Published:Updated:

சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம்... ஹெச்.ராஜா ட்வீட்... எடப்பாடி விளக்கம்!

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம்
சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் பரவிவரும் நிலையில், அந்தப் போராட்டங்களுக்கு எதிராக ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுவருகிறார், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் என்ற பகுதியில் இரண்டு மாத காலமாக பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இடைவிடாத போராட்டத்தைப் போலவே, சென்னை வண்ணாரப்பேட்டையிலும் பெண்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு, ‘சென்னையின் ஷாகீன் பாக்’ என்று பெயர் வைத்துள்ளனர். இவர்கள் மீதுதான் கடந்த 14-ம் தேதி காவல்துறையினரின் தாக்குதல் நடைபெற்றது. போலீஸாரால் பெண்கள் தாக்கப்பட்டதைப் பார்த்த அதிர்ச்சியில் முதியவர் ஒருவர் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் பரவியிருக்கிறது.

வண்ணாரப்பேட்டையில் போராட்டம்
வண்ணாரப்பேட்டையில் போராட்டம்

வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில், பெண்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என எல்லோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய இஸ்லாமியப் பெண்கள், “நாங்கள் எல்லாம் பெரியாரே… நாங்கள் எல்லாம் அம்பேத்கரே.. நாங்கள் எல்லாம் திப்புசுல்தானே’, ‘எச்சரிக்கை எச்சரிக்கை... நாங்கள் அம்பேத்கரின் கூட்டம் எச்சரிக்கை’ என்று தேசியக்கொடிகளை அசைத்தவாறு கோஷங்களை எழுப்புகிறார்கள்.

பிப்ரவரி 14-ம் தேதியன்று நடைபெற்ற போலீஸ் தாக்குதலுக்குப் பிறகு, இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது என்றாலும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டபோதே இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். குடியிருப்புப் பகுதிக்குள்தான் போராட்டம் நடக்கிறது. போராடிவரும் பெண்களுக்கு ஆதரவாக ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களை முதலில் கைதுசெய்த போலீஸார், பின்னர் எல்லோர் மீதும் தாக்குதலில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

போலீஸ் தாக்குதலில் பலர் காயமடைந்தாகவும், பெண்கள்மீது போலீஸார் கைவைத்து அத்துமீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக காவல்துறையைச் சேர்ந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ‘முஸ்லிம் வன்முறையாளர்களால் காவல்துறையினர், காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்’ என்று ட்வீட் போட்டார் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இதுபோன்ற பல ட்வீட்டுகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை, என்.பி.ஆர்-ரை நடத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், ஆளும் தரப்பு அதை ஏற்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
`ராகுலால் ராஜினாமா முடிவெடுத்தாரா மன்மோகன்?’ - மான்டேக் சிங் அலுவாலியா புத்தகம் கிளப்பிய சர்ச்சை

வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சிலர் போராட்டம் நடத்தினர். பேருந்துகள் மற்றும் காவலர்கள் மீது கற்களும் பாட்டில்களும் வீசப்பட்டன. அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களைக் கைதுசெய்ய முயற்சி செய்தபோது, காவல்துறையின் வாகனங்களைச் சேதப்படுத்தியுள்ளனர்” என்று கூறினார். முதல்வரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், நேற்று வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மாட்டோம். மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.

மதுரையில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்
மதுரையில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்
`வண்ணாரப்பேட்டை போராட்டத்தை நானா தூண்டினேன்?!' -அமைச்சர் ஜெயக்குமார் கருத்தால் கொதித்த லியோனி

சட்டமன்றத்திலிருந்து தி.மு.க வெளிநடப்பு செய்த பிறகு, ஹெச்.ராஜா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டிக்காத தி.க, தி.மு.க, காங்கிரஸைக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். போராட்டம் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக ஹெச்.ராஜா ட்வீட் வெளியிட்டுவரும் நிலையில், அந்தப் போராட்ட மேடையில் இன்று ஒரு திருமணமும் நடைபெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு