Published:Updated:

`அடுத்து கைது நடவடிக்கை!' - சோனியா குடும்பத்தைக் குறிவைக்கிறாரா அமித் ஷா?

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு விலக்கியுள்ளது. இதன்மூலம், கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு பெற்றுவந்தவர்களை நிராயுதபாணியாக்கியுள்ளார் அமித் ஷா.

அமித் ஷா
அமித் ஷா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, சோனியா காந்திக்கும் அவரின் குழந்தைகள் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கும் விடுதலைப்புலிகள் உட்பட பல்வேறு இயக்கங்களின் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு, சோனியாகாந்தியும் அவரது குடும்பத்தினரும் கடந்த 22 ஆண்டுகளாக எஸ்.பி.ஜி பாதுகாப்பைப் பெற்றுவந்தனர். இந்த பாதுகாப்பைத்தான் மோடி அரசு குறைத்து, இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. பிரதமருக்கு மட்டும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி
சோனியா காந்தி, ராகுல் காந்தி

மசோதா மீது பதிலளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``ஒரு குடும்பத்துக்கு பாதுகாப்பளிப்பது எங்கள் வேலையல்ல, நாட்டின் 130 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க கடமைப்பட்டுள்ளோம். எஸ்.பி.ஜி பாதுகாப்பை பிரதமராக இருப்பவர்கள் மட்டும் அனுபவிக்கலாம். பதவியிலிருந்து வெளியேறியவர்களுக்கும் அவருடன் ஒரே விட்டில் வசிக்கும் குடும்பத்தாருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்படும். மன்மோகன்சிங்குக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டபோது கொதிக்காத காங்கிரஸ் இப்போது கொதிக்கிறது. இந்தப் பாதுகாப்பை ஏதோ அந்தஸ்த்தாக நினைக்க வேண்டாம். சோனியா குடும்பத்துக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். இதில் எந்த அரசியலும் இல்லை” என்று கூறியுள்ளார்.

`ராகுலின் 143 பயணங்கள்!' - எஸ்.பி.ஜி பாதுகாப்புக்குச் செக் வைத்த உள்துறை அமைச்சகம்

சோனியா காந்தி, நம்பர் 10 ஜன்பத் சாலையிலும், பிரியங்கா - ராபர்ட் வதேரா தம்பதிகள் நம்பர் 31, லோதி எஸ்டேட்டிலும், ராகுல் காந்தி நம்பர் 12, துக்ளக் சந்திலும் வசித்துவருகின்றனர். இவர்கள் மூவரும் வெவ்வேறு முகவரியில் வசிப்பதால், புதிய சட்டத்திருத்தத்தின்படி தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தாலும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்க முடியாது. இதுகுறித்து பி.ஜே.பி தேசிய செயலாளர் ஒருவரிடம் பேசினோம்.

பிரியங்கா, ராகுல், ராபர்ட் வதேரா
பிரியங்கா, ராகுல், ராபர்ட் வதேரா

``பிரியங்காவின் கணவர் என்பதால் ராபர்ட் வதேராவுக்கும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பைக் ரேஸ் பிரியரான அவர், இரவு நேரங்களில் மின்னல் வேகத்தில் பறப்பதால் அவரை பின்தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் எழுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் மத்திய அமைச்சரவை அலுவலகத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர். எஸ்.பி.ஜி பாதுகாப்புப் பெறுபவர்களை கைது செய்வதிலும் சட்டச் சிக்கல் உள்ளது.

`5,000 பக்கங்கள்; அடுத்த வாரம் ஆக்‌ஷன்!'- தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் விவரம்

சோனியா காந்தி குடும்பத்தினர் மீது நேஷனல் ஹெரால்ட் வழக்கு, ராபர்ட் வதேரா மீதுள்ள டி.எல்.எஃப் நிலமோசடி உள்ளிட்ட வழக்குகளை வேகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இவ்வழக்குகளில் சோனியா காந்தி குடும்பத்தினர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு ஒரு தடையாக இருக்கும். இதனால்தான், முதலில் இப்பாதுகாப்பை விலக்கிவிட்டு கைது நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவெடுத்துள்ளனர். விரைவிலேயே சோனியா காந்தி குடும்பத்தில் ஒருவர் திகார் செல்லலாம்” என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டதால் ஏற்கெனவே கொதிப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அமித் ஷாவின் அடுத்தடுத்த மூவ்களால் கடுப்பின் உச்சத்துக்கே சென்றுள்ளது. டெல்லியின் அரசியல் சதுரங்கத்தில் அடுத்து வெட்டப்படும் காய் எது என்பது விரைவில் தெரிந்துவிடும்.