Published:Updated:

`நிர்வாகிகளுக்கு மாலை!' - கட்சி நிகழ்ச்சியான அ.ம.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

தூத்துக்குடியில் மாநகராட்சியைக் கண்டித்து அ.ம.மு.க சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நிர்வாகிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம், கட்சி நிகழ்ச்சியாக மாறிப்போனது.

மாலையுடன் நிர்வாகிகள்
மாலையுடன் நிர்வாகிகள்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்ட பெரும் சரிவைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் விலகி அ.தி.மு.க மற்றும் தி.முக-வில் இணைந்தபடி உள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாணிக்கராஜா
ஆர்ப்பாட்டத்தில் மாணிக்கராஜா

இதில், அ.ம.மு.க பலத்துடன் இருந்த தென் மாவட்டங்களில்தான் பல நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகமான எண்ணிக்கையில் விலகினர். இதற்கு கழக அமைப்புச் செயலாளரும், தென்மண்டலப் பொறுப்பாளருமான மாணிக்கராஜாவே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இக்குற்றச்சாட்டு மீது தினகரன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என்று நிர்வாகிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், `என்னுடைய உண்மையான தென்மண்டல தளபதி மாணிக்கராஜா மட்டும்தான். மற்ற நிர்வாகிகள் விலகிச் செல்வதால் கவலை இல்லை' என கடந்த மாதம் கூறி, அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி அளித்தார் தினகரன்.

அதைத் தொடர்ந்து, நெல்லையின் முக்கிய நிர்வாகிகளான பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன், இசக்கிசுப்பையா, கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகினர். `அ.ம.மு.க-வில் ஒரு தொண்டர்கூட இல்லாத நிலை உருவானாலும் மாணிக்கராஜாவிடம் எந்தக் கேள்வியோ, அவர் மீது எந்த நடவடிக்கையுமோ தினகரன் எடுக்கமாட்டார்' என்பது அக்கட்சியில் உறுப்பினர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒருவருக்கொருவர் சொல்லி புலம்புகிறார்கள் அ.ம.மு.க தொண்டர்கள். இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு, மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில், மாநகராட்சியின் சொத்துவரி, குடிநீர் கட்டண உயர்வு மற்றும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், மாநகராட்சியைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேட்டியளிக்கும் மாணிக்கராஜா
பேட்டியளிக்கும் மாணிக்கராஜா

ஆர்ப்பாட்டத்துக்கு தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றிதாமஸ், வடக்கு மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாணிக்கராஜா, ``தமிழகத்தில் எல்லா மாநகராட்சிகளிலும் சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், வசூலிக்கும் வரிக்கேற்ற சாலை வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. ஒரு முறை சாலை போடப்பட்டால் குறைந்தது பத்து வருடம் வரையாவது அந்தச் சாலை தாக்குப்பிடிக்க வேண்டும். ஆனால், கமிஷனுக்காக, சாலை விரிவாக்கம் என்ற பெயரில், ஏற்கெனவே போடப்பட்ட சாலை மீதே மீண்டும் சாலை போடப்படுகிறது. ஆனால், மாநகராட்சி வார்டுப் பகுதிகளுக்குள் உடைந்த சாலை, உடைந்த நிலையிலேயே உள்ளது. தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏற்கெனவே இருக்கும் பூங்காவுக்கு எதிரிலும், அருகிலும் கூடுதலாகப் பூங்காக்களை அமைக்கிறார்கள்.

மாநகரை வெளிப்புறமாக அழகுபடுத்த நினைக்கிறார்களே தவிர, மக்கள் குடியிருக்கும் பகுதியில் எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. பூங்காக்கள், சாலை விரிவாக்கம் அனைத்துமே கமிஷனுக்காகத்தான். அ.தி.மு.க ஆட்சியில் கமிஷனில் தி.மு.க-வுக்கும் பங்கு இருக்கிறது. இந்த நிலையில், வரிகளையும் உயர்த்தினால் எப்படி? தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தலையிட்டு உயர்த்தப்பட்ட வரிகளை ரத்து செய்யாவிட்டால் தென் மாவட்ட மக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். மாணிக்கராஜா பேசிக்கொண்டிருக்கும்போதே, ``கட்சிக்கு வேலை பார்க்குறவங்கப் பெயர்களெல்லாம் நோட்டீஸில் அடிப்பகுதியில கிடக்குது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

எல்லாமே மாணிக்கராஜாவின் இஷ்டப்படிதானே நடக்குது” என சில நிர்வாகிகள் புலம்பிக்கொண்டது வெளிப்படையாகவே கேட்டது. மாணிக்கராஜா, பேசி முடித்ததும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தொப்பிச் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ரமேஷ் என்பவர், மாணிக்கராஜா உள்ளிட்ட இரண்டு மாவட்டச் செயலாளர்களுக்கு ஆளுயுர மாலை அணிவித்து கட்சியில் இணைந்தார். ``ஏய்.. ஆர்ப்பாட்டம் நடத்துற இடத்துல மாலையைப் போட்டா எப்படிப்பா” என மாணிக்கராஜா கோபமாகச் சொன்னாலும் கட்சியில் இணைந்த ரமேஷுடன் சிரித்தபடியே புகைப்படமும் எடுத்துக்கொண்டார். கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நிர்வாகிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம், கட்சி நிகழ்ச்சியாக மாறிப்போனது.