Published:Updated:

`எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுக்கட்டும்!' - மாநில தேர்தல் ஆணையர் செயலால் கொதிக்கும் அ.ம.மு.க

உள்ளாட்சித் தேர்தலில் பொதுச் சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்த அ.ம.மு.க-வின் மனுவை ஏற்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைக் கட்சியாகப் பதிவு செய்துவிட்டார் டி.டி.வி.தினகரன். பதிவு செய்ததற்கான சான்றிதழை ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கிய தினகரன், ``ஆளுங்கட்சியின் இன்னல்களுக்கு மத்தியில் அ.ம.மு.கவை ஒரு கட்சியாகப் பதிவு செய்ததில் மகிழ்ச்சி. ஒரு பதிவு பெற்ற கட்சியாக பொதுச் சின்னம் கேட்பதைக்கூட மாநில தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது. பதிவு பெற்ற கட்சிகள் மூன்று சின்னங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம், அதிலிருந்து ஒரு சின்னம் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் அக்கட்சிக்கு வழங்கப்படும்’ என்று சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளனர். இது எங்களுக்காகவே கொண்டுவந்தது போல் உள்ளது.

ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்தும் டி.டி.வி.தினகரன்
ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்தும் டி.டி.வி.தினகரன்
தினகரன்
தினகரன்

பொதுச் சின்னம் கோரி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் மனு அளித்தோம். அதை வாய்மொழியாக அவர் மறுத்ததால், எழுத்துபூர்வ ஆணையாக தருமாறு கோரியுள்ளோம். இந்த ஆணை கிடைத்தவுடன் நீதிமன்றம் வாயிலாக சின்னத்தைப் பெறுவோம்” என்றார்.

அ.ம.மு.கவுக்குத் தொடர்ச்சியான சிக்கல்களை உருவாக்க ஆளுந்தரப்பு முனைப்பாக இருப்பதிலிருந்தே உள்ளாட்சித் தேர்தலில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் தினகரனின் கட்சி அ.தி.மு.கவுக்குச் சவாலாக இருப்பதை அறிய முடிகிறது.

அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேலிடம் பேசினோம். ``இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் எங்கள் பொதுச் செயலாளர் தினகரனின் கடிதத்தோடு பொதுச் சின்னம் கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம். கட்சிகளின் சின்னம் பிரிவு 12-ன்படி பதிவு செய்யப்பட்ட கட்சிக்குப் பொதுச் சின்னம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

வெற்றிவேல்
வெற்றிவேல்

ஆனால், ஆணையர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. அவர் மறுப்பை எழுத்துபூர்வ ஆணையாகக் கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சின்னத்தைப் பெறுவோம். ஒவ்வொரு முறையும் ஆளுந்தரப்பு எங்களுக்கு இடைஞ்சல்களை உருவாக்குவதிலிருந்தே, அ.ம.மு.கவைப் பார்த்து எந்தளவுக்கு அவர்கள் பயந்துள்ளார்கள் என்பது புரிகிறது” என்றார்.