Published:Updated:

`தோற்கடிக்க சதி... களமிறங்கிய ஐபேக் டீம்!’- இரண்டு தொகுதிகளைக் குறிவைக்கும் அன்பில் மகேஷ்

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

தென்னூரிலுள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்து வேலைகளைத் தொடங்கவிருக்கிறது அந்த டீம். கடந்த வாரம்கூட கிழக்குத் தொகுதியில் மகேஷைவைத்து ஒரு ஹேஷ்டேக் டிரெண்டானது.

தி.மு.க-வுக்குத் தேர்தல் வேலைகளைச் செய்துவரும் ஐபேக் டீம் தற்போது, அன்பில் மகேஷுக்கு ஆதரவாக, திருச்சியில் களம் இறங்கியுள்ளது. மகேஷுக்கு எதிராக ஒரு சிலர் வேலை செய்வதாக, அவருடைய ஆதரவாளர்கள் தரப்பில் தலைமையிடம் புகார் வாசிக்கவே, இந்த முடிவை தி.மு.க தலைமை எடுத்திருக்கிறது என்கிறார்கள். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க-வின் தேர்தல் வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. கடந்த மூன்று மாதங்களாக, தமிழகம் முழுவதும் அந்த நிறுவனத்தில் பணியாளர்கள் கள ஆய்வு செய்துவருகிறார்கள். மாவட்டவாரியாகவும், தொகுதிவாரியாகவும் தி.மு.க-வின் பலம், பலவீனம், நிர்வாகிகளின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டுவருகிறார்கள்.

மற்றொருபுறம் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தரப்பும் மாநிலம் முழுவதுமுள்ள இளைஞர் அமைப்பின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை செய்துவருகிறது. தொகுதியில் யாருக்கு வாய்ஸ் உள்ளது,

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று மறைமுகமாகப் புள்ளிவிவரங்களைச் சேகரித்து, ஐந்து பேர்கொண்ட வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து தலைமைக்கு உதயநிதி ஸ்டாலினின் குழு கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருகிறது. அவர்கள் கொடுத்த பட்டியலில் அதிகமானானோர் இளைஞர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் பட்டியலோடு, ஐபேக் நிறுவனம் தரும் பட்டியலையும் சேர்த்து இறுதிப் பட்டியலைத் தயார் செய்யவிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

கருணாநிதி காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு பட்டியலை வழங்குவார்கள். இந்த முறை ஸ்டாலின் அவரின் மகன், மருமகன் ஆகியோர் தாண்டி குடும்பத்தினர் தலையீடு வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இப்படி படு சீக்ரெட்டாக வேலைசெய்து வரும் ஐபேக் டீம் தற்போது திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷுக்காக களமிறங்கியுள்ளது.

என்ன நடக்கிறது என்று கட்சியின் உள்விவகாரம் அறிந்த மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.``அன்பில் மகேஷ் ஸ்டார் வேட்பாளர். அவருக்காக ஐபேக் டீம் வருவதில் எந்தத் தவறும் இல்லையே... ஐ-பேக் டீமோட வேலையே ஒரு தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், அவரது நல்ல விஷயங்களை புரொமோட் செய்வதுதான். அந்த வகையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாகவும், தெற்கு மாவட்டச் செயலாளராகவும் அன்பில் மகேஷ் இருக்கிறார்.

ஸ்டாலின்,  பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

அவர் ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகள், எடுத்திருக்கும் முயற்சிகள் குறித்த தகவலை தொகுதி மக்களுக்குக் கொண்டு செல்லவிருக்கிறார்கள். அத்தோடு மகேஷைத் தோற்கடிக்க ஒரு சிலர் சதி வேலை செய்வதாகவும், அவரது ஆதரவாளர்கள் ஒரு தகவலைத் தலைமைக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்தே, தலைமை இந்த முடிவை எடுத்திருக்கிறது என்கிறார்கள். தென்னூரிலுள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்து வேலைகளைத் தொடங்கவிருக்கிறது அந்த டீம். கடந்த வாரம்கூட கிழக்குத் தொகுதியில் மகேஷைவைத்து ஒரு ஹேஷ்டேக் டிரெண்டானது. அதுபோலத்தான் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் தொகுதி முழுவதும் வலம் வரவிருக்கிறது’’ என்றார்.

அன்பில் மகேஷ் - உதயநிதி
அன்பில் மகேஷ் - உதயநிதி

அன்பில் மகேஷ் திருவெறும்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் கவனம் செலுத்துவதாக வெளியான தகவல் குறித்து அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். ``’திருவெறும்பூர் தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படியாக நலத்திட்டங்கள் செய்யவில்லை. அதனால், மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என ஐபேக் டீம் தலைமையிடம் சொல்லியிருக்கிறது. இது போன்ற ஒரு சில காரணங்களை மனதில் வைத்துதான் இரண்டு தொகுதிகளிலும் மகேஷ் கவனம் செலுத்துகிறார். அதற்காக இரு தொகுதிகளையும் குறித்துவைத்து வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். தலைமை எங்கு நிற்கச் சொல்கிறதோ... அந்தத் தொகுதியில் கவனம் செலுத்தவிருக்கிறார்’’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு