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும். இன்னும் 2, 3 தினங்கள் பொறுத்திருங்கள்.
சிறுபான்மையினரின் நலனுக்காக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அதிக அளவிலான சலுகைகள் செய்து தரப்பட்டிருக்கிறது. ஹஜ் யாத்திரைக்கு உதவித்தொகை, நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்குதல் போன்ற பல்வேறு சலுகைகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கியிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை சிறுபான்மையின மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு வந்திருப்பதால் அவர்களின் வாக்குகள் எங்களுக்குக் கட்டாயம் கிடைக்கும்” என்றார்.