Published:Updated:

திமுக-வுக்கு மாற்று யார்? - அதிமுக Vs பாஜக Vs பாமக... தொடங்கிய யுத்தம்!

அ.தி.மு.க கூட்டணி

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிதான் வெற்றிபெற்று அரியணை ஏறும் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டன.

திமுக-வுக்கு மாற்று யார்? - அதிமுக Vs பாஜக Vs பாமக... தொடங்கிய யுத்தம்!

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிதான் வெற்றிபெற்று அரியணை ஏறும் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டன.

Published:Updated:
அ.தி.மு.க கூட்டணி

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறியது தி.மு.க. காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் தனது வெற்றியை தி.மு.க பதிவுசெய்தது. இதனால், மொத்த அமைச்சரவையையும் தி.மு.க-வினரே அலங்கரித்துவருகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவு செய்திருக்கும் நிலையில், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிதான் வெற்றிபெற்று அரியணை ஏறும், தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள்தான் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டன.

திமுக அமைச்சரவை
திமுக அமைச்சரவை

10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருந்த பா.ம.க., பா.ஜ.க ஆகிய கட்சிகளே அடுத்த தேர்தல் குறித்து வெளிப்படையாகப் பேசுவதால் சட்டமன்றத்துக்கான தேர்தல் அனல் தற்போதே வீசத் தொடங்கிவிட்டது. குறிப்பாக மூன்று கட்சிகளுமே தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள்தான் என்று அறைகூவல் விடுவதுதான் கூடுதல் கவனம் பெறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது அ.தி.மு.க-வுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அரசியல் களத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக, 2019-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் மினி சட்டமன்றத் தேர்தலாகக் கருதப்பட்ட 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே மாதமும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க வென்றாலும், ஒன்பது தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்த வெற்றிக்கு வட மாவட்டங்களில் பா.ம.க-வுக்கு இருந்த வாக்குவங்கி கைகொடுத்தது.

ஜெயலலிதா மோடி
ஜெயலலிதா மோடி

முன்னதாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்டது. பா.ம.க., பா.ஜ.க ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. அப்போது, ஜெயலலிதா பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்ச்சித்து பிரசாரம் செய்தார். ஆனால், இடைத்தேர்தலில் அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைத் தக்கவைத்தது அ.தி.மு.க. இந்தக் கூட்டணி 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், 2021-ம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் நீடித்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணியில் முறிவு ஏற்பட்டு, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில், தி.மு.க பெருவாரியான வாக்குகளைப் பெற்று நகர்ப்புறங்களை முழுமையாகக் கைப்பற்றியது. அதேபோல, பா.ஜ.க-வும் சில இடங்களில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால், தமிழக பா.ஜ.க-வின் டோன் மாறியது. `சட்டமன்றத்தில் நாங்கள்தான் சரியாக எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம்’ என்று பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பொது மேடையில் பேசியிருந்தார். அதேபோல, பா.ஜ.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிவருகின்றனர். இதை அ.தி.முக ரசிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்
எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்

இது குறித்து சமீபத்தில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியிடம் அ.தி.மு.க மூத்த தலைவர்கள் புகார் அளித்ததாகத் தகவல் வெளியானது. மேலும், பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக மூத்த தலைவரான பொன்னையன் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் கருத்தை பா.ஜ.க துணைத் தலைவர் வி.பி.துரைசாமியும் அண்மையில் பேசினார். இதற்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் 150 இடங்களை பா.ஜ.க கைப்பற்றும் என்று அண்ணாமலை பேசியுள்ளார். இதனால், பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்

இதற்கிடையே, வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, பா.ம.க ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தொடர்ந்து பேசிவருகிறார். இதற்கு அச்சாரமாக இளைஞர் அணித் தலைவரான அன்புமணி, கட்சியின் தலைவராக முடிசூடினார். தேர்தலில் தனித்துப் போட்டி என்று முடிவு செய்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி, ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துவருகிறார். இதுவரை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட வட தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

கூட்டணிக் கட்சிகளின் இந்தச் செயல்பாடு அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டோம். " பா.ம.க., பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் தற்போது எங்களுடன் கூட்டணியில் இல்லை. நட்புறவு அடிப்படையில் ராஜ்ய சபா தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவோம், அதிக இடங்களை வெல்லுவோம் என்று அவர்கள் கூறுவது அவர்களின் கருத்து. இது ஜனநாயக நாடு. தங்களின் கருத்துகளைச் சொல்ல இங்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் குறித்துப் பேசக் கூடாது என்று நாங்கள் கூற முடியாது. லோக் சபா தேர்தல் நெருங்கும்போது, கூட்டணி குறித்துப் பேசப்படும். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமையும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார் உறுதியான குரலில்.

தற்போது தனித்துப் போட்டி என்று கூறும் பா.ஜ.க., பா.ம.க-வின் நிலைப்பாடு லோக் சபா தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியும் என்றாலும், தற்போதே கூட்டணி அரசியலில் தொடங்கிவிட்டது யுத்தம்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism