தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், நாகை மாவட்டத்தில், அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பா.ஜ.க கூட்டணியில் இல்லாததால், அ.தி.மு.க மாபெரும் வெற்றிபெறும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை கொள்கையைத்தான் முக்கியமானதாகக் கருதுகிறோம்.

எங்களுடைய கொள்கை வேறு... பா.ஜ.க-வின் கொள்கை வேறு. அந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்த தேர்தலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை நாங்கள் இழந்திருந்தாலும்கூட, அது நன்மையை பயக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் சிறுபான்மையின மக்களுடைய மனதிலே, எண்ணத்திலே தோன்றியபடி, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விடுபட்டதன் காரணமாக அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும்" எனத் தெரிவித்தார்.
