Published:Updated:

மகாராஷ்டிரா: ரூ 100 கோடி லஞ்சப் புகார்; தப்பித்த உள்துறை அமைச்சர் - ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சி

மகாராஷ்டிராவில் ரு.100 கோடி லஞ்சப் புகாரில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் தலை தற்காலிகமாகத் தப்பியிருக்கிறது. ஆனால் குற்றம்சாட்டிய போலீஸ் அதிகாரி தனது புகார் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையில் காவல் ஆணையராக இருந்தவர் பரம்பீர் சிங். முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டுகளுடன் கார் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் ஊர்க்காவல் படை டி.ஜி.பியாக மாற்றப்பட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட 2 நாட்களில் பரம்பீர் சிங், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மிகப்பெரிய லஞ்சப் புகாரை சுமத்தியிருந்தார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டுகளுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி சச்சின் வாசிடம், அனில் தேஷ்முக் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஓட்டல்கள், பார்கள், நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்துக் கொடுக்கச் சொன்னதாக பரம்பீர் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கையெழுத்து போடாத கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

பரம்பீர் சிங்
பரம்பீர் சிங்

பரம்பீர் சிங் சொன்ன இந்தக் குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிரா அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியிருக்கிறது.

அமைச்சர் அனில் தேஷ்முக்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., நவநிர்மாண் சேனா போன்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்துக் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது பரம்பீர் சிங்கின் குற்றச்சாட்டு குறித்தும், அவர் தெரிவித்திருந்த தேதிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

பின்னர் சரத்பவார் அளித்த பேட்டியில், ``புகார்க் கடிதத்தில் பரம்பீர் சிங் குறிப்பிட்டுள்ள பிப்ரவரி 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, அனில் தேஷ்முக் கொரோனா காரணமாக நாக்பூர் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அதோடு பிப்ரவரி 15லிருந்து 27-ம் தேதி வரை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. முகேஷ் அம்பானி இல்லத்துக்கு அருகில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கை திசைதிருப்பவே பரம்பீர் சிங் இது போன்ற குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார். எனவே, அனில் தேஷ்முக் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்தார்.

ஆனால், ஆளும் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அனில் தேஷ்முக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால், சரத்பவார் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் இரு கட்சிகளிடையேயுள்ள உறவிலும் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா: ரூ.100 கோடி லஞ்சப் புகார் - அரசுக்கு நெருக்கடி; அமைச்சர் அனில் தேஷ்முக் தலை தப்புமா?

இந்தநிலையில், பரம்பீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``அனில் தேஷ்முக் மீது நான் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமின்றி சி.பி.ஐ மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும். எனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அனில் தேஷ்முக் இல்லத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். உடனே இதை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடாவிட்டால் அனில் தேஷ்முக் ஆதாரங்களை அழித்துவிடுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகத்தில் லஞ்சம், ஊழல் நிறைந்திருக்கின்றன. மும்பையில் எம்.பி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சில பா.ஜ.க தலைவர்களின் பெயர்களைச் சேர்க்கும்படி அனில் தேஷ்முக் எனக்கு நிர்பந்தம் கொடுத்தார். ஆனால் நான் அதற்குப் பணியவில்லை. என்னை கமிஷனர் பதவியிலிருந்து நீக்கியது சட்டவிரோதமானது. எனவே, பணி இடமாறுதலை ரத்துசெய்து மீண்டும் என்னை கமிஷனராக நியமித்து உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தால்தான் அனில் தேஷ்முக்கின் பதவி தப்புமா என்பது குறித்துத் தெரியவரும். இந்தநிலையில் பரம்பீர் சிங்கை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்துவருகிறது.

அனில் தேஷ்முக் விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த விவகாரத்தைக் காரணம் காட்டி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது என்கிறார்கள். விரைவில் மாநில ஆளுநர் கொஷாரியா மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பவிருக்கிறார். மகாராஷ்டிரா பா.ஜ.க-வும், மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

பரம்பீர் சிங்குடன் அனில் தேஷ்முக்
பரம்பீர் சிங்குடன் அனில் தேஷ்முக்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியில் இருப்பது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த மாநில அரசு தடையாக இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு தேவையான நிலத்தை மகாராஷ்டிரா அரசு கையகப்படுத்திக் கொடுக்க மறுத்துவருகிறது.

புல்லட் ரயில் தடம் அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மற்றொரு புறம் பா.ஜ.க ஆட்சியில் மும்பையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் சிவசேனா ஆட்சியில் முடிந்தால், அது அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த பலனைக் கொடுக்காது. எனவேதான் பா.ஜ.க பின்புறமிருந்து பரம்பீர் சிங்கை ஆட்டிவைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு மாநகராட்சித் தேர்தலுக்குள் சிவசேனா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாக இருக்கிறார்களாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு