Election bannerElection banner
Published:Updated:

`கேமராவுக்கு முன் மட்டும்தான் செயல்படுகிறார்!' - பிரதமர் மோடியை விமர்சித்த அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்பின் இந்தக் கருத்துகளுக்கு எதிராக பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களை கமென்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், தும்கூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ``பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவான நாடு. சிறுபான்மை மதத்தினர் அங்கு துன்புறுத்தப்படுகின்றனர். இதனால், சிறுபான்மை மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசவில்லை. மாறாக, அகதிகளுக்கு எதிராகப் பேரணிகளை நடத்துகின்றனர்" என்று பேசியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் பிரதமர் மோடியை விமர்சித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ``பாகிஸ்தான் இல்லையென்றால் பிரதமர் மோடிக்கு பேச எதுவுமே இருந்திருக்காது என்று சிலநேரங்களில் தோன்றுகிறது. கேமராக்கள் அவரைச் சுற்றி இருக்கும்போது மட்டுமே செயல்படுகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பேசியதாக, ``இந்தியாவை வளமான, திறமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய உலக சக்தியாக பார்க்க வேண்டும் என்பது இளைஞர்களின் கனவு. நமது நாட்டின் சகோதரிகளுக்கும் மகள்களுக்குமான விருப்பம். இந்த ஆசை ஏழை, தாழ்த்தப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கானது, புதிய இந்தியாவுக்கானது" என்று பதிவிடப்பட்டிருந்தது.

இந்த ட்வீட்டுக்கும் அனுராக் காஷ்யப் பதிலளித்திருக்கிறார். அதில்,``மக்கள் நீங்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றுகூட உங்களுக்குத் தெரியாது. எல்லாவற்றிலிருந்தும் நழுவி விடுகிறீர்கள். சீரற்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து, அமைதியாக இருங்கள்" என்று அவர் விமர்சிக்கும்ரீதியில் பதிவிட்டிருக்கிறார்.

அனுராக்கின் இந்தக் கருத்துகளுக்கு எதிராக பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களை கமென்டுகளில் பதிவு செய்து வருகின்றனர். அனுராக்கின் ரசிகர்கள் இந்த ட்வீட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு