Election bannerElection banner
Published:Updated:

``உங்க வீட்டுப் பெண்ணா இருந்திருந்தா இப்படிச் செஞ்சிருப்பீங்களா?" - ஆவேசம் அடைந்த அனிதாவின் அண்ணன்!

அனிதாவுடன் மணிரத்னம்
அனிதாவுடன் மணிரத்னம்

``நீட் தேர்வுக்கு எதிரான அனிதாவின் போராட்டத்தை, என் தங்கைப் பெயரைப் பயன்படுத்தியே கொச்சைப்படுத்தியிருக்கார் அமைச்சர் பாண்டியராஜன்."

நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுக்கக் கொதிப்பலை எழுந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக அனிதா பேசுவதுபோல இடம்பெற்றிருந்தது.

பாண்டியராஜன் ட்விட்டரில் வெளியான வீடியோ காட்சி
பாண்டியராஜன் ட்விட்டரில் வெளியான வீடியோ காட்சி

``நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட வந்தபோது ஊடகங்களுக்கு அனிதா அளித்த பேட்டிகளில், குரல் மாற்றம் செய்து இந்த வீடியோவை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டிருக்கிறார்" என்று சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து அனிதாவின் அண்ணன் மணிரத்னமும் கண்டனம் தெரிவித்ததுடன், காவல்துறையில் புகார் அளிக்கப்படும் எனவும் வீடியோ பதிவில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டது.

"தன் அனுமதி இல்லாமல் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்து உண்மை கண்டறியப்படும்" என அமைச்சர் பாண்டியராஜன் வீடியோ பதிவில் விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

அனிதாவுடன் மணிரத்னம்
அனிதாவுடன் மணிரத்னம்

இந்த விவகாரம் தொடர்பாக அனிதாவின் அண்ணன் மணிரத்னத்திடம் பேசினோம். "நீட் தேர்வுக்கு எதிரான அனிதாவின் போராட்டத்தை, என் தங்கை பெயரைப் பயன்படுத்தியே கொச்சைப்படுத்தியிருக்கார் அமைச்சர் பாண்டியராஜன். இந்த வீடியோவைப் பார்த்ததுமே அதிர்ச்சியா இருந்துச்சு. அவர் குடும்பத்துப் பொண்ணா இருந்தா, இப்படியான வீடியோவை வெளியிட்டிருப்பாரா? நீட் தேர்வு விஷயத்துல அதுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் அ.தி.மு.க அரசு எடுத்துகிட்டு இருக்குது. அதனாலதான், நாடாளுமன்றத்துல நீட் தேர்வுக்கு எதிரான வாக்கெடுப்புல அ.தி.மு.க கலந்துக்கல. ஆனா, நீட் தேர்வுக்கு எதிரா செயல்படுற மாதிரி அ.தி.மு.க தன்னைக் காட்டிக்குது. அரசியலுக்காக எவ்வளவு கீழ்த்தரமா இறங்குவாங்கன்னு சொல்றதுக்கு இந்தச் செயல் ஓர் உதாரணம்.

நீட் தேர்வுக்கு ஆதரவான செயல்களில் அமைச்சர் பாண்டியராஜன் ஆரம்பம் முதலே அதிகம் கவனம் செலுத்தியிருக்காரு. அதைக் கண்டிச்சு, அவருடைய ஆவடி தொகுதியில 'நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு' சார்பா போராட்டம் நடந்திருக்கு. இதனால, தன்னோட வாக்கு வங்கி பாதிக்கும்னு நினைச்சுதான் பாண்டியராஜன் என் தங்கை பத்தின வீடியோவை வெளியிட்டிருக்காரு. இதைக் கண்டிச்சு, அரியலூர் மாவட்ட எஸ்.பி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, எங்க தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு மெயில் மூலமாகப் புகார் அனுப்பியிருக்கேன். அதுல, தன்னோட அரசியல் லாபத்துக்காக, என் தங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துல போலியான வீடியோவை வெளியிட்டிருக்கிற அமைச்சர் பாண்டியராஜனை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி வேட்பாளரா போட்டியிட தடை விதிச்சு, அவரைத் தகுதி நீக்கம் செய்யணும்னு கேட்டிருக்கேன்.

அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்

'எனக்குத் தெரியாம அந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கு'ன்னு அமைச்சர் பாண்டியராஜன் சொல்லிச் சமாளிக்கப் பார்க்கறாரு. இந்த வீடியோ விவகாரம் குறித்து அவர் பேசிய வீடியோவுலகூட, எந்த வருத்தமும் சலனமும் இல்லாமதான் பேசியிருக்காரு. தான் செஞ்சது தப்புங்கிற குற்ற உணர்ச்சியே அமைச்சருக்கு இல்ல. அவர் மேல தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்னு நம்புறேன். தேர்தல் ஆணையத்துல இருந்து அவர் தப்பிச்சாக்கூட, மக்கள்கிட்ட இருந்து அவர் தப்பிக்க முடியாது" என்று கோபமாக முடித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு