Published:Updated:

அண்ணாமலை காட்டம்: ``விநாயகரை வைத்து அரசியல் செய்தால் அவர் திமுக அரசுக்கு முடிவுரை எழுதுவார்"

அண்ணாமலை ஃபைல் படம்
அண்ணாமலை ஃபைல் படம் ( நா.ராஜமுருகன் )

"நமது கட்சியில் பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவினர்கள் ஒவ்வொருவரிடமும் பேசி அவர்களை நமக்கான வாக்காளர்களாக மாற்ற வேண்டும். "- அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தென்காசி மாவட்டத்தில் கட்சி ஊழியர் கூட்டம், சமுதாயத் தலைவர்களுடனான சந்திப்பு, நெற்கட்டும்செவல் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிப்பு, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

பாவூர்சத்திரத்தில் அண்ணாமலை
பாவூர்சத்திரத்தில் அண்ணாமலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கட்சி ஊழியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உள்ளாட்சித் தேர்தலுக்கு நாம் அனைவரும் இணைந்து வேலை செய்து அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும். இந்த வெற்றியானது 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இருக்க வேண்டும்.

நமது கட்சியில் பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவினர்கள் ஒவ்வொருவரிடமும் பேசி அவர்களை நமக்கான வாக்காளர்களாக மாற்ற வேண்டும். நாம் வளர்ந்துகொண்டிருக்கக் கூடிய கட்சி. தமிழகத்தில் இருக்கும் எல்லா கட்சிகளுமே தங்களுடைய வாக்காளர்களைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும்தான் ஒவ்வொரு நாளும் புதிய உறுப்பினர் வருகையால் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

பா.ஜ.அக ஊழியர் கூட்டம்
பா.ஜ.அக ஊழியர் கூட்டம்

சட்டமன்றத் தேர்தலின்போது நெல்லை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் நின்று நயினார் நாகேந்திரன் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளபோதிலும், அவருக்கென்று அந்தத் தொகுதியில் தனியாக வாக்கு வங்கியை வைத்திருந்தார். அது பா.ஜ.க வாக்கு வங்கியுடன் சேர்ந்ததால் வெற்றியைக் கைப்பற்றினார். அதேபோல ஒவ்வொருவரும் புதிய வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 20 எம்.பி-களை அனுப்பி வைக்க வேண்டும். அதில் தென்காசி தொகுதி முதன்மையானதாக இருக்க வேண்டும். நம்முடைய செயல்பாடு, பேச்சு ஆகியவற்றால் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் அதை வாக்கு வங்கியாக மாற்றுவது உங்கள் கடமை.

வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசின் அனுமதி எதற்கு?
அண்ணாமலை, பா.ஜ.க மாநிலத் தலைவர்
அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கிடையாது என்று மாநில அரசு சொல்லிவிட்டது. அத்துடன் அவரவர் வீட்டில் விநாயகர் சிலை வைத்துக் கொண்டாட அனுமதி கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறது. எங்கள் வீட்டில் விநாயகரை வைத்துக் கொண்டாட அனுமதி கொடுப்பதற்கு நீ யாரு? வீட்டில் ஆண்டவனுடைய சிலையையும் படத்தையும் வைத்து வழிபடும் சமுதாயத்துக்கு நீங்கள் ஆர்டர் போடுறீங்க.

தனிமனிதனாகப் போய் சிலைகளைக் கரைக்க அனுமதிப்பதாக அரசு சொல்லியிருக்கிறது. இதிலிருந்து, இவர்கள் நம்முடைய சித்தாந்தத்தை, தமிழக மண்ணின் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. நாம் தெளிவாகச் சொல்லிவிட்டோம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது நிச்சயமாக நடக்கும். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

பாவூர்சத்திரம் ஊழியர் கூட்டம்
பாவூர்சத்திரம் ஊழியர் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி நடத்த முடியாது என்று சொன்ன அதே முதல்வர் எதற்காக டாஸ்மாக்கை நடத்துறீங்க. நமது பெரிய செல்வம் என்பது குழந்தைகள். அரசை நம்பி அவர்களை இன்று முதல் பள்ளிக்கு அனுப்புகிறோம். எல்லா இடத்திலும் கொரோனா குறைந்துவிட்டதாகச் சொன்ன நீங்கள் எதற்காக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் கொரோனா குறையவில்லை என்று சொல்கிறீர்கள்?

கர்நாடகா மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் நிலையில் அங்கு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கு தமிழகத்தைவிட நான்கு மடங்கு கொரோனா பரவல் அதிகம் இருக்கிறது. தமிழகத்தைவிட அதிகம் கொரோனா தொற்று இருக்கும் மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. அங்கே உங்க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள ஆட்சி நடக்கிறது.

கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை சந்திப்பு
கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை சந்திப்பு

விநாயகரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் மட்டுமல்லாமல் பீடைகள் வராது என்பது நம் முன்னோர் கொடுத்துள்ள நம்பிக்கை. இதைக் காலம் காலமாகச் செய்துகொண்டிருக்கிறோம். அதனால் தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு