Published:Updated:

தமிழகத்தில் இந்தி... முக்கோண அலசல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தில் இந்தி... முக்கோண அலசல்!
தமிழகத்தில் இந்தி... முக்கோண அலசல்!

``இந்தி மொழி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று நம்பும் தமிழர்களுக்கு அதன் பின்னணியிலுள்ள சதித்திட்டம் தெரியவில்லை...'' என்று ஆதங்கப்படும் ஆழி செந்தில்நாதன், இந்தித் திணிப்புக்கு பின்னே மறைந்திருக்கும் ரகசியங்களையும் இங்கே அம்பலப்படுத்துகிறார்.

`இந்தி தெரியாது போடா...' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் அலை ஓய்வதற்குள்ளாகவே, `தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள்மீது இந்தித் திணிப்பு' சர்ச்சை தமிழகத்தை `தடதடக்க’வைத்திருக்கிறது.

சென்னை சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையரான பா.பாலமுருகன் என்பவர்தான் இப்படியோர் அதிரடி குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார். இது குறித்து துறை சார்ந்த மேலதிகாரிகளுக்கு பாலமுருகன் எழுதியிருக்கும் கடிதத்தில், `நான் சென்னை (புறம்) சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தின் இந்திப் பிரிவில் பணியாற்றிவருகிறேன். இந்தி மொழியைப் பரப்பும் இந்தப் பணியில் எனக்குத் துளியும் விருப்பம் இல்லை.

இந்தி எதிர்ப்பு குழுவினருடன் கனிமொழி
இந்தி எதிர்ப்பு குழுவினருடன் கனிமொழி

எனவே, இந்தி எழுதப் படிக்கத் தெரிந்த, அந்தப் பிரிவில் பணியாற்றுவதற்கு விருப்பமுள்ளவர்களைப் பணி நியமனம் செய்ய உத்தரவிடும்படி மத்திய வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் தலைவர் அவர்களைத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்' என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே, `மத்திய பா.ஜ.க அரசு புதிய கல்விக் கொள்கை வழியே, மறைமுகமாக இந்தி மொழியைத் திணிக்கிறது' என்ற குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அனலைக் கிளப்பிவருகிறது. இந்தநிலையில்தான் மத்திய அரசு அதிகாரிகள் இந்தி மொழித் திணிப்பில் ஈடுபட்டுவருவதைக் குறிப்பிட்டு, தி.மு.க எம்.பி கனிமொழி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்ததையடுத்து, `இந்தி தெரியாது போடா...' என்ற வாசகம் நாடு முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியே, காவிரி குறித்துக் கேள்வி எழுப்பியிருந்த காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனுக்கு, மத்திய அரசு இந்தியில் பதிலளித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படி `இந்தித் திணிப்பு விவகாரம்' தொடர் சர்ச்சையாக மாறிவருவது குறித்தும், மத்திய அரசு அதிகாரி பாலமுருகன், 'இந்தித் திணிப்பு'க்கு எதிராகக் கொடுத்திருக்கும் உரிமைக்குரல் குறித்தும் 'தமிழ்த் தேசிய பேரியக்க'த் தலைவர் பெ.மணியரசனிடம் கேட்டோம்.

``தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில், இந்தியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதே சட்டவிரோதம். ஏனெனில், 1963-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தின்படி, நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கிறது.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

அடுத்ததாக 1976-ல் அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களை மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். அதாவது, இந்தி பேசும் மாநிலங்கள், இந்தியைக் கல்வி மொழியாக மட்டும் வைத்திருக்கும் மாநிலங்கள், இந்தியைக் கல்வி மொழியாக அங்கீகரிக்காத மாநிலங்கள் என அவை பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி 'தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாக வைத்துக்கொள்ளலாம்; இந்தி மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்தக் கூடாது' என்று 1976-ம் ஆண்டிலேயே அலுவல் மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்துவிட்டார்கள்.

சட்டம் இப்படியிருக்கும்போது, தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில், இந்தியைப் பரப்புவதற்கென்று தனிப்பிரிவு வைத்திருப்பதே தவறானது. அடுத்து, இந்தி மொழியே தெரியாத ஒருவரை, இந்தி பரப்பும் குழுவில் நியமிப்பதற்கான நோக்கம் என்ன? முனைவர் பட்டமே முடித்திருந்தாலும், எவ்வளவோ படித்து அறிவாளியாகத் திகழ்ந்தாலும் இந்தி மொழி தெரியவில்லையென்றால், அவன் கைநாட்டுப் பேர்வழி, தற்குறி, அவனை இழிவுபடுத்துகிறேன் - தண்டிக்கிறேன் என்பதுதானே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'பச்சை மையில் கையெழுத்திடும் அளவுக்குப் படித்து உயர்ந்திருந்தாலும்கூட இந்தி தெரியவில்லையென்றால், தனக்குக் கீழே வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இந்தி தெரிந்த மூன்றாம் நிலை எழுத்தரிடம்தான் அலுவல் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்' என்ற இழிவை ஏற்படுத்துவதற்கான குறுக்குபுத்தியாகவே இதைச் செயல்படுத்திவருகிறார்கள். ஆக, `தமிழனே... நீ இந்தி படிக்காமல் இருந்ததற்கான இழிவை அடைவாயாக...' என்ற திட்டமிட்ட நோக்கத்துக்காகவே இந்தி தெரியாத ஒருவரை, இந்தி பரப்பும் துறைக்குத் தலைவராக நியமிக்கிறார்கள்.

இந்தி எதிர்ப்பு: `அன்று தியாகம் இருந்தது, இன்று!' -  பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்.

`இந்தி பரப்பும் துறையில் என்னை நியமிக்காதீர்கள்' என்று ஓர் அரசு அதிகாரியாக, தன்மானமுள்ள தமிழனாக பாலமுருகன் சட்டரீதியாக விளக்கம் கேட்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களிலிருந்து இந்தி பரப்பும் துறையையே தூக்கியெறிய வேண்டும். ஏனெனில், சட்டப்படி மத்திய அரசுக்கு எங்களுடனான தொடர்பு அலுவல் மொழி ஆங்கிலம் மட்டும்தானே தவிர, இந்தி அல்ல! தமிழ்நாடு அரசும் இங்கே இருமொழிக் கொள்கையைத்தான் வைத்திருக்கிறது. அப்படியிருக்கும்போது எதற்காக இங்கே வந்து இந்தியைப் பரப்புகிறீர்கள்?'' என்றார் காட்டமாக.

இந்த விவகாரம் குறித்து மொழியுரிமைச் செயல்பாட்டாளர் ஆழி.செந்தில்நாதன் பேசும்போது, ''அரசுத்துறையில் உயரதிகாரி சொல்வதை, அவருக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரிகள் கேட்க வேண்டும் என்ற விதியில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம், அந்த விதி என்பது இங்கே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

1976-ல் இயற்றப்பட்ட ஆட்சி மொழி குறித்த அரசியல் சட்டத்தின் விதிமுறைகளில், இந்தி மொழியைப் பரப்புவதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில், உதவி ஆணையர் பாலமுருகனுக்கு இந்தி மொழியைப் பரப்புமாறு விதிமுறைகளை மீறி நிர்பந்தித்த மேலதிகாரியோ அல்லது நிர்வாகமோதான் தவறு செய்திருக்கிறார்கள்.

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

மற்றபடி 'தன் மீது வலுக்கட்டாயமாக இந்தி திணிக்கப்படுகிறது' என்பதை உணர்ந்த ஓர் அதிகாரியாக பாலமுருகன் அதை உரிய முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எங்கள் பாராட்டுகள். அரசு அதிகாரி என்பதாலேயே தனது கருத்தை வெளியிடக் கூடாது என்றோ, அது குறித்து எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது என்றோ எந்த விதிமுறையும் கிடையாது. தமிழ்நாட்டிலுள்ள எல்.ஐ.சி., பெல், ஏ.ஜி.எஸ் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்த்து ஏற்கெனவே ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் போக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் பெரும்பான்மையாக வட இந்தியர்களையே பணியமர்த்துகின்றனர். இதன் நோக்கம்... இங்கேயிருக்கும் மிச்சம் மீதிப் பணியிடங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழர்களையும் விரட்டியடித்துவிட்டு முழுக்க முழுக்க இந்தி பேசுபவர்களைக் கொண்டு மட்டுமே மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதுதான். அதனால்தான் இந்த வட இந்திய அதிகாரிகளும் தங்களால் முடிந்த அளவு மிகத் தீவிரமாக இந்தியைத் திணிக்கும் வேலைகளைத் தமிழ்நாட்டில் செய்துவருகின்றனர்.

தூத்துக்குடி: பூர்வீக நிலப் பிரச்னை... மாமன் மகனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

2014-ல் ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையில் ஓர் அதிகாரி வழக்கத்துக்கு மாறாக வேண்டுமென்றே இந்தி மொழியிலான சுற்றறிக்கையை தொழிலாளர்களுக்கு அனுப்பிவைத்தார். அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய தொழிலாளர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும்வகையில், இந்தி மொழியில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்குத் தமிழ் மொழியிலேயே பதில்களைத் தயார் செய்து அனுப்பிவைத்தனர்.

இந்தி தேசிய தினம்
இந்தி தேசிய தினம்

`இந்தி மொழி படித்தால் வேலை கிடைத்துவிடும்' என்ற ஏமாற்றுத்தனத்தை இங்கேயிருக்கும் சிலரும்கூட நம்புகின்றனர். நம்மை இந்தி படிக்கவைத்து, மத்திய அரசுப் பணியிடங்களையும் தருவதற்காகவா அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுவார்கள்? இருக்கும் பணியிடங்களையும் தாங்களே விழுங்கிக்கொள்வதற்காகத்தான் ஆவணங்கள் முதற்கொண்டு அதிகாரிகள்வரை அனைத்திலும் திட்டமிட்டு இந்தியைத் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சதித்திட்டத்தை முதலில் நம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாதவர்கள் கடைசிவரை, 'இந்தியைக் கற்றுக்கொண்டால் என்ன தப்பு, என்ன தப்பு...' என்றுதான் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்!'' என்கிறார்.

மும்பை: கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடித்த மாநகராட்சி... இடைக்காலத் தடைவிதித்த உயர் நீதிமன்றம்!

'இந்தி திணிப்பு' விஷயத்தில், மத்திய அரசுமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம்.

``இந்தி மொழியை நாடு முழுக்கப் பரப்ப வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனியொரு சட்டமே இருக்கிறது. அதனால்தான் `இந்தி வளர்ச்சி தினம்' என்ற ஒன்றையே மத்திய அரசு கொண்டாடிவருகிறது. `இந்தி மொழி வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்' என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிமொழி எடுத்திருக்கிறார். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் இந்த உறுதிமொழியை எடுத்திருக்கிறார்.

'எனக்கு இந்தி தெரியாது; எனவே, இந்திப் பிரிவில் பணிபுரிவதற்கு விருப்பம் இல்லை...' என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கும் உதவி ஆணையர் பாலமுருகன் ஏற்கெனவே மும்பையில் எட்டு வருடங்கள் பணிபுரிந்திருப்பதாக அவருடன் பணியிலிருந்த அதிகாரிகளே இன்றைக்குத் தெரிவித்திருக்கிறார்கள். எட்டு ஆண்டுகள் மும்பையில் பணியாற்றிய ஒருவர், தனக்கு இந்தியே தெரியாது என்பது மாதிரியும், இந்தத் துறையில் பணியாற்ற வற்புறுத்துகிறார்கள் என்பது மாதிரியும் சொல்லிவருவது தவறு.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

மொழியை அரசியலாக மாற்றுவதற்கான வேலைகளை இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன. ஆனாலும்கூட பள்ளிகளில் ஆரம்பித்து இந்தி பிரசார சபா வரையிலும் ஆண்டுதோறும் இங்கே லட்சக்கணக்கானோர் இந்தி மொழியைப் படித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எனவேதான் இங்கேயிருக்கும் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தி மொழியை இங்கே யாரும் பரப்பவில்லை. மத்திய அரசு அலுவலகங்களின் பணியில் ஒன்றாக இது இருக்கிறது. மற்றபடி இங்கேயிருக்கும் ஓர் அதிகாரி சொன்ன பொய்யான தகவலை, அதே துறையைச் சார்ந்த மேல் அதிகாரிகளே தெளிவாக எடுத்துரைத்து, இவரது முகத்திரையைக் கிழித்துவிட்டார்கள். இதற்கு மேலும், 'தமிழ்நாட்டில், எப்படிச் சட்ட விரோதமாக இந்தி மொழியைப் பயன்படுத்தலாம்' என்று கேள்வி கேட்பவர்கள், நீதிமன்றத்தில் போய்க் கேட்கலாம்'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு