சினிமாவில் கலக்கிய நட்சத்திரங்களில் சிலரால் மட்டுமே அரசியலிலும் ஜொலிக்க முடிந்தது. அந்த வரிசையில் இடம்பெற்ற நடிகை ரோஜா, ஆந்திரா அரசியலில் பரிச்சயமானவர். 2019-ல் மீண்டும் எம்.எல்.ஏ-வாக ஜெயித்து, அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு, வாரியத் தலைவர் பொறுப்பு மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், ஜெகன் எடுத்துள்ள அதிரடி முடிவால், வாரியத் தலைவர் பொறுப்பும் ரோஜாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

1990-களின் இறுதியில், முன்னணி நடிகையாக இருந்தபோதே தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் பிரவேசத்தைத் தொடங்கினார் ரோஜா. அங்கு தனக்கான வளர்ச்சி கிடைக்காத நிலையில், 2009-ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் நட்சத்திர முகமாக மக்களிடம் செல்வாக்கு பெற்றார். சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியையும், அவரது கட்சியையும் எதிர்த்து கடந்த ஆட்சியில் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், 2019-ல் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என ஆவலுடன் இருந்தார். ஆனால், ரோஜாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

அதிருப்தியில் இருந்த ரோஜாவை சமாதானப்படுத்தும் வகையில், மாநிலத்தின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பொறுப்பு கொடுத்தார் முதல்வர் ஜெகன். ``இண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். இந்த முறை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, அடுத்த முறை வாய்ப்பு வழங்கப்படும்" என்றும் தெரிவித்தார். அமைச்சர் பொறுப்புக்கு இணையான இந்த வாரியத் தலைவர் பொறுப்பை ஏற்ற ரோஜா, அடுத்த முறை தனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் மீண்டும் கட்சிப் பணிகளில் உற்சாகமானார்.
ஜெகனின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளின் பட்டியலில் ரோஜாவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், ரோஜாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. `எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும்' என முடிவெடுத்துள்ளார் ஜெகன். இதனால், ரோஜா உட்பட ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலரிடமும் இருந்து வாரியத் தலைவர் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படவுள்ள நிலையில், ஜெகனின் இந்த முடிவில் முக்கியமான காரணம் இருக்கக்கூடும் என்று ஆளும்கட்சியினர் கருதுகின்றனர்.

வாரியத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டவர்களுக்கு, அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதனிடையே, ஜெகன் எடுத்துள்ள திடீர் முடிவால் ரோஜாவின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது. இன்னும் சில மாதங்களில் புதிய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது, எல்லாக் குழப்பங்களும் பதில் கிடைக்கும்.