Published:Updated:

50 சதவிகித இட ஒதுக்கீடு; ஆண்களுக்கு நிகராகப் பதவி! - மகளிருக்கான அறிவிப்புகளால் அசத்தும் ஜெகன்

ஆந்திராவில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி ( Twitter/@YSRCPDMO )

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக முதல்வராக அரியணை ஏறினார். அவர் பதவியேற்ற நாளிலிருந்தே மாநில மக்களுக்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

Y.S.Jaganmohan Reddy
Y.S.Jaganmohan Reddy
Twitter/@YSRCPDMO

அவர் தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 80 சதவிகிதத்தை நிறைவேற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பத்திரிகையாளர்களுக்குக் காப்பீடு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை, வீட்டுக்கே தேடி வரும் ரேஷன் பொருள்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை, மதுக்கடைகளை முற்றிலும் ஒழிப்பது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

இந்த வரிசையில் நேற்று ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவின் தேடப்பள்ளியில், விவசாயம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறைக்கான மதிப்பாய்வுக் (review meeting) கூட்டம் அம்மாநில முதல்வர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் பிற வங்கிகளைப் பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

Y.S.Jaganmohan Reddy
Y.S.Jaganmohan Reddy
Twitter/@YSRCPDMO

மேலும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளின் சுதந்திரம் மற்றும் இடைத்தரகர்களைக் குறைப்பது போன்ற பல விஷயங்களைப் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில், சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள உயர்பதவிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு, இந்தத் துறைகளில் உள்ள குழுக்களில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் பதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

சராசரியான மற்றும் அரசியல் சாராத பெண்களுக்கே உயர்பதவிக்கான வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜெகன். அதேபோல், மார்கெட்டிங் துறையில் பழங்குடி மற்றும் பட்டியலின மக்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Y.S.Jaganmohan Reddy
Y.S.Jaganmohan Reddy
Twitter/@YSRCPDMO

தற்போதிலிருந்தே பெண்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று இந்த மாத இறுதிக்குள் பணிநியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடித் திட்டங்களால் ஆந்திர அரசு கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் தகவலை ஆந்திர அரசு முழுமையாக மறுத்துள்ளது.