Published:Updated:

`நம் வாக்குகளை அ.தி.மு.க-வுக்கு விற்றுவிட்டனர்!’- தஞ்சை தி.மு.க-வை கலங்கடிக்கும் நோட்டீஸ்

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்து நமது இஸ்லாமியர் வாக்குகளை வாங்கிய தி.மு.க அதை அ.தி.மு.க-வுக்கு விற்பனை செய்துள்ளது.

பாபநாசம் ஒன்றியத்தில் துணை சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, தேசிய குடியுரிமைச் சட்ட திருத்தத்தைக் கூறி தங்களிடம் வாங்கிய வாக்குகளை தி.மு.க கவுன்சிலர்கள், அ.தி.மு.க-வுக்கு விற்றுவிட்டதாகக் கூறி `வருந்துகிறோம்’ என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அச்சடித்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

வெற்றி பெற்ற சுமதி
வெற்றி பெற்ற சுமதி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாபநாசம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க-வினர் 13 வார்டுகளிலும், அ.தி.மு.க கூட்டணி 6, அ.ம.மு.க இரண்டு வார்டுகளையும் பிடித்தது. பின்னர் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தி.மு.க-வைச் சேர்ந்த சுமதி என்பவர் சேர்மனாக வெற்றி பெற்றார். இதையடுத்து, மாலை நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் வெற்றி பெற்றார். தி.மு.க கவுன்சிலர்கள் வாக்களித்த காரணத்தினாலேயே அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார் எனக் கூறி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டுள்ளனர்.

அந்த நோட்டீஸில், `சக்கராப்பள்ளி, வலுத்தூர், பண்டாரவடை உள்ளிட்ட ஜமாத்தார்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கவனத்துக்கு... தேசிய குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாங்கள் தி.மு.க-வுக்கு அளித்த வாக்கு அ.தி.மு.க-வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய கவுன்சிலர்கள் தி.மு.க 13, அ.தி.மு.க கூட்டணி 6, அ.ம.மு.க 2. இந்த நிலையில் தி.மு.க பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தபோதும் காலையில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்தவர் சேர்மனாக வெற்றி பெற்றார். மாலையில் நடைபெற்ற துணை சேர்மன் தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தியாக.பழனிசாமி என்பவர் வெற்றி பெற்றார்.

கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள்
கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள்

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி போன்ற குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்து நமது இஸ்லாமியர் வாக்குகளை வாங்கிய தி.மு.க அதை அ.தி.மு.க-வுக்கு விற்பனை செய்துள்ளது. இஸ்லாமியர்களே சிந்திப்பீர்' என்பதுபோல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பினர் அழைப்பிதழ் வடிவில் அச்சிட்டு சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இது தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ``தி.மு.க-வைச் சேர்ந்த நான்கு இஸ்லாமிய வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 13 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றிருந்தது. ஆனால், சேர்மனாக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் ஒன்றியச் செயலாளர் தாமரைசெல்வன் ஒரு தரப்பு, கே.எஸ்.குமார், நாசர், துளசி அய்யா போன்ற நிர்வாகிகள் சேர்ந்து ஒரு தரப்பு என இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர்.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்
ம.அரவிந்த்

இதில் கேசவன் தரப்பினர் அமைச்சர் ஒருவரிடம் விலை போய்விட்டனர். அதனால் சேர்மன் பதவிக்கு தி.மு.க-வுக்குள்ளேயே இரண்டு பேர் போட்டியிட்டனர். இந்தப் பிரச்னையை நிர்வாகிகள் தி.மு.க தலைமைக்குக் கொண்டு செல்லவில்லை. வடக்கு மாவட்டச் செயலாளரான கல்யாணசுந்தரம் இவர்களை அழைத்து சமாதானம் செய்யவில்லை. இந்த நிலையில், சுமதி என்பவர் சேர்மனாக வெற்றிபெற்றார்.

இதேபோல் பெரும்பான்மையாக இருப்பதால் துணைத் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்தவர்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுவிட்டார். இவர்கள் ஒற்றுமையாக செயல்படாததும், அமைச்சரிடம் விலை போய் அவருக்கு ஆதரவாக சில தி.மு.க நிர்வாகிகள் செயல்பட்டதும்தான் இதற்குக் காரணம்.

`தஞ்சாவூரில் இனி நாமதான் நம்பர் ஒன்!' -பொங்கல் கொண்டாட்டத்தில் ரௌடிகள் செய்த கொடூரம்

நாளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தஞ்சை வரும் ஸ்டாலின் இது குறித்து விசாரித்து தவறாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு