Published:Updated:

`ரஜினிக்கு இணை அஜித்தான்; அது `மலை’ இது `தல’ - ராஜேந்திர பாலாஜி கலகல!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

``நடிகர் ரஜினிக்கு இணையான நடிகர் எனத் தற்போதைய நடிகர்கள் யாரும் கிடையாது. ரஜினிக்கு இணையாகச் சொல்லணும்னா நடிகர் அஜித் ஒரு ஆளுதான். அது `மலை’, இது `தல’ ” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைப் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். இதில், குத்துச்சண்டைப் போட்டியைத் தொடங்கி வைத்தபோது 10 நிமிடம் வரை ஆர்வத்துடன் பள்ளி மாணவருடன் குத்துச்சண்டை போட்டார். சிரித்தபடியே இடம் மாறி மாறி விளையாடியவர், “ஏய் தம்பி… குத்துடா... வாடா... வா...” என்று சொன்னபடியே குத்துச்சண்டை போட்டார்.

குத்துச்சண்டையில்  கே.டி.ஆர்
குத்துச்சண்டையில் கே.டி.ஆர்

இறுதியாக, ``ஏம்பா குத்தவே மாட்டேங்குற” எனச் சொன்னபடி அந்த மாணவனின் தோளைத் தட்டிக் கொடுத்தபடியே நகர்ந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழக பட்ஜெட்டானது அ.தி.மு.க அரசின் இறுதிப் பட்ஜெட் அல்ல. அடுத்துவரும் தேர்தலில் அ.தி.மு.க-வே ஆட்சியைப் பிடிக்கும். அந்த வகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொன்னதுபோல இது இறுதி பட்ஜெட் அல்ல. அடுத்துவரும் ஆட்சியின் அறிமுக பட்ஜெட்.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் 16 மணி நேர கடுமையான மின்வெட்டு நிலவியது. அ.தி.மு.க ஆட்சியில் அதுபோன்று எதுவுமில்லை. பொதுமக்களைப் பாதிக்காத வகையில் இயற்றப்பட்ட முத்தான பட்ஜெட்தான் தற்போதைய பட்ஜெட். அவர் எதையாவது கருத்து சொல்லிக்கொண்டே இருப்பார் அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர்கள் சந்திப்பு

இவர் இப்படியென்றால், ``தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்ததால்தான் அவர்களது ஆட்சிக்காலத்தின் பட்ஜெட்களானது பற்றாக்குறையான பட்ஜெட்” என நடிகர் கமல்ஹாசன் வேற ஒருபக்கம் கருத்து சொல்லியிருக்கார்.

அவர் முதலில் ஒரு ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று, அந்த ஊராட்சிக்கான் பட்ஜெட்டை வெளியிட்டு திறமையாகச் செயல்பட்ட பிறகு, மாநில அரசுகளின் பட்ஜெட்டைப் பற்றி பேசட்டும். ஒரு நாட்டுக்கு இணையான மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது” என்றவரிடம், இறுதியாக, ``நடிகர் ரஜினிக்கு இணையாக நடிகர் விஜய் வளர்ந்து வரும் காரணத்தால் விஜய்யை அச்சுறுத்தும் விதமாகவும் இந்த வருமான வரித்துறை ரெய்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறதே?” எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ``வருமான வரித்துறை என்பது தனி அமைப்பு. அரசியல் தலையீட்டால் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள் என்ற கருத்து தவறனாது.

குத்துச்சண்டையில் கே.டி.ஆர்
குத்துச்சண்டையில் கே.டி.ஆர்

இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. நடிகர் ரஜினிக்கு இணையான நடிகர் எனத் தற்போதைய நடிகர்கள் யாரும் கிடையாது. ரஜினிக்கு இணையாகச் சொல்லணும்னா நடிகர் அஜித் ஒரு ஆளுதான். அவர்கள் ரெண்டு பேரும்தான் ஜல்லிக்கட்டு காளைகள்போல. அது `மலை’, இது `தல’. அவ்வளவுதான்” எனச் சொல்லி சிரித்தபடியே கிளம்பினார்.

பின் செல்ல