Published:Updated:

`ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தவறுதான்!' - அன்புச்செழியனை கழற்றி விடுகிறதா அ.தி.மு.க?

அன்புச்செழியன்
அன்புச்செழியன் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

`கட்சிப் பொறுப்பில் இருந்து வரும் நிலையில் `நமது அம்மா'விலும் தனது வீடு அலுவலகங்களில் நடந்த ரெய்டு பற்றிய செய்தியை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிட்டார்கள்.'

``ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தவறுதான். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை பாயும். இதில் அ.தி.மு.க அரசு எந்த வகையிலும் தலையிடாது" என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளது, அ.தி.மு.க மதுரை மாநகர நிர்வாகியும் பைனான்ஸியருமான அன்புச்செழியன் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி சோதனை
வருமான வரி சோதனை
என்.ஜி.மணிகண்டன்

நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர் அன்புச்செழியன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக வருமானவரித்துறை சோதனை நடந்தது. இதில் அன்புச்செழியன் தரப்பில் மட்டும் 77 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். இதில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பைனான்ஸியர் அன்புச்செழியன் சர்ச்சைக்குரிய நபராக அறியப்படுபவர். ஆரம்ப காலத்தில் தி.மு.க-வில் இருந்தவர், ஆட்சி மாறியதும் அ.தி.மு.க-வுக்கு மாறி கட்சிப் பொறுப்பையும் பெற்று கட்சி நிகழ்ச்சிகளுக்கு நிதியை வாரி வழங்கியவர். எடப்பாடி, ஓ.பி.எஸ் உட்பட அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்துவந்த நிலையில், இந்த ரெய்டிலிருந்து தன்னைக் காப்பாற்ற அ.தி.மு.க உதவும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அரசுத்தரப்பில் `கம்'மென்று இருந்துவிட்டார்கள் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அன்புச்செழியன்
அன்புச்செழியன்

கட்சிப் பொறுப்பில் இருந்து வரும் நிலையில், `நமது அம்மா'விலும் தனது வீடு அலுவலகங்களில் நடந்த ரெய்டு பற்றிய செய்தியை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று அன்புச்செழியன் தரப்பு கவலை அடைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், `நடிகர் விஜய் மற்றும் அ.தி.மு.க நிர்வாகியும், சினிமா பைனான்ஸியருமான அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது பற்றி அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேட்டதற்கு, ``ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தவறுதான். யார் தவறு செய்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை பாயும். இதில் அ.தி.மு.க அரசு நிச்சயமாக தலையிடாது'' என்று கூறினார்.

அன்புச்செழியன்
அன்புச்செழியன்

இதன் மூலம் அன்புச்செழியனை அ.தி.மு.க அரசு காப்பாற்றாது என்று கூறப்படுகிறது. அதனால் அன்புச்செழியன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் சிலர்.

பின் செல்ல