Published:Updated:

`80 மணி நேரம் ஆட்சி, டிராமா... ரூ.40,000 கோடி நிதி'! - ஃபட்னாவிஸ் பதவியேற்பு குறித்து ஹெக்டே

பெரும்பான்மை இல்லாத நிலையில், முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றது ஏன் என்பதுபோன்ற விடைகிடைக்காத கேள்விகள் இன்னும் மகாராஷ்டிரா அரசியலை சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கின்றன.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த பிறகும் மகாராஷ்டிரா ஆட்சிக் கட்டிலில் அஜித் பவார் உதவியுடன் அமர்ந்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ். ஆனால், 80 மணி நேரம்கூட அவரது ஆட்சி தாக்குப்பிடிக்கவில்லை. என்.சி.பி, காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் நீதிமன்றப் படியேறி ஃபட்னாவிஸை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்ற பிறகு, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தற்போது சற்று ஓய்ந்துள்ளது. எனினும், பெரும்பான்மை இல்லாத நிலையில், முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றது ஏன்? அவருக்கு எந்த அடிப்படையில் கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார், அஜித் பவார் ஆதரவு எப்படி பெறப்பட்டது, அவர்மீதான ஊழல் வழக்குகள் ரத்துசெய்யப்பட்டது உண்மையா என்பதுபோன்ற விடை கிடைக்காத கேள்விகள் இன்னும் மகாராஷ்டிரா அரசியலை சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கின்றன.

அனந்த்குமார் ஹெக்டே
அனந்த்குமார் ஹெக்டே

இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே-யின் பேச்சு அமைந்துள்ளது என்கிறார்கள். எப்போதும் சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள அனந்த்குமார் ஹெக்டே, சமீபத்தில் மகாராஷ்டிரா நிலவரம் குறித்துப் பேசினார். அதில், ``பெரும்பான்மை இல்லாமல் பா.ஜ.க ஆட்சி அமைத்தது ஏன் என எல்லோரும் கேட்கிறார்கள். மத்திய அரசு ரூ.40,000 கோடி நிதியை மகாராஷ்டிரா அரசுக்குக் கொடுத்திருந்தது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆட்சியமைத்தால், இந்த நிதியை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பது ஃபட்னாவிஸ்-ஸுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், டிராமா செய்ய முடிவுசெய்யப்பட்டு ஃபட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார். பதவியேற்ற 15 மணி நேரத்தில் ரூ.40,000 கோடி நிதியை மீண்டும் மத்திய அரசுக்கே மாற்றிவிட்டார், ஃபட்னாவிஸ்" என்று கூறியுள்ளார். இவரது பேச்சு உண்மையா எனத் தெரியாத நிலையில், பா.ஜ.க சார்பில் விளக்கம் தரப்படவில்லை.

ராஷ்மி தாக்கரே, சுப்ரியா சுலே, அம்ருதா பட்னாவிஸ்... மகாராஷ்டிர அரசியலை இயக்கும் த்ரீ குயின்ஸ்!