Published:Updated:

52 நாள்களைக் கடக்கும் ஷஹீன் பாக் பெண்களின் போராட்டம் - இதுவரை நடந்தது என்ன?#ShaheenBagh

ஷஹீன் பாக் மூதாட்டிகள்
News
ஷஹீன் பாக் மூதாட்டிகள்

`ஷஹீன்' என்னும் உருது சொல்லுக்கு `ராஜாளி' என்று பொருள். `இந்தியா ஒரு தோட்டம் என்றால், நாங்கள் அதைக் காக்கும் ராஜாளிகள்' என்று எழுதப்பட்ட பதாகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது. ஷஹீன் பாக்கில் எங்கு திரும்பினாலும் இந்திய தேசியக்கொடி பறந்துகொண்டிருக்கிறது.

52 நாள்கள் கடந்துவிட்டன. டெல்லியின் குளிர்காலத்தின் கடுமையைத் தாண்டி, இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது ஷஹீன் பாக் பெண்களின் போராட்டம். கடந்த டிசம்பர் மாதம், டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் டெல்லி காவல்துறை மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும் ஷஹீன் பாக்கை முதன்முதலாகக் கைப்பற்றினர் பெண்கள். தற்போது நாட்டின் மிக முக்கியமான போராட்டக் களமாக மாறி, சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது ஷஹீன் பாக்கின் போராட்ட முழக்கம்.

டெல்லியை நொய்டா, ஃபரிதாபாத் முதலான நகரங்களுடன் இணைக்கும் பிரதான சாலையில், ஷஹீன் பாக் என்ற இடத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு மிக அருகில் இருக்கும் இந்த இடத்துக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் போராட்டங்கள் தொடர்கின்றன. தேசிய கீதம் இசைக்கப்படுகிறது; பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் முதலான வலதுசாரிகளுக்கு எதிரான முழக்கங்கள், பேச்சுகள் தொடர்கின்றன; பாடல்கள் பாடப்படுகின்றன; விடுதலைக்கான கவிதைகள் வாசிக்கப்படுகின்றன; ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. புர்கா அணிந்த முஸ்லிம் பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். சர்வதேச ஊடகங்கள் ஷஹீன் பாக் போராட்டத்தை `மீண்டும் ஒரு சத்தியாகிரகம்' என்று மகாத்மா காந்தியின் அமைதிப் போராட்டத்தோடு இதை ஒப்பிடுகின்றன.

ஷஹீன் பாக்
ஷஹீன் பாக்
Al Jazeera

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷஹீன் பாக் பெண்களுக்குக் கடுங்குளிரையும் தாண்டி, ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நேச சக்திகளால் உணவு தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளோடு, குடும்பம் குடும்பமாக அமர்ந்து போராட்டத்தைத் தொடர்கின்றனர். `ஷஹீன்' என்னும் உருது சொல்லுக்கு `ராஜாளி' என்று பொருள். 'இந்தியா ஒரு தோட்டம் என்றால், நாங்கள் அதைக் காக்கும் ராஜாளிகள்' என்று எழுதப்பட்ட பதாகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இந்திய வரைபடம் ஒன்று மிக உயரமாக எழுப்பப்பட்டு, அதில் "இந்திய மக்களாகிய நாங்கள் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் முதலானவற்றை நிராகரிக்கிறோம்" என்று எழுதப்பட்டிருக்கிறது. எங்கு திரும்பினாலும், இந்திய தேசியக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் காதை பாபாசாகேப் அம்பேத்கர் திருகிக்கொண்டிருக்கும் ஓவியம் ஒன்றையும் வரைந்து வைத்திருக்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அரசுக்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர் ஷஹீன் பாக்கின் போராட்டக்காரர்கள். இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து, அனைத்து மதத்தவரும் இணைந்து பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துகின்றனர். ஒரு போராட்டக்களம் அத்தனை ஜனநாயகத்துடன், கடுங்குளிரிலும் இயல்பாக இயங்கிவருகிறது. அந்தப் பகுதியின் பேருந்து நிலையம் ஒன்றை 'ஃபாத்திமா ஷேக் & சாவித்திரிபாய் பூலே நூலகம்' என்ற பெயரில் புத்தகம் வாசிக்கும் இடமாக மாற்றியுள்ளனர். ஷஹீன் பாக்கின் நடைபாலத்தில் அப்பகுதி குழந்தைகள் இந்திய அரசியலமைப்பு குறித்தும் மதச்சார்பின்மை குறித்தும் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டம்
புத்தாண்டுக் கொண்டாட்டம்
ஷஹீன் பாக்கில் தேசிய கீதம் பாடி, புத்தாண்டு கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தன்று வரலாறு காணாத கூட்டத்தைச் சந்தித்தது ஷஹீன் பாக். போராட்டப் பகுதியில் நடுவில், தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 'ஷஹீன் பாக் பாட்டிகள்' என்று அப்பகுதியினரால் அன்போடு அழைக்கப்படும் மூன்று மூதாட்டிகளும் மறைந்த ரோஹித் வெமுலாவின் தாயும் குடியரசு தினத்தன்று கொடியேற்றினர். தற்போது பஞ்சாபிலிருந்து சீக்கிய விவசாயிகள் பலரும் போராட்டக்களத்தில் இணைந்துள்ளனர். நாளுக்கு நாள், ஷஹீன் பாக்கின் போராட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்க, மறுபக்கம் டெல்லி தேர்தலின் முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது ஷஹீன் பாக்.
"ஷஹீன் பாக்கில் லட்சக்கணக்கானோர் அமர்ந்துள்ளனர்; அவர்கள் நாளை உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் வன்கொடுமை செய்வார்கள்; உங்களையும் கொல்வார்கள். இதை இப்போதே உணர்ந்துகொண்டு உங்கள் முடிவை எடுங்கள்."
பர்வேஷ் வர்மா, பி.ஜே.பி எம்.பி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், `உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான டெல்லி காவல்துறை ஷஹீன் பாக் போராட்டத்தை அனுமதிப்பதன் மூலம், அமித் ஷா அரசியல் செய்ய வசதி ஏற்படுத்தித் தருகிறது' என்று கருத்து தெரிவித்தார். அதற்கு அமித் ஷா, "ஆம் ஆத்மி கட்சியினர் பலரும் ஷஹீன் பாக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்; அரவிந்த் கெஜ்ரிவால் ஷஹீன் பாக்கை ஆதரிக்கிறாரா, இல்லையா என்று வெளிப்படையாகச் சொல்லட்டும்" என்று கொக்கி போட, கெஜ்ரிவாலோ, "மத்திய அரசு, போராடும் மக்களைச் சந்தித்து, அவர்களது பிரச்னைகளுக்கு செவி கொடுக்கட்டும்" என்று சமாளித்தார்.

ஷஹீன் பாக் போராட்டம்
ஷஹீன் பாக் போராட்டம்

"வாக்கு எந்திரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் அழுத்தத்தின் வலியை, ஷஹீன் பாக் உணர வேண்டும்" என்று சர்ச்சையாகப் பேசினார் அமித் ஷா. மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், "குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தேசத்தைத் துண்டாட நினைப்பவர்களால் நடத்தப்படும் போராட்டம் அது" என்று கூறினார். பி.ஜே.பி-யின் ராகுல் சின்ஹா, "ஷஹீன் பாக்கில் போராடுபவர்கள் அனைவரும் பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள்" என்று வன்மத்தோடு பேசினார்.

மேற்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதி எம்.பியும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவருமான பர்வேஷ் வர்மா, "ஷஹீன் பாக்கில் லட்சக்கணக்கானோர் அமர்ந்துள்ளனர்; அவர்கள் நாளை உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் வன்கொடுமை செய்வார்கள்; உங்களையும் கொல்வார்கள். இதை இப்போதே உணர்ந்துகொண்டு உங்கள் முடிவை எடுங்கள்" என்று சர்ச்சையாகப் பேசினார். தேர்தல் ஆணையம் பர்வேஷ் வர்மா பிரசாரம் செய்வதற்குத் தடை விதித்தது.

டெல்லி தேர்தல் பிரசாரத்துக்காக அழைக்கப்பட்டிருக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் செல்லும் ஒவ்வோர் இடத்திலும் ஷஹீன் பாக் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஷஹீன் பாக்குக்கு பிரியாணி தந்து ஊக்குவிக்கிறார் என்ற ரீதியில், தொடர்ச்சியாகக் கருத்து கூறிக்கொண்டிருக்கிறார் யோகி.

ஷஹீன் பாக்
ஷஹீன் பாக்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறிய முழக்கமான, "தேசத்துரோகிகளைத் துப்பாக்கியால் சுடுங்கள்" என்று கூறியதன் பிறகு, மூன்று துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் டெல்லியில் நிகழ்ந்துவிட்டன. ஷஹீன்பாக்கை நோக்கி வந்த பயங்கரவாதி ஒருவன், "ஹிந்து ராஷ்டிரம் வாழ்க!" என்ற முழக்கத்தோடு சுட்டான். எனினும், அவனைக் காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது டெல்லி காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு, அந்த பயங்கரவாதி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவன் எனக் கூறப்படுகிறது. எனினும், ஆம் ஆத்மி கட்சி இதை 'அமித் ஷாவின் கேவலமான அரசியல்' என்று கூறி, மறுப்பு தெரிவித்துள்ளது.

"என் மகன் குளிரால் இறந்துள்ளான்; வேறு எந்த நோயும் இல்லை. நாங்கள் இப்போதும் நாட்டுக்காகப் போராட்டத்தைத் தொடரவுள்ளோம். எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. நாங்கள் என்ன செய்வது? பிரதமர் மோடியும், அமித் ஷாவும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்."
நாஸியா, போராட்டத்தில் ஈடுபடுவர்.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதியன்று, ஷஹீன் பாக் போராட்டக்காரர்களை எதிர்த்து, அனுராக் தாக்கூர் முன்வைத்த முழக்கங்களைக் கூறி போராட்டம் நடத்தினர் வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். "தோட்டாக்கள் வேண்டாம்; மலர்களை எறிவோம்!" என்று பதில் போராட்டம் நடத்தி, வலதுசாரிகளின் மீது மலர்களைத் தூவினர் ஷஹீன் பாக் பெண்கள். பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ஷஹீன் பாக் போராட்டங்கள் காஷ்மீர் பண்டிட்கள் விரட்டப்பட்டதைக் கொண்டாடுகின்றன என்று கருத்து தெரிவிக்க, 'காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவு தருவோம்' என்ற பதாகையோடு நின்றது ஷஹீன் பாக். பி.ஜே.பி-யின் தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, 'ஷஹீன் பாக் பெண்கள் பணம் வாங்கிக்கொண்டு போராடுகின்றனர்' என்று குற்றம் சாட்ட, போராட்டத்தில் ஈடுபடும் பெண்களில் இருவர் அமித் மாளவியா மீது வழக்கு பதிவு செய்ததோடு, 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளனர்.

நாஸியா
நாஸியா
ANI

"எங்கள் குழந்தைகள் கல்வி கற்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் கல்வி கற்கச் செல்லும் இடத்தில் இப்படி தாக்கப்பட்டால், நாங்கள் என்ன செய்வது? எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாங்கள் இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார் ஷஹீன் பாக்கின் பெண் ஒருவர். ஷஹீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் 4 மாதக் குழந்தை, கடுங்குளிர் காரணமாக உயிரிழந்தது. முகமது ஆரிஃப், நாஸியா தம்பதி தினமும் ஷஹீன் பாக்குக்குப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கின்றனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன், 4 மாதங்களே ஆன முகமது ஜஹான் உயிரிழந்துள்ளான்.

குழந்தையின் தாய் நாஸியா, "என் மகன் குளிரால் இறந்துள்ளான்; வேறு எந்த நோயும் இல்லை. நாங்கள் இப்போதும் நாட்டுக்காகப் போராட்டத்தைத் தொடரவுள்ளோம். எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. நாங்கள் என்ன செய்வது? பிரதமர் மோடியும் அமித் ஷாவும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

'ஐ லவ் இந்தியா' என்ற தொப்பியணிந்தபடி, பலரின் செல்லப்பிள்ளையாக இருந்த குழந்தை இறந்துள்ளது, ஷஹீன் பாக் பெண்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷஹீன் பாக்கின் பெண்கள் தங்கள் போராட்டத்தை வீரியமாகத் தொடர்ந்து வருகிறார்கள். 'முத்தலாக்' சட்டத்தை நீக்கி, இந்திய முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் புரட்சி ஏற்படுத்தியதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்துவந்த ஆளும்கட்சிக்கு, முஸ்லிம் பெண்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்போது, அவர்கள் பாகிஸ்தானிடம் பணம்பெறுபவர்களாகத் தெரிகிறார்கள். தேசத்துரோகிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், ஆம் ஆத்மி கட்சியிடம் பணம்பெற்றவர்கள், துப்பாக்கியால் சுடுங்கள், இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என ஒவ்வொரு நாளும் ஷஹீன் பாக்கின் பெண்கள் மீதான அவதூறுகள் தொடர்ந்தபடி இருக்கின்றன.

ஷஹீன் பாக்
ஷஹீன் பாக்

டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில், நொய்டாவிலிருந்து டெல்லிக்குள் நுழையும்போது, ஷஹீன் பாக் பகுதியை அடைவதற்கு முன், ஒரு பதாகை எழுப்பப்பட்டுள்ளது. 'வாருங்கள், உரையாடுவோம்!' என்கிறது அந்தப் பதாகை. தேர்தல் கட்சிகள் ஷஹீன் பாக்கை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வழி தேடிக்கொண்டிருக்கும் வேளையில், ஷஹீன் பாக் முன்வைக்கும் உரையாடலே ஜனநாயகம்.