Published:Updated:

`இனி அழகிரி அண்ணன், அறிவாலயம் போகலாம்; கேள்வி கேட்கலாம்!' - தி.மு.க உறுப்பினராக்கிய உடன்பிறப்பு

அழகிரியின் உறுப்பினர் அட்டைக்காக கபிலன் அனுப்பிய புகைப்படம்
அழகிரியின் உறுப்பினர் அட்டைக்காக கபிலன் அனுப்பிய புகைப்படம்

`அழகிரி அண்ணனை வரக் கூடாதுன்னு சொன்னா, இவங்க எட்டு நாள்ல ரெண்டு லட்சம் உறுப்பினர் சேர்த்ததா சொல்லுறாங்க இல்லியா... அவங்க சேர்த்த ஒரு உறுப்பினரும் அறிவாலயத்துக்கு போவக் கூடாது. அவங்களும் போலினு அர்த்தம்.’

`எல்லோரும் நம்முடன்’ என்ற தலைப்பில் தி.மு.க இப்போது இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்திக்கொண்டிருக்கிறது. மூன்று நாள்களில் ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை நடந்திருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி அறிவித்திருந்தார். இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மு.க.அழகிரி ஆகியோருக்கும் உறுப்பினர் அட்டை பெற்று, அதைச் சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர் சிலர்.

``ட்ரம்புக்கு உறுப்பினர் அட்டை வாங்கினது யாருன்னு தெரியாது. அழகிரி அண்ணனுக்கு நான்தான் உறுப்பினர் அட்டை வாங்கினேன்’’ என்று சொல்கிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அழகிரியின் தீவிர ஆதரவாளர் கபிலன். இது பற்றி கபிலனிடம் பேசினோம். ``நான் என் அப்பா காலத்திலிருந்தே தி.மு.க கட்சிக்காரன். முன்பு ஆசாரிப்பள்ளம் பேரூர் தி.மு.க செயலாளராக இருந்தேன். அழகிரி அண்ணனோட தீவிர விசுவாசியாக இருக்கேன். அண்ணன் அழகிரியைப் பற்றி ஊடக விவாதங்களில் பேசினால், அவர் தி.மு.க உறுப்பினரே கிடையாதுனு பதில் சொல்லுறாங்க.

மு.க.அழகிரி-யின் தி.மு.க உறுப்பினர் அட்டை
மு.க.அழகிரி-யின் தி.மு.க உறுப்பினர் அட்டை

`ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார். என்னை தி.மு.க உறுப்பினராகச் சேருங்கள்’ என அழகிரி கேட்டும், அவரை உறுப்பினராகச் சேர்க்கலை. அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணனையே தி.மு.க-வுல சேர்க்கிறாங்க. ஆனா, கூடப் பொறந்த அண்ணனைக் கட்சியில ஏன் சேர்க்கல... அதனால இப்போ பிரசாந்த் கிஷோர் கொண்டுவந்த இணையவழி உறுப்பினர் சேர்க்கை திட்டம் மூலமா அழகிரி அண்ணனை நான்தான் உறுப்பினராகச் சேர்த்தேன். `பெயர் மு.க.அழகிரி, தந்தை பெயர் மு.கருணாநிதி’ என்பது தொடங்கி, முகவரினு முழு விவரத்தையும் நான் பதிவேற்றம் செய்தேன்.

அழகிரி அசைன்மென்ட், தடைபோடும் தமிழருவி, `ஆப்சென்ட்' விஜயபாஸ்கர்... கழுகார் அரசியல் அப்டேட்ஸ்!

போட்டோவுல அழகிரியுடன் நான் இருக்கும் புகைப்படத்தை அனுப்பினேன். உறுப்பினர் அட்டை கிடைச்சாச்சு. அண்ணன் தி.மு.க உறுப்பினர் ஆகணும்கிற எங்க ஆசை நிறைவேறிடுச்சு. இனி அவரை உறுப்பினர் இல்லைன்னு யாரும் சொல்ல முடியாது. உறுப்பினர் ஆகிட்டதால இனி அழகிரி அண்ணன், அண்ணா அறிவாலயத்துக்குப் போலாம். டிரஸ்ட்ல இருக்குற கணக்குப் பற்றியும் கேட்கலாம். எல்லாக் கேள்வியும் கேட்கலாம்.

கபிலன்
கபிலன்

இனி அழகிரி அண்ணனை அறிவாலயத்துக்கு வரக் கூடாதுன்னு யாரும் சொல்ல முடியாது இல்லியா... அழகிரி அண்ணனை வரக் கூடாதுன்னு சொன்னா, இவங்க எட்டு நாள்ல ரெண்டு லட்சம் உறுப்பினர் சேர்த்ததாச் சொல்லுறாங்க இல்லியா... அவங்க சேர்த்த ஒரு உறுப்பினரும் அறிவாலயத்துக்குப் போகக் கூடாது. அவங்களும் போலினு அர்த்தம். அந்த ரெண்டு லட்சம் பேரும் தி.மு.க உறுப்பினர்னா, அண்ணன் அழகிரியும் தி.மு.க உறுப்பினர்தான். அண்ணன் உறுப்பினர் இல்லைன்னு சொல்லி எந்த கோர்ட்டுக்குப் போனாலும் நிக்காது" என சீரியஸாகவே பேசுகிறார் கபிலன்.

அடுத்த கட்டுரைக்கு