Published:Updated:

கோவா: 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்குத் தாவ முடிவு?! - ரூ.40 கோடி பேரம் பேசுவதாகப் புகார்

கோவா காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் பாஜக-வுக்குத் தாவ முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கோவா: 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்குத் தாவ முடிவு?! - ரூ.40 கோடி பேரம் பேசுவதாகப் புகார்

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் பாஜக-வுக்குத் தாவ முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
கோவா காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்

கோவா அரசியலில் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றாகவே இருந்துவருகிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இதுவரை எம்.எல்.ஏ-க்கள் யாரும் கட்சி மாறாமல் இருந்தனர். தற்போது அதற்குப் பிள்ளையார்சுழி போட்டு காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துவைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட திகம்பர் காமத், எதிர்க்கட்சித் தலைவர் மிச்சேல் லோபோ ஆகியோர் தலைமையில் ஆறு எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்குச் செல்லவிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கூட்டப்பட்டது. காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டு ராவ் முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மிச்சேல் லோபோ, திகம்பர் காமத் ஆகியோர் உட்பட ஆறு எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை. லோபோவும் திகம்பரும் சேர்ந்து கட்சியை உடைக்க சதிசெய்வதாக குண்டு ராவ் குற்றம்சாட்டியிருக்கிறார். 11 எம்.எல்.ஏ-க்களில் ஐந்து பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கிரிஷ்
காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கிரிஷ்

இதையடுத்து `லோபோ, திகம்பர் காமத் ஆகியோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது. அதோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் லோபோவை காங்கிரஸ் நீக்கியிருக்கிறது. இதில் லோபோ சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை பாஜக-வில் இருந்தார். தேர்தலையொட்டியே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நேற்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தைச் சந்தித்துப் பேசினர். அவர்கள் பாஜக-வில் சேரத் திட்டமிட்டிருக்கின்றனரா என்று முதல்வர் சாவந்த்திடம் கேட்டதற்கு, ``தொகுதிப் பணிகள் குறித்து என்னிடம் பேச தினமும் எம்.எல்.ஏ-க்கள் வருகின்றனர். அவர்கள் பாஜக-வில் சேர வருகின்றனரா என்று எனக்கு எப்படித் தெரியும்?” என்று மழுப்பலாக பதிலளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2019-ம் ஆண்டும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வில் சேர்ந்தனர். தற்போதும் தேர்தலில் வெற்றிபெற்ற சில மாதங்களிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்குத் தாவ இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்களை பாஜக தலா 40 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிரிஷ் சோதான்கர் கூறுகையில், ``காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வில் சேர ரூ.40 கோடி பேரம் பேசப்படுகிறது. தொழிலதிபர்களும், நிலக்கரி மாஃபியாக்களும் எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டு பேரம் பேசுகின்றனர்” என்று தெரிவித்தார்.

வாக்களித்த பிறகு முதல்வர் பிரமோத் சாவந்த்
வாக்களித்த பிறகு முதல்வர் பிரமோத் சாவந்த்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மாநில பாஜக தலைவர் சதானந்த் கூறுகையில், ``காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. கோவா காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்துக்கு பாஜக எந்தவிதத்திலும் காரணம் இல்லை” என்று தெரிவித்தார். அதேசமயம் பாஜக-வில் சேரத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் மிச்சேல் லோபோ இது குறித்து கூறுகையில், ``பாஜக-வில் சேரப்போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. இந்த வதந்தி திட்டமிட்டுப் பரப்பிவிடப்படுகிறது. கட்சி மாறப்போவதாக நான் சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் கூறுகையில், ``பாஜக திட்டமிட்டு இது போன்ற வதந்தியைப் பரப்பிவருகிறது. 11 பேரில் 8 பேர் எங்களுடன் இருக்கின்றனர்” என்றார். சமீபத்தில் கோவாவுக்கு வந்திருந்த பாஜக தேசியச் செயலாளர், `கோவாவில் பாஜக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 20-லிருந்து 30-ஆக அதிகரிக்கும்’ என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலை பேசும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது என்கிறார்கள்.