Published:Updated:

திருச்சி: `குறைந்தது 200 தொகுதிகள்; சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி?!’ - அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

``குறைந்தது 200 தொகுதிகளில் நிற்க வேண்டும் என உதயநிதி கூறியிருக்கிறார். நாங்களும் அதை விரும்புகிறோம். இறுதி முடிவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான் எடுக்க வேண்டும்” என்கிறார் அன்பில் மகேஷ்

``வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும். நண்பனாக ஆசைப்படுகிறேன். தி.மு.க கூட்டணியில் போட்டியிடுபவர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்கவைக்கலாம் என்று சொன்னதற்குத் தலைவர் செக் வைத்துவிட்டார்" என்று என்று தி.மு.க எம்.எல்.ஏ-அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

அன்பில் மகேஷ் - உதயநிதி
அன்பில் மகேஷ் - உதயநிதி

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அன்பில் மகேஷ். பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், `` `வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எங்களைப் போன்றோர் கூறிவருகிறார்கள்.

குறைந்தது 200 தொகுதிகளில் நிற்க வேண்டும் என உதயநிதி கூறியிருக்கிறார். நாங்களும் அதை விரும்புகிறோம். இறுதி முடிவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான் எடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சியினரை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடவைத்தார் ஜெயலலிதா. அதுபோல, `தி.மு.க-விலும் கூட்டணி வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவைக்கலாம்’ எனச் சிலர் கூறினர். ஆனால், அதைத் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

`அது அவரவர் விருப்பம், அதில் நாம் தலையிடக் கூடாது’ எனத் தெளிவாகக் கூறிவிட்டார். வரக்கூடிய தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், இது பற்றிப் பேச வேண்டிய தேவையே எழவில்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எனினும், அனைத்துத் தோழமைக் கட்சிகளுடனும் நாங்கள் இணைந்து செயல்பட்டுவருகிறோம். அனைவரும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்” என்றார்.

அ.தி.மு.க-வில் நிலவக்கூடிய உட்கட்சி விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ``அதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை’’ என்றார். ``தி.மு.க-வில் நான் இரட்டைப் பதவி வகிக்கவில்லை.

உதயநிதி- அன்பில் மகேஷ்- ஸ்டாலின்
உதயநிதி- அன்பில் மகேஷ்- ஸ்டாலின்

திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உடனேயே, மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டேன்’’ என்றார், தொடர்ந்து, ``வரும் சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும். நண்பனாக ஆசைப்படுகிறேன். அவர் களத்துக்கு வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இதில் எந்த மாற்றமுமில்லை. கடந்த ஐந்து நாள்களில் ஆன்லைன் மூலமாக 1.16 லட்சம் பேர் தி.மு.க-வில் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் லட்சக்கணக்கானோர் இணைந்துகொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் தி.மு.க-வின் மீது மக்கள் மனதில் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையான இடங்களைப் பிடிப்போம்’’ என்றார் அன்பில் மகேஷ்.

அடுத்த கட்டுரைக்கு