Published:Updated:

`நானும் பாடுபட்டேன்; பதில் போஸ்டர் தேவையில்லாதது!’ - நீலகிரி மருத்துவமனை விவகாரத்தில் ஆ.ராசா

நீலகிரி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

A.Raja
A.Raja ( Arun.K )

தமிழகத்தில் புதிதாக நிறுவப்படவுள்ள 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீலகிரியும் ஒன்று. இதன்மூலம் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் ஒன்றான அரசு மருத்துவக்கல்லூரி கனவு நிறைவேறியுள்ளது. இதற்காக ஊட்டி ஹெச்.பி.எஃப்க்கு அருகில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு வரைபடத்துடன் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

D.M.K
D.M.K

புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடம் கட்ட ரூ.447.32 கோடி நிதியும் நிர்வாகச் செலவினங்களுக்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வந்த ரவீந்திரன், பதவி உயர்வு பெற்று ஊட்டியில் புதிதாக அமைய உள்ள மருத்துவ கல்லூரி டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நீலகிரிக்கு அரசு மருத்துவக் கல்லூரி வர காரணமாக இருந்தது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாதான் காரணம் என நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் தோழமைக் கட்சிகளுடன் ராசாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதைப் பார்த்த அ.தி.மு.க-வினர் சிலர் இது 'பச்சை பொய்' என்ற வாசகம் அடங்கிய சிறிய போஸ்டரை அதன் அருகில் ஒட்டினர். இதனால் மருத்துவ கல்லூரி கொண்டுவர யார் காரணம் என்ற விவாதம் அனல் பறக்கிறது.

poster
poster

இதனிடையே ஊட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று ஏற்புரை வழங்கிய ராசா பேசுகையில். "உலக சுகாதாரா நிறுவனத்தின் சுகாதார கணெக்கெடுப்பின் அடிப்படையில் மருத்துவ வசதிகள் குறைந்த நாடுகளில் உலக வங்கியின் உதவியுடன் மருத்துவக் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு 70 சதவிதமும் மாநில அரசுகள் 30 சதவிகிதமும் நிதி வழங்க வேண்டும். தற்போது இந்தியாவில் இம்முறை இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மத்திய அரசு 75 மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதில், தமிழகத்துக்கு முதல் கட்டமாக நான்கு கல்லூரிகளுக்கும் பின், 6 கல்லூரிகள் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, முதலில் பட்டியலில் நீலகிரி மாவட்டம் இருக்கவில்லை. இதனால், உடனடியாகக் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினேன். அதில், நீலகிரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. எனவே, இங்கு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.

A.Raja
A.Raja

இதைத் தொடர்ந்து, நேரிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கடிதம் கொடுத்தேன். இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஒப்புக்கொண்டது. நானும் முயற்சிகள் மேற்கொண்டதன் பயனாக இன்று ஊட்டியில் மருத்துவக் கல்லூரி வரவுள்ளது. இதற்கு, மத்திய அரசிற்கும், இடம் மற்றும் நிதி வங்கவுள்ள மாநில அரசுக்கும் என நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சிலர் செயல்பட்டு வருகின்றனர். சிலர் பதில் நோட்டிஸ் ஒட்டி வருகின்றனர். இது தேவையில்லாத ஒன்று" என்றார்.