Published:Updated:

கொரோனா பாதிப்பு... தீவிர சிகிச்சை! - எப்படி இருக்கிறார் அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல்?

அ.ம.மு.க வெற்றிவேல்
News
அ.ம.மு.க வெற்றிவேல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல், தொடர்ந்து தீவிர சிகிச்சையிலிருக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகு, ஜெயலலிதா போட்டியிட ஏற்ற தொகுதியை தமிழகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியது போயஸ் கார்டன். ஜெயலலிதாவின் உடல்நிலையும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையென்பதால், சென்னைக்குள்ளேயே அ.தி.மு.க-வுக்கு சாதகமான தொகுதியைப் பட்டியலிட்டனர். அப்போது, ``ஆர்.கே.நகர் சின்னத் தொகுதி. பிரசாரத்தை சீக்கிரமே முடிச்சுடலாம்மா. தொகுதியில நம்ம கட்சிக்காரங்கதான் அதிகம்” என ஜெயலலிதாவை சம்மதிக்கவைத்து, தனது ஆர்.கே.நகர் தொகுதியை ஜெயலலிதாவுக்காக விட்டுத்தந்தவர் வெற்றிவேல். ஜெ-வுக்கு அளித்திருந்த உறுதியின்படி, அவரை 88 சதவிகித வாக்குகளுடன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாக பெருவெற்றியும் அடையவைத்தார் வெற்றிவேல். ஜெயலலிதாவுக்குப் பிற்பாடு சசிகலாவுக்கும் தீவிர விசுவாசியான இவர், அ.ம.மு.க-வின் பொருளாளராகவும் இருந்துவருகிறார்.

வெற்றிவேல்
வெற்றிவேல்

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வெற்றிவேலின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அ.ம.மு.க வட்டாரங்களில் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``வெற்றிவேலுக்கு ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி செய்திருப்பதால், கொரோனாவின் தாக்கத்தால் உறுப்புகளின் செயல்பாடு குறைந்திருக்கிறது. ஆபத்தான கட்டத்தை அவர் இன்னும் தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிராத்திக்கிறோம்” என்றனர்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக அறியப்படும் வெற்றிவேல், கடைசியாக பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, தினகரனின் இல்லத்தில் நடைபெற்ற மலரஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டவில்லை. இந்த நிலையில், அவருக்கு அக்டோபர் 6-ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரின் பிராத்தனை!