Published:Updated:

`ரகசிய பரிசு... துரோகத்தை வீழ்த்தும் புத்தகம்!' -தினகரனுக்கு உற்சாகம் கொடுத்த தஞ்சை நிர்வாகிகள்

மேடையில் தினகரன்
மேடையில் தினகரன்

மேடையில் அமர்ந்திருந்த தினகரனை நோக்கி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் துண்டால் சுற்றி மறைத்து வைத்து எதையோ எடுத்துக்கொண்டு மேடைக்குச் சென்றார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், அவரை நோக்கிச் சென்ற நிர்வாகி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன்
தினகரன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க சார்பாகவும் அ.ம.மு.க-வின் ஆதரவு பெற்றும் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் தஞ்சை தமிழரசி மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டதுடன் குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.

இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கெல்லாம் கூட்ட அரங்குக்கு வந்த தினகரன் எப்போதும்போல் உற்சாகமாக இல்லாமல் அப்செட்டுடன் காணப்பட்டார். தஞ்சையில் கட்சி நிர்வாகிகள் பலர் அ.ம.மு.க-வில் இருந்து விலகி தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் இணைந்து வருவதே இதற்குக் காரணம் என நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டனர்.

தினகரன்
தினகரன்

பின்னர் நிர்வாகிகள் பலர் தினகரனுக்கு சால்வை அணிவித்தும், புத்தகம் மற்றும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். வில்லப்பன் என்ற நிர்வாகி, `துரோகிகளை வீழ்த்துவது எப்படி?' என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அந்தப் புத்தகத்தைப் பார்த்து மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தபடியே பெற்றுக்கொண்டார் தினகரன். அதன் பிறகு, மேடையில் அமர்ந்திருந்த தினகரனை நோக்கி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் துண்டால் சுற்றி மறைத்து வைத்து எதையோ எடுத்துக் கொண்டு மேடைக்குச் சென்றார்.

"ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ, முதல்ல சண்டை செய்யணும்…"- அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு தினகரன் கொடுத்த டானிக்!

இதைப் பார்த்த தினகரன் மற்றும் மேடையில் இருந்தவர்கள் சற்று திடுக்கிட்டனர். அப்போது அந்த நிர்வாகி தங்க நிறம் பூசப்பட்ட மூன்று அடி நீளம் கொண்ட வீச்சரிவாள் ஒன்றை எடுத்து, தமிழகத்தை மீட்க வந்த தலைமகனுக்கு பரிசளிப்பதாக அறிவித்து அவர் கையில் கொடுக்க அதன்பிறகே அனைவரும் நிம்மதியடைந்தனர். பின்னர், அந்த அரிவாளை தினகரன் பெற்றுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

தினகரன்
தினகரன்

இதற்கு முன்பாக தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை எதிர்பார்த்து ஊடகங்கள் காத்துக் கிடக்க, `எந்த டி.வி-யும் செய்தித்தாள்களும் என்னுடைய செய்தியையோ, பேட்டியையோ போடுவது இல்லை. அப்புறம் எதற்குப் பேட்டி கேட்கிறீர்கள். எதுவும் வேண்டாம்' என்று காட்டமாகப் பேசினார் தினகரன். இதனால், செய்தியாளர்கள் அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர்.

அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் சிலர், ` அண்ணன் பேட்டி கொடுப்பதில் கில்லி. செய்தியாளர்கள் கேட்கும் எந்தவிதமான கேள்விகளாக இருந்தாலும் அதைச் சாதரணமாக எதிர்கொண்டு சிரித்த முகத்துடன் பதில் தருவார். அதுதான் அவருடையே சிறப்பே. ஆனால், இதுபோன்று அவர் இப்படிக் கோபப்பட்டு நாம் பார்த்தது இல்லையே. என்ன காரணம்?' எனப் பேசிக்கொண்டனர்.

பின் செல்ல