Published:Updated:

துரை முருகன், டி.ஆர்.பாலு - பொதுச்செயலாளர், பொருளாளர் காலியிடங்கள் - என்ன நடக்கிறது தி.மு.கவில்?

தி.மு.க அலுவலகம்-அண்ணா அறிவாலயம்
தி.மு.க அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் அதுவரை தலைவர் பதவி இல்லாத தி.மு.க வில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் பதவியேற்றார்கள்.

“பொதுக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் ஒன்றோ அல்லது அனைத்துமோ ஏதாவது காரணங்களால் காலியாகுமானால், அப்படிக் காலியாகும் நாளிலிருந்து 120 நாள்களுக்குள் பொதுக்குழு கூட்டப்பட்டு, காலியான பதவி அல்லது பதவிகளுக்கு முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும்” இந்தத் திருத்தம் இன்றிலிருந்து அமலுக்கு வரும் என்று முரசொலியில் சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதுதான் இப்போது தி.மு.கவில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

முரசொலி அறிவிப்பு
முரசொலி அறிவிப்பு

தி.மு.க 1949-ம் ஆண்டு தொடங்கியபோது அந்தக் கட்சியில் தலைவர் பதவி என்பது இல்லை. பொதுச்செயலாளர் பதவி மட்டுமே முதன்மைப் பதவியாக இருந்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் ஆகிய இருவரிடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் அதுவரை தலைவர் பதவி இல்லாத தி.மு.க வில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. தலைவராகக் கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் பதவியேற்றார்கள். அப்போதே தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன. பொதுச்செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் 1977-ம் ஆண்டு அ.தி.மு.கவிற்குச் சென்ற பிறகு அந்த இடத்திற்கு அன்பழகன் அமரவைக்கப்பட்டார். அதுமுதல் அவர் மறைந்த வரை பொதுச்செயலாளர் என்கிற அதிகாரமிக்க பதவியில் அவரே இருந்துவந்தார்.

தி.மு.க வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாகக் கட்சி எடுக்கும் சில முடிவுகளில் தலைவர், பொதுச்செயலாளர் இருவரின் ஒப்புதல் தேவை அதே போல் கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவதாக இருந்தாலும், அல்லது சேர்ப்பதாக இருந்தாலும் பொதுச்செயலாளர் ஒப்புதல் தேவை. இந்நிலையில் அன்பழகன் மார்ச் 7-ம் தேதி மறைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அந்தப் பதவி காலியானது. தி.மு.கவின் சட்டவிதிகள் படி பொதுச்செயலாளர் பதவி 60 நாள்கள் மட்டுமே காலியாக இருக்க முடியும். அன்பழகன் மறைவுக்குப் பிறகு தி.மு.கவின் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகன் வருவார் என்கிற பேச்சு எழுந்தது.

அதற்கு ஏற்றாற்போல் துரைமுருகனும் தான் வகித்துவந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பொருளாளர் பதவியும் காலியானது. இதைத் தொடர்ந்து தி.மு.க தலைமை மார்ச் 29 தி.மு.க வின் பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்குப் புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனாவின் பாதிப்பினால் அந்தப் பொதுக்குழுவே தேதி குறிக்காமல் தள்ளிவைக்கபட்டது.

அன்பழகன்,கலைஞர் மு.கருணாநிதி
அன்பழகன்,கலைஞர் மு.கருணாநிதி

ஒருபுறம் இருந்த பதவியையும் ராஜினாமா செய்துவிட்ட துரைமுருகன் வசம் வெறும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் என்கிற பதவி மட்டுமே இப்போது உள்ளது. கட்சி ரீதியாக வெறும் உறுப்பினர் அந்தஸ்துதான். அதே போல் கட்சியின் மற்றொரு சீனியரான டி.ஆர்.பாலுவுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட முதன்மைச் செயலாளர் என்கிற பதவியைப் பிடுங்கி நேரு வசம் ஒப்படைத்துவிட்டார்கள். டி.ஆர்.பாலு வருத்தத்தில் இருந்ததால் அவரை பொருளாளர் பதவிக்குக் கொண்டுவர முடிவு செய்திருந்தார் ஸ்டாலின். பொருளாளர் பதவிக்குக் கட்சிக்குள் சத்தமில்லாமல் போட்டியும் உருவாக முனைந்ததால் விரைவில் இருவரையும் நியமித்துவிட நினைத்தார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகப் போய்விட்டது என்கிறார்கள் தி.மு.கவினர். குறிப்பாக துரைமுருகனுக்குக் கட்சியின் அதிகாரமிக்கப் பதவியேற்பு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டும், தனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்காமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

கொரோனா நேரத்தில் பதவியைப் பற்றி ஏன் அவசரப்படுகிறார் துரைமுருகன் என்று ஒருபுறம் குரல் எழுந்தாலும், துரைமுருகன் ஆதரவாளர்களோ வேறு விதமாகச் சொல்கிறார்கள். “கருணாநிதி இருக்கும் காலத்திலே தி.மு.கவின் அதிகாரமிக்கப் பதவிகளில் அமர வைத்து அழகு பார்க்கப்பட்டவர் துரைமுருகன். கருணாநிதி இருந்த போதே ஸ்டாலின் வசம் இருந்த பொருளாளர் பதவி துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. அண்ணா காலத்திலிருந்து அரசியல் செய்துவரும் துரைமுருகன் இந்தப் பதவியைத் தனது அரசியல் பயணத்தில் மைல்கல்லாகவே நினைத்துவந்தார். இப்போது பதவியேற்பு தள்ளிப்போனதும் கடும் வருத்தத்தில் இருக்கிறார். அறுபது நாள்களில் பொதுச்செயலாளர் பதவியை நிரப்பவேண்டும் என்பதால் பொதுக்குழு நடத்தாவிட்டாலும், தலைவர் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நியமனம் செய்துவிடுவார் அல்லது தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பொதுச்செயலாளர், பொருளாளர் இருவரையும் மனு தாக்கல் செய்யச்சொல்லி அவர்களை வெற்றிபெற்றதாக அறிவித்துவிடுவார் என்று எதிர்பார்த்தார்.

ஸ்டாலின், துரைமுருகன்
ஸ்டாலின், துரைமுருகன்

ஆனால் அவர் நினைத்தற்கு மாறாக எந்த நடவடிக்கையும் ஸ்டாலின் எடுக்காமல் இருப்பது துரைமுருகனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்குத் தயக்கம் காட்டும் அதே நேரம், அந்தப் பதவி காலியாக இருப்பதற்கான சட்டத்திருத்தத்தை மட்டும் அவசரமாகக் கொண்டுவர முடிந்தது எப்படி?இந்தச் சட்டத்திருத்தத்தைக் கூட வரும் பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கப்படும் என்று அறிவித்துள்ளார்களே, அதே முறையை பொதுச்செயலாளர் தேர்வில் செய்திருக்கலாமே” என்று நினைக்கிறாராம். துரைமுருகனின் இந்த வருத்தத்தை அவருக்கு நெருக்கமானவர்கள் ஸ்டாலின் காதிலும் போட்டுவிட்டார்கள்.

மற்றொருபுறம் டி.ஆர்.பாலு தரப்போ “ இருந்த பதவியைப் பிடுங்கிவிட்டார்கள். புதிய பொருளாளர் நீ தான் என்று சொல்லிவிட்டு இப்போது அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்த பதவிக்கு எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் போட்டிபோடும் நேரத்தில் பதவியைக் காலியாக வைத்திருந்தால் முதன்மைச் செயலாளர் பதவி பறிபோனது போல இதுவும் தட்டிப்போய்விடாது என்று எப்படி உறுதியாகக் கூறமுடியும்?” என்று புலம்பியுள்ளார். துரைமுருகன் இப்போது ஸ்டாலின் மீது வருத்தத்தில் இருப்பதால் அவருடன் அதிகம் பேசிக்கொள்வது இல்லை என்றும் சொல்கிறார்கள்.

துரைமுருகன் - ஸ்டாலின்- டி.ஆர். பாலு
துரைமுருகன் - ஸ்டாலின்- டி.ஆர். பாலு

ஸ்டாலின் தரப்பில் சொல்லப்படும் விஷயமே வேறுமாதிரியாக இருக்கிறது. “ பொதுச்செயலாளர், பொருளாளர் இரண்டு பதவிக்கும் துரைமுருகன், டி.ஆர்.பாலு என்று முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால் அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அவசியம். அவசரமாக கொரோனா நேரத்தில் தேர்தல் அறிவிப்பு நடத்தி இருவரையும் தேர்வு செய்தால் அது வேறு மாதிரி சலசலப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் சட்டத்திருத்தம் செய்து நாள்களைத் தள்ளிப்போட்டுள்ளார். இதற்குப் பின்னால் வேறு உள்குத்து இருக்கிறதா என்பது போகப்போகவே தெரியும்” என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு