Published:Updated:

``தேவைப்பட்டால் அவர் தி.மு.க இளைஞரணியில் சேரட்டும்!"- அமைச்சரைக் கலாய்த்த அன்பில் மகேஷ்!

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.

Anbil Poyyamozhi
Anbil Poyyamozhi

``வரும் 14ம் தேதி தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தேவைப்பட்டால், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்து தி.மு.க இளைஞர் அணியில் உறுப்பினராக சேரட்டும்" என அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ அதிரடியாக அழைப்பு விடுத்ததால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Anbil Poyyamozhi
Anbil Poyyamozhi

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சித் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை அரசு தூர் வாராமல் பழிவாங்குவதாக குற்றம் சாட்டி தொகுதிக்கு உட்பட்ட நெடுங்கூர், ஈசனத்தம், உப்பிடமங்கலம் கஞ்சமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மூன்று ஏரிகளை மக்களை இணைத்து தூர் வாரும் பணியை தி.மு.க இளைஞர் அணி சார்பில் இன்று மேற்கொள்வதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இதற்கு, 'தி.மு.க இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்குவார்' என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில், செந்தில்பாலாஜி தூர்வாருவதாக அறிவித்திருந்த மூன்று ஏரிகளிலும் நேற்று இரவு அவசரம் அவசரமாக டி.ஆர்.ஓ ராஜேந்திரன், பி.ஓ கவிதா, காவல்துறை அதிகாரிகள் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர்.

lake
lake

இது தி.மு.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'தி.மு.க இளைஞரணியின் இந்த நூதனப் போராட்டத்துக்கு பயந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இப்படி அதிகாரிகளை முடுக்கிவிட்டு, ஏரிகளை முந்திகொண்டு தூர்வார வைத்திருக்கிறார்' என்று தி.மு.க தரப்பு புகார் தெரிவித்தது.

`குட்டையைக் குழப்பப் பார்த்தார்; இரவோடு இரவா தூர்வாரிட்டோம்!'-செந்தில் பாலாஜியை முந்திய விஜயபாஸ்கர்

அரசு பணிகளை தொடங்கியபின்பும், இன்று அறிவித்தது போலவே தி.மு.க இளைஞரணி சார்பில் மூன்று இடங்களிலும் தூர்வாரும் நிகழ்ச்சியை நடத்தினார் செந்தில்பாலாஜி. அறிவித்ததுபோலவே எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, தூர் வாரும் பணியைத் தொடங்கி வைத்தனர். க.பரமத்தி ஒன்றியத்தில் நெடுங்கூர் ஏரி தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்று எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தி.மு.கதான்.

Senthil Balaji
Senthil Balaji

அந்த வழியில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் உத்தரவின்பேரில், அரவக்குறிச்சி தொகுதியில் 3 இடங்களில் குளம் தூர் வாரும் பணி தொடங்கி வைக்கப்படுகிறது. 'இன்று தி.மு.க இளைஞர் அணி சார்பில் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது' எனத் தெரிந்தவுடன், அ.தி.மு.கவினர் இரவோடு இரவாக ஏரிகளை தூர் வார ஏற்பாடு செய்துள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சிகரமான விசயம். எங்களது இளைஞர் அணிக்குக் கிடைத்த வெற்றி இது. 'மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இளைஞர்களை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், சமூக சேவைக்கும் பயன்படுத்த வேண்டும்' என தி.மு.க இளைஞர் அணி சார்பில் இப்பணியை மேற்கொண்டு வருகிறோம்.

தூர்வாரும் பணி திட்டத்தை முதன்முதலில் கூறியது, எங்களது இளைஞர் அணி தலைவர். அதன்படி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எங்கள் பணியை அவர் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. தலைவர் கூறியபடி, வரும் 14ம் தேதி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தேவைப்பட்டால், அமைச்சரும் வந்து தி.மு.க இளைஞர் அணியில் உறுப்பினராக சேரட்டும்" என அழைப்பு விடுத்தார்.

M.R. Vijayabaskar
M.R. Vijayabaskar
நா.ராஜமுருகன்

தொடர்ந்து, கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கஞ்சமனூர் மற்றும் ஈசநத்தம் ஊராட்சி, சுக்காம்பட்டி ஓடை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார். முன்னதாக, 'தி.மு.க சார்பில் இன்று தூர்வாரப்படும்' என்று செந்தில் பாலாஜி அறிவித்திருந்த நிலையில், இரவோடு இரவாக கரூர் மாவட்ட நிர்வாகமே குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளது மாவட்டத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.