Election bannerElection banner
Published:Updated:

5-ம் தேதி வரை `கெடு’ கொடுத்த அமித் ஷா - அச்சத்தில் அ.தி.மு.க!

அமித்ஷா
அமித்ஷா

அமித் ஷா பன்னீரை  முதலில் தனியாக அழைத்து பேசியிருக்கிறார். பன்னீர் சொன்ன விசயம் அமித் ஷாவுக்கு சாதகமாக இருந்துள்ளது.

``அ.ம.மு.க விவகாரத்தில் நமக்குச் சாதகமான முடிவை எடப்பாடி எடுக்கும் வரை கூட்டணியை இறுதி செய்ய வேண்டாம்” என்று அமித் ஷா, தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். நள்ளிரவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்படி ஓர் உத்தரவு டெல்லியிலிருந்து தமிழக பா.ஜ.க-வுக்கு வந்திருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. பா.ம.க-வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை ஒதிக்கியிருக்கிறது அ.தி.மு.க தலைமை. பா.ஜ.க-வுடன் ஏற்கெனவே ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையாக இது இருக்காது, அ.ம.மு.க-அ.தி.மு.க இணைப்பு குறித்தே இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பொருளாக விவாதிக்கப்படும் என்பதை எடப்பாடிக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டனர் பா.ஜ.க தரப்பினர். அதற்கு தகுந்தாற்போல சில ஃபைல்களையும் கையோடு எடுத்துச் சென்றிருக்கிறார் எடப்பாடி.

ஆனால். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் இந்த முறை இணைப்பை எப்படியும் சாத்தியப்படுத்திவிட வேண்டும் என்கிற முடிவோடு சென்றிருந்தார். அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரோடு பா.ஜ.க-வின் அகில இந்திய அமைப்பாளர் பி.எல்.சந்தோஷ் உடன் இருந்திருக்கிறார். இந்தச் சந்திப்பு எடப்பாடிக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துவிட்டது என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். பா.ஜ.க-வுடன் தொகுதியை இறுதி செய்ய முடியாமல் இன்னும் இரண்டு நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை இப்போது அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் எடப்பாடி - அமித் ஷா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் போனதே காரணம் என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - 
அமித் ஷா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா - ஓ.பன்னீர்செல்வம்

இது குறித்து பா.ஜ.க தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``பா.ஜ.க இந்தத் தேர்தலில் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டாலும், வெற்றி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இப்போதிருக்கும் அ.தி.மு.க-வை வைத்துக்கொண்டு அப்படி ஒரு வெற்றியைப் பெற முடியாது என்கிற ரிப்போர்ட் மத்திய அரசுக்குச் சென்றிருக்கிறது. அதனாலேயே தினகரன் தரப்பையும், சசிகலாவையும் அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவர பல முயற்சிகளை எடுத்துவந்தது.

ஆனால், எடப்பாடி தரப்பு இதற்கு ஆரம்பம் முதலே பிடிகொடுக்கவில்லை. பிரதமர் தமிழகம் வந்தபோது இணைப்புக்குச் சாத்தியமில்லை என்பதை எடப்பாடி அவருக்கு உணர்த்திவிட்டார். ஆனால், அமித் ஷாவோ இணைப்பு நடந்தால் மட்டுமே அது பா.ஜ.க-வுக்கும் சாதகம் என்று நினைக்கிறார். இதனாலேயே அன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, இரவு எடப்பாடி மற்றும் பன்னீரை வரச்சொல்லி நேரம் கொடுத்தார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இணைப்பு குறித்து பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடுப்பான அமித் ஷா பன்னீரை முதலில் தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார். பன்னீர் சொன்ன விஷயம் அமித் ஷாவுக்குச் சாதகமாக இருந்திருக்கிறது. ``இரண்டு கட்சிகளும் இணைந்தால் மட்டும் தமிழகத்தில் அ.தி.மு.க-வின் வாக்குவங்கியைத் தக்கவைக்க முடியும். இணைப்பு இல்லை என்றால்கூடப் பரவாயில்லை, அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் கொண்டுவந்து அவர்களையும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடவைக்க வேண்டும்” என்று பன்னீர் யோசனை சொல்லியிருக்கிறார். இதன் பிறகு எடப்பாடியைத் தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார் அமித் ஷா.

எடப்பாடி ஆரம்பம் முதலே சசிகலாவுக்கு எதிராகவும், அதனால் ஏற்படும் பாதகங்களையும் பட்டியலிட்டிருக்கிறார். தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டங்களே கூட்டணியை வெற்றி பெற வைக்கும் என்று எடப்பாடி பட்டியலிட, ஒருகட்டத்தில் கடுப்பான அமித் ஷா, ``இதேபோல்தான் நாடாளுமன்றத் தேர்தலிலும் நீங்கள் நம்பிக்கை கொடுத்தீர்கள்... என்ன நடந்தது?” என்று கேட்க, எடப்பாடி அமைதியாகியிருக்கிறார். ``ஒன்று, சசிகலா- தினகரனைக் கட்சிக்குள் இணையுங்கள் அல்லது எங்களுக்குக் கூடுதல் தொகுதியைக் கொடுங்கள். அதில் அ.ம.மு.க-வுக்கு நாங்கள் பிரித்துக் கொடுத்துவிடுகிறோம்” என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இரண்டுக்குமே வாய்ப்பில்லை என்கிற ரீதியில் எடப்பாடி சொல்ல, இதில் ஏதாவது ஒன்றுக்கு ஓ.கே சொன்ன பிறகே பா.ஜ.க-வுடன் தொகுதிப் பங்கீட்டை நடத்த முடியும் என்று பேச்சை முடித்துக்கொண்டுவிட்டார் அமித் ஷா. மொழிபெயர்பாளராக உடனிருந்த பி.எல்.சந்தோஷ் எடப்பாடியிடம் பக்குவமாகச் சில விஷயங்களை எடுத்துச்சொல்லியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் - மோடி - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - மோடி - எடப்பாடி பழனிசாமி

கடைசியாக எடப்பாடி, ``நாங்கள் பிரதமர் சென்னை வந்தபோதே இது பற்றிப் பேசினோம். அவரும் ஒ.கே சொல்லிவிட்டார்” என்று சொல்ல, டென்ஷனான அமித் ஷா ``ஒ.கே. உங்களுக்கு நாளை காலை பி.எம் பேசுவார். அப்போது அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்யுங்கள்” என்று முடித்துக்கொண்டிருக்கிறார்.

இதன் பிறகு டெல்லி சென்றவுடன் பி.எல்.சந்தோஷ் மூலம் தமிழக பா.ஜ.க தலைமைக்கு உத்தரவு ஒன்று வந்திருக்கிறது. ``அ.தி.மு.க தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், முதலில் இணைப்பு குறித்து என்ன முடிவு என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள். அவர்களுக்கு 5-ம் தேதி வரை இதற்கு நேரம் கொடுக்கலாம். அதற்குப் பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

அதாவது வரும் 5-ம் தேதி வரை அ.ம.மு.க-வுடன் இணைப்பு குறித்து அ.தி.மு.க தலைமை என்ன முடிவெடுக்கிறது என்று பார்த்த பிறகே பா.ஜ.க தனது ரியாக்‌ஷனைக் காட்டும் என்கிறார்கள். இந்தநிலையில் அமித் ஷா டெல்லி புறப்பட்டுச் சென்ற பிறகு தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் சிலர் தினகரனைச் சந்தித்திருக்கிறார்கள். நள்ளிரவு நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். `சில நாள்களில் நல்ல முடிவு வந்துவிடும்’ என்கிற உறுதியையும் கொடுத்திருக்கிறார்கள். பன்னீர், அ.ம.மு.க-வுக்கு ஆதரவாக அமித் ஷாவிடம் பேசியது எடப்பாடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் என்ன முடிவெடுப்பது என்று தனக்கு நெருக்கமானவர்களுடன் எடப்பாடி தொடர்ந்து ஆலோசனை செய்துவருகிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு