Published:Updated:

```தளபதி'யாக ஓ.கே... தலைவராக எப்படி?'' - `தலைவர்' ஸ்டாலினின் ஓராண்டு

Stalin
Stalin

'தளபதி' என்றே கோஷமிட்டுப் பழகிய தி.மு.க உடன்பிறப்புகள், கருணாநிதி உடல் அருகே கலகத்துடன் நின்ற ஸ்டாலினை நோக்கி "தலைவரே” என்று உரக்கக் கோஷமிட்டது அப்போதுதான்.

'ஆகஸ்ட் 8-ம் தேதி கருணாநிதியின் உடலை மெரினாவில் புதைக்கத் தடையில்லை' என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நேரம், கருணாநிதி உடல் அருகே நின்ற ஸ்டாலின் கதறி அழுதார். அந்தக் கண்ணீருக்குப் பின்னால் ஒரு மகனுக்கான பாசம் மட்டுமன்றி ஒரு தலைவருக்கான கம்பீரமும் கலந்திருந்தது. `தளபதி' என்றே கோஷமிட்டுப் பழகிய தி.மு.க உடன்பிறப்புகள், கருணாநிதி உடல் அருகே கண்ணீரோடு நின்ற ஸ்டாலினை நோக்கி "தலைவரே” என்று உரக்கக்கோஷமிட்டது அப்போதுதான். தளபதியாக 40 ஆண்டுகளுக்கும் மேல் பவனி வந்த ஸ்டாலின் தி.மு.க-வின் 'தலைவர்' என்ற அரியாசனத்தில் அமர்ந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.

மீண்டும் விஸ்வரூபம் எடுப்பாரா விஜயகாந்த்..?! பரிதவிக்கும் தொண்டர்கள்!

தி.மு.க-வின் தலைவராக 50 ஆண்டுகளாகக் கோலோச்சிய கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவாலயத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தி.மு.க-வின் தலைவராக முடிசூடினார் மு.க.ஸ்டாலின். 1976-ம் ஆண்டு மிசாவில் கைது செய்யப்பட்ட பிறகு, பல்வேறு பொறுப்புகளை தி.மு.க-வில் ஏற்று கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை அவரின் நிழலாக இருந்து இறுதியாக இந்தப் பொறுப்புக்கு அவர் வருவதற்கு இடையில் கடந்துபோன காலம் 40 ஆண்டுகள். வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று தி.மு.க-வின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பதற்கு ஸ்டாலினின் அசாத்தியமான அரசியல் வளர்ச்சியும் ஒரு காரணம். ஆனால், எந்தப் பதவியையும் எளிதில் அடைந்துவிடவில்லை என்பது தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளுக்கு நன்றாகத் தெரியும். ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியை மிகவும் நிதானமாகவே கையாண்டார் கருணாநிதி. ஸ்டாலின் ஆரம்பித்த இளைஞர் அணி பதவி முதல் கட்சியின் பொருளாளர் பதவி வரை ஸ்டாலினைப் பலவிதங்களிலும் புடம்போட்டுப் படிப்படியாகவே பொறுப்புகளை வழங்கினார் கருணாநிதி. ஆனால், அவருடைய தலைவர் பதவியை தனயனுக்கு வழங்கியது மட்டும் கருணாநிதியின் முடிவாக இல்லை. காலத்தின் முடிவானது.

2017-ம் ஆண்டு செயல் தலைவர் பதவியை அவர் பெற்றபோதுகூட அன்பழகன், கருணாநிதி இருவரின் ஒப்புதலும் அதில் இருந்தது. கருணாநிதியின்றி ஸ்டாலின் பெற்ற முதல் பதவி தி.மு.க தலைவர் பதவிதான்.

தளபதியாக இருந்த ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்றபோது 'மாற்றம்' இனி கட்சிக்குள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் கட்சியின் கடைக்கோடித் தொண்டன் வரை இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டாரா ஸ்டாலின் என்று கேட்டால் இல்லை என்கிற பதிலை ஒரு சேரச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். அதேநேரத்தில் அவரின் உழைப்பை, முயற்சியை யாரும் குறைசொல்லத் தயாராகவில்லை. ‘அரசியலில் உழைப்பு மட்டுமே உயர்வை கொடுத்துவிடாது, விவேகமும் சேர்ந்தே இருக்க வேண்டும். பல நேரங்களில் ஸ்டாலினின் விவேகம் வீணாகிவிடுகிறதே’ என்று பலரும் வேதனைப்படுகிறார்கள். கருணாநிதி காலத்தில் அவருடன் பயணம் செய்த பலரும் இப்போது ஸ்டாலின் காரிலும் பயணம் செய்கிறார்கள். இந்த வேதனையை வெளிப்படுத்துவதும் இவர்களே. காரும், தலைமையும் மாறியதே தவிர இவர்கள் மாறவில்லை. மறைமுகமாகக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதும் ஆட்டுவிப்பதும் இவர்களே என்ற முணுமுணுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

Stalin
Stalin

தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தன் தலைமையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 2004-ம் ஆண்டு தி.மு.க கூட்டணி எப்படி ஓர் இமாலய வெற்றியைப் பெற்றதோ, அதற்கு ஈடான வெற்றியை இப்போது தி.மு.க கூட்டணி பெற்றிருக்கிறது. இதற்கு ஸ்டாலினின் பிரசாரமும் கூட்டணி வியூகமும் மிக முக்கியமான காரணம். குறிப்பாக, ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என்று மூன்றாவது அணியை உருவாக்கி, ஸ்டாலினின் முதல்வர் கனவையே கலைத்தவர் என்று வைகோவை தி.மு.க-வினர் வசைபாடிய காலமிருந்தது. ஆனால், அவரையும் தி.மு.க கூட்டணிக்குள் கொண்டுவந்து அவர் வாயாலேயே ‘வருங்கால முதல்வர்’ என்று சொல்லவைத்தது ஸ்டாலினுக்கு அரசியல் வித்தை வரும் என்பதைக்காட்டியது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி என்று ஸ்டாலினை உச்சிமுகர்ந்து கொண்டாடும் அதேநேரத்தில் வாய்ப்பிருந்தும் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் திணறுகிறாரே என்றும் உண்மை உடன் பிறப்புகள் உஷ்ணப்பெருமூச்சு விடுகின்றனர்.

குறிப்பாக, 37 நாடாளுமன்றங்களில் வெற்றி பெற்ற தி.மு.க அணி, அந்த நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. எடப்பாடி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் இதற்குக் காரணமென்று சத்தியமாகச் சமாதானம் சொல்லவே முடியாது. அந்த 9 தொகுதிகளில் ஐ.பெரியசாமியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலக்கோட்டை, கே.கே.எஸ்.எஸ்.ஆர் கட்டுப்பாட்டில் உள்ள சாத்துார், துரைமுருகன் மற்றும் காந்தி ஆகியோருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் சோளிங்கர் உள்ளிட்ட தொகுதிகளும் அடக்கம். இவர்கள் எல்லாம் ஸ்டாலினுக்கு நிழல் நாங்கள்தான் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கது. 'கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை எப்போதோ கவிழ்த்து தி.மு.க-வை ஆட்சிப்பீடத்தில் அமர்த்திருப்பார்’ என்று பொதுவான கருத்து இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால், ‘கருணாநிதியின் மகனான நான் ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மாட்டேன்’ என்று சொல்லி அந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின்.

Stalin
Stalin

நாடாளுமன்றத் தேர்தலில் அவர் அமைத்த கூட்டணி வெற்றிவாகை சூடினாலும், அந்தத் தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் குறித்த சர்ச்சை இன்னும் பலமாக விவாதிக்கப்படுகிறது. வங்கிக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து எனத் தி.மு.க அளித்த வாக்குறுதிகள், காங்கிரசே ஆட்சிக்கு வந்திருந்தாலும் நிறைவேற்ற இயலாதவை என்கிறார்கள் மத்திய அரசின் அதிகாரிகள் பலரும். இவற்றை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற இயலாத நிலையில் தற்போது இருக்கும் தி.மு.க அடுத்த தேர்தலில் அதே வாக்காளர்களை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. கவனிக்கப்பட வேண்டிய விஷயமே.

இவை தவிர்த்து தி.மு.க-வின் உட்கட்சி விவகாரங்களில் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுகின்றன.

ஒருபுறம் 'கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி' என்று அறிவித்து அதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. அது அடிமட்ட கட்சி தொண்டர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. ஆனால், அது இன்று வரை ஏன் நடைமுறைக்கு வரவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் தோல்வி குறித்து ஆராய குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்களும் ஆய்ந்து அறிந்து அறிக்கையைத் தலைவரிடம் அளிக்கும். அப்படி ஸ்டாலின் வசம் அளிக்கப்பட்ட அறிக்கைகள் அறிவாலயம் அலமாரியில் அடுக்கி மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. அதே நேரம், தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சிறு விவகாரம் முதல் பெரிய சர்ச்சைகள் வரை அனைத்திலும் எதிர்வினையாற்றி அல்லது விமர்சித்து, திருத்தங்கள் கூறி அறிக்கை விடுவதில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சித் தலைவராகத் தன்னை நிலை நிறுத்த ஸ்டாலின் முயல்வது நன்றாகத் தெரிகிறது. அகில இந்திய அளவில் பி.ஜே.பி-க்கு எதிராக களமாடும் ஒரு தலைவராக ஸ்டாலின் மாறியிருக்கிறார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர், அடுத்த மாதமே மம்தாவின் பேரணியில் பங்கேற்று பி.ஜே.பி-க்கு பீதியை ஏற்படுத்தினார்.

Karunanidhi - Stalin
Karunanidhi - Stalin

"இந்துத்துவா வேண்டாம்’’ என்று அவர் சொன்னதை, "இந்தியாவே வேண்டாம் என்று ஸ்டாலின் சொல்கிறார்?” என வடக்கத்திய ஊடகங்கள் அவருக்கு எதிராக வரிந்துகட்டி எழுதின. அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. பரூக் அப்துல்லா முதல் மம்தா வரை பி.ஜே.பி-க்கு எதிராகக் களமாட முதலில் அழைப்பது ஸ்டாலினைத்தான். அகில இந்திய அரசியலில் ஸ்டாலின் தனக்கான இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து வருகிறார். அதேநேரம் உட்கட்சி அரசியலில் அவர் இன்னும் அடைய வேண்டிய இலக்கும் அதிகமாக இருக்கிறது.

மாவட்டம்தோறும் கட்சிக்குள் மல்லுக்கட்டு இருக்கிறது. அதைச் சரி செய்ய முடியாவிட்டாலும் குறைகளை அறிந்துகொள்வதற்கு ஸ்டாலின் முயல வேண்டும். தன்னைச் சந்தித்து குறைகளை முறையிட வரும் கட்சியினர் சந்தித்து அவர்கள் சொல்லும் கருத்துகளை உள்வாங்கிக்கொள்ளும் நிலையை இனியாவது அவர் செய்திட வேண்டும்” என்கிறார்கள் உடன்பிறப்புகள். எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தி.மு.க என்கிற கட்சியை இப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே ஸ்டாலின் தலைமைக்குச் சான்று என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், எடப்பாடி அரசின் மீதான வெறுப்பே வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கனியைத் தி.மு.க-வுக்குத் தந்துவிடும் என்று உடன்பிறப்புகள் உட்கார்ந்தால் என்ன நடக்கும் என்பதை வேலுார் தேர்தல் எண்ணிக்கை திக் திக்... காட்சிகள் தி.மு.க-வுக்கு உணர்த்தியிருக்கும்.

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

இவற்றையெல்லாம்விட, இதே ஓராண்டில்தான் வாரிசு அரசியல் என்கிற குற்றச்சாட்டுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். உதயநிதிக்கு இளைஞர் அணி பதவியை இவ்வளவு அவசரமாகக் கொடுக்க வேண்டியதன் அவசியமென்ன என்று உள்ளுக்குள் புகைச்சலோடு ஸ்டாலின் முன்னால் புன்னகை செய்த உடன்பிறப்புகள்தான் அதிகம். இதன் தாக்கம் வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் இப்போது ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சட்டமன்றத்தில் ஸ்டாலின் செயல்பாடுகள் தட்டிக்கொடுப்பதாக மட்டுமன்றி குட்டு வைப்பதாகவும் இருந்திருக்கின்றன. சட்டமன்றத்தில் ஒரு கருத்தை தெரிவித்துவிட்டு அந்தக் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளும் பழக்கம் ஒருபோதும் கருணாநிதியிடம் இருந்ததில்லை. ஆனால், ஸ்டாலின் பலமுறை பல்டி அடித்துள்ளார்.

`நான் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறேன்?' - எடப்பாடிக்கு ஸ்டாலின் சொன்ன 3 பழமொழிகள்!

துண்டுச்சீட்டு என்று அவர் மீது வைக்கும் விமர்சனத்தை அவர் புறம்தள்ளினாலும், யதார்த்த நிலையை அவர் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது. தளபதியாக உங்கள் உழைப்பை உடன்பிறப்புகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகிறார்கள்... ஆனால், தலைவராக உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறார்கள் ஸ்டாலின் அவர்களே!

பின் செல்ல