Published:Updated:

`அ.தி.மு.க அரசின் கொள்கையே எனது கொள்கை!' - சி.ஏ.ஏ விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அன்வர் ராஜா

அன்வர் ராஜா
News
அன்வர் ராஜா

அன்வர் ராஜா, அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோர் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர்.

குடியுரிமைச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் கொள்கை எதுவோ அதுவே எனது கொள்கை என முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க கொண்டுவந்த முத்தலாக் சட்டத்தை எதிர்த்து கடுமையாகக் குரல் எழுப்பியவர் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. இச்சட்டத்தை நிறைவேற்றினால் உங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது எனச் சாபம்விட்டுப் பேசினார். இந்த நிலையில், முத்தலாக் சட்டம் வாக்கெடுப்பு வந்தபோது அதன் மீது எதிர்ப்பு தெரிவிக்காமல் நாடாளுமன்றத்திலிருந்து அன்வர் ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்ததன் மூலம் அச்சட்டம் நிறைவேற மறைமுகமாக உதவினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைத்தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஆதரித்து அ.தி.மு.க எம்.பி-க்கள் வாக்களித்தனர். இச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ``தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை. தோற்றுப் போவோம் எனத் தெரிந்தே என் மகளையும் தேர்தலில் போட்டியிட வைத்தேன்'' எனக் கூறி அன்வர் ராஜா அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் அன்வர் ராஜா, அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோர் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தக் கூடாது எனவும், அதற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் மனு அளித்தனர்.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கமல் - ரஜினிக்கு முன்னரே பெரிய நடிகர்கள் பலர் தமிழகத்தில் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது? தமிழகத்தைப் பொறுத்தமட்டில் உள்கட்டமைப்பைக் கொண்ட ஒரே பெரிய கட்சி அ.தி.மு.க மட்டுமே.

துக்ளக் சோ அ.தி.மு.க-வை எதிரியாகப் பார்த்தபோதுகூட அ.தி.மு.க-வை மிகப் பெரிய கட்சி என்றும் அக்கட்சியை வீழ்த்தக்கூடிய சக்தி எந்த தனி நபருக்கும் இல்லை எனக் கூறியிருக்கிறார். குடியுரிமை சட்டத்தைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க அரசின் கொள்கை என்னவோ அதுவே எனது கொள்கை'' என்றார். அன்வர் ராஜாவின் இந்தக் கருத்து குடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.