Published:Updated:

`நான், உங்களைப் போல் இல்லை ஜெயக்குமார்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேடு புகாரால் கொதித்த அப்பாவு

அப்பாவு
அப்பாவு

அரசு வேலைகளில் பணம் கொடுத்தால் மட்டுமே சேர முடியும் என்கிற நிலையை உண்டாக்கிவிட்டார்கள். அதனால், படித்தவர்களும் இளைஞர்களும் இந்த அரசுமீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.

தமிழகத்தை உலுக்கும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை 40-க்கும் மேற்பட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி மோசடியில் கைதுசெய்யப்பட்ட ஐயப்பன் என்பவர், முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு உடன் இருக்கும் புகைப்படத்தை அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டி, தி.மு.க மீது புகார் தெரிவித்தார்.

பேட்டியளிக்கும் அப்பாவு
பேட்டியளிக்கும் அப்பாவு

அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அப்பாவு, ’’ ஐயப்பன் என்பவர் எங்கள் கட்சியில்  எந்தப் பொறுப்பிலும் கிடையாது. தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்கிறேன். அப்போது, பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஏதோவொரு சந்தர்ப்பத்தில் என்னுடன் எடுத்த  போட்டோவை வைத்துக்கொண்டு, ’தி.மு.க காலத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை நாங்கள் சரிசெய்கிறோம்’ என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், என் புகைப்படத்தைக் காட்டி, ‘தி.மு.க பிரசார பீரங்கியான அப்பாவு என்ன பதில் சொல்கிறார், அவர் இப்போது தலைமறைவாக இருக்கிறார்’ என்றும் அமைச்சர் சொல்லியிருக்கிறார். 

அமைச்சருக்கு சவால் விடுக்கும் அப்பாவு
அமைச்சருக்கு சவால் விடுக்கும் அப்பாவு

ஆனால், நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் தான் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹயாத் ஓட்டலுக்குச் சென்றுவருகிறார். அங்கு எதற்காகச் செல்கிறார் என்பதைக் கூற முடியுமா... அவர்மீது புகார் தெரிவித்த பெண்ணுக்கு போலீஸார் மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் தெரியாதா?

நான் 98 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக நானும் கையொப்பமிட்டதுடன், இப்போது எம்.எல்.ஏ என்று சொல்லிக் கொள்ளும் இன்பதுரையும் கையொப்பமிட்டுள்ளார்.
அப்பாவு

நான், கடந்த 25 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். தொடர்ந்து 15 வருடங்கள் எம்.எல்.ஏ-வாக இருந்தேன். தற்போதுகூட, ராதாபுரம் தேர்தல் முடிவு தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். அந்த வழக்கில், மறுவாக்கு எண்ணிக்கையில் நான் 98 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நானும் கையொப்பமிட்டதுடன், இப்போது எம்.எல்.ஏ என்று சொல்லிக்கொள்ளும் இன்பதுரையும் கையொப்பமிட்டுள்ளார். 

அப்பாவு
அப்பாவு

என் அரசியல் வாழ்க்கையில் தவறைத் தட்டிக் கேட்பனே  தவிர, தவறுக்குத் துணைபோனது கிடையாது. அதனால், அமைச்சர் ஜெயக்குமார் என்னையும் அவரைப் போல நினைத்துக்கொள்ளக் கூடாது. இந்த ஆட்சியில், அனைத்துத் தேர்வுகளுக்கும் பணம் கொடுத்துதான் வெற்றிபெற முடிகிறது. இதனால், இளைஞர்கள் மத்தியில் இந்த அரசுமீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது.

`அய்யாதுரை' ஸ்டாலின் இனி 'அய்யோ துரை' ஆவார்!'- கொதிக்கும் ராதாபுரம் இன்பதுரை

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் சிபிசிஐடி-யின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. உயர் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில், இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க சிபிசிஐடி-யை இந்த அரசு அனுமதிக்குமா... தாங்கள் செய்த தவற்றை மறைக்க, பழியை தி.மு.க மீது போடப்பார்க்கிறார்கள். 

பேட்டியளிக்கும் அப்பாவு
பேட்டியளிக்கும் அப்பாவு

அனைத்து ஊழல்களிலும் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருக்கிறது. எல்லா அமைச்சர்களின் வீடுகளிலும் பணம் எண்ணும் இயந்திரம் வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன? டிஎன்பிஎஸ்சி ஊழல் பற்றி தனியாகப் பேச வேண்டும் என்றால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேவையில்லை. உதயநிதி ஸ்டாலினும் தேவையில்லை. என்னுடன் நேருக்கு நேராக விவாதிக்க அமைச்சர் ஜெயகுமார் தயாரா?’’ என்றார் காட்டமாக.

பின் செல்ல