Published:Updated:

`தி.மு.க-வுக்குச் செல்கிறேனா?' மனம் திறக்கும் மகேந்திரன்!

மகேந்திரன்
மகேந்திரன்

``அரசியலில் கமலை வைத்துத்தான் நான் வெளியே தெரிந்தேன். கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ கட்சித் தலைவரை வைத்துத்தானே மக்களிடம் செல்கிறோம்... இதுதான் இயல்பு. இதில் கமலுக்கு ஏன் இந்த அளவு பொறாமை என்பது தெரியவில்லை.” - மகேந்திரன்

கமலுடனான கருத்து வேறுபாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் தி.மு.க-வுக்குச் செல்லவிருப்பதாக வரும் தகவல்களைவைத்து அவரிடம் பேசினோம்...

``நீங்கள் வெளியேறக் காரணமாக நீங்களே சுட்டிக்காட்டிய, சங்கையா சொல்யூஷன்ஸ் நிறுவனம் எப்படி உருவானது... அவர்கள் செய்தவையெல்லாம் கமலுக்குத் தெரியுமா?’’

``முதலில் 2019 மார்ச்சில் ஐபேக் எங்களிடம் ஒப்பந்தம் போட்டது. செப்டம்பர் மாதம் வரை அவர்கள் பணியாற்றினார்கள். அதன் பிறகு கமல்தான், ஐபேக் தேவையில்லை, உள்ளுக்குள்ளேயே ஒரு நிறுவனம் செயல்படும் என அந்த இருவரையும் கமல்தான் கூட்டிவந்தார். நாங்களும் முதலில் கமலுக்குத் தெரியாமல் இவர்கள் செயல்படுகிறார்கள் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், ‘ஐ நோ எவ்ரிதிங்’ அதாவது எனக்கு நடக்கும் எல்லாமே தெரியும் என்றார் கமல். அதன் பிறகும் தேர்தலின்போது வெளியேறினால், மக்களிடம் கட்சிக்குக் கெட்டபெயர் வந்துவிடும் என்பதால் பொறுத்துக்கொண்டு, தேர்தல் முடிந்ததும் வெளியேறிவிட்டேன்.’’

மகேந்திரன்- கமல்
மகேந்திரன்- கமல்

``சங்கையாவுக்கு எவ்வளவு தொகை கட்சியிலிருந்து சென்றிருக்கும்?’’

``அதற்கெல்லாம் கணக்கேயில்லை. பல கோடிகளைத் தாண்டியிருக்கும். சாதாரண ஓட்டலுக்குப் போனால்கூட சாப்பாடு, தேநீர் எனத் தனித்தனியாக குறிப்பிட்டு பில் போட்டுக்கொடுப்பார்கள். ஆனால், சங்கையாவோ இந்த மாதத்துக்கான செலவு என்று மட்டுமே சொல்வார்கள். அதை நாம் கொடுத்துவிட வேண்டும்.’’

மகேந்திரன்
மகேந்திரன்

``தி.மு.க-வுக்கு கொங்குப் பகுதியில் சரியான ஆட்கள் இல்லாததால், உங்களை அழைத்தனர். அதனால்தான் நாடகம் ஆடிவிட்டு விலகியதாகச் சொல்கிறார்களே?’’

``தி.மு.க-வுக்குச் செல்ல வேண்டும் என்றால் எது சரியான தருணம்... சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்றால்தானே சீட் வாங்கி, போட்டியிட்டு ஜெயித்திருக்க முடியும்? ஆனால், நான் விலகியதோ தேர்தலுக்குப் பின்னர்தானே! குற்றம் சொல்வதற்கு அடிப்படை லாஜிக் வேண்டாமா? இப்போது மட்டுமல்ல, பல காலமாகவே தி.மு.க-வுக்கு கொங்குப் பகுதியில் ஆட்களில்லை. நான் போக வேண்டுமென்று நினைத்திருந்தால் எப்போதோ சென்றிருப்பேன். கமல் கட்சியை மறுநிர்மாணம் செய்வதற்காகப் பலரையும் ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார். முதலில் கமல் தனது மூளையை மறுநிர்மாணம் செய்ய வேண்டும். சரியான நபர்களின் ஆலோசனைகளைப் பெற்று கட்சியை நடத்த வேண்டும். நான் விலகியதால், கட்சி ஒழுங்கான நிலைக்கு மாறுமானால் எனக்கு மகிழ்ச்சியே.’’

``ஒருவேளை சிங்காநல்லூரில் ஜெயித்திருந்தால் வெளியேறியிருப்பீர்களா?’’

``அப்படி வெற்றிபெற்றிருந்தால் நான் சொன்ன கருத்துகளை உரக்கச் சொல்லியிருப்பேன். கமலின் காதுகளிலும் ஆழமாக விழுந்திருக்கும். அதன் மூலம் மாற்றமும் நிகழ்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் நான் வெளியேறியிருக்க வாய்ப்பில்லை.’’

கமல் , மகேந்திரன்
கமல் , மகேந்திரன்

``இவ்வளவு பேசுகிறீர்களே, கமல் இல்லையென்றால் நீங்கள் யாரென்றே தெரிந்திருக்காதே?’’

``உண்மைதான். அரசியலில் கமலை வைத்துத்தான் நான் வெளியே தெரிந்தேன். கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ கட்சித் தலைவரை வைத்துத்தானே மக்களிடம் செல்கிறோம்... இதுதான் இயல்பு. இதில் கமலுக்கு ஏன் இந்த அளவு பொறாமை என்பது தெரியவில்லை.’’

கமல்
கமல்

``கமலுக்கு நீங்கள் சொல்லும் செய்தி?’’

``எனது கருத்து சரியென்று எப்போதாவது உணர்ந்தீர்களானால், எனது கோரிக்கையை அமல்படுத்துங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்.’’

அடுத்த கட்டுரைக்கு