Published:Updated:

மக்களிடம் மாற்றம் வந்திருக்கிறது!

அந்த அனுபவங்கள்தான் இன்றுவரையிலும் நம்மை நகர்த்திச்செல்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

சாதி ஒழிப்பு, பொதுவுடமை தமிழ்த்தேசியம், மனித உரிமைகள் செயற்பாடுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னிற்கிறார் அரங்க.குணசேகரன். கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிலவிய பண்ணை ஆதிக்க கொடூரங் களை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில் ஒருவர். தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட பல வழக்குகளைத் தாங்கி நெடுங்கால வாழ்வைச் சிறைகளில் கழித்தவர். சிறு சிறு இயக்கங்களாகச் சிதறிக் கிடக்கும் முற்போக்கு அமைப்பு களை ஒருங்கிணைத்து அரசியல் சக்தியாக வலுப் படுத்தும் பணியில் தீவிரம் காட்டிவரும் அரங்க.குணசேகரனை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்து உரையாடினேன்.

அரங்க.குணசேகரன்
அரங்க.குணசேகரன்

“1977 முதல் மனித உரிமை சார்ந்து குரல் கொடுத்துவருபவர் நீங்கள்... சமீபத்தில் நிகழ்ந்த சாத்தான்குளம் படுகொலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ஆச்சர்யம் ஒன்றுமில்லை. காவல்துறை என்பது அரசின் படை. தன்னை எதிர்ப்ப வர்களை அந்தப் படையை வைத்து அரசு கட்டுப்படுத்தும். அரசே தன் பின்னால் இருப்பதால் காவலர்கள், தங்களை அதிகாரம் மிக்க வர்களாகக் கருதிக் கொள்கிறார்கள். 40 ஆண்டு களில் பல அடக்குமுறைகளைப் பார்த்துவிட்டேன். தர்மபுரியில் 26 தோழர்களை ஈவிரக்க மில்லாமல் நக்சலைட்டுகள் என்று சுட்டுக்கொன்றார்கள். வீரப்பனைப் பிடிப்பதாகச் சொல்லி காவல்துறை நடத்திய அத்துமீறல்களில் பல கொடுமைகள் வெளிவரவேயில்லை. உலகில் பாசிஸ்ட்களாக அறியப்படும் பலர் செய்யத் தயங்கிய சித்திரவதைகளையெல்லாம் சர்வசாதாரணமாகச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பதவி உயர்வு, பணப்பரிசெல்லாம் கொடுத்து அழகுபார்த்தது அரசு. பாதிக்கபட்டவர்கள் இன்னும் ரத்த சாட்சியாக வாழ்ந்துகொண்டி ருக்கிறார்கள். நான் ஒரு மாற்றத்தை கவனிக்கிறேன். முன்பெல்லாம் இதுமாதிரியான சித்திரவதைகள், படுகொலைகளுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே குரல் கொடுப்பார்கள். ஆனால் சாத்தான்குளம் விவகாரத்தில் மக்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள். இப்படியொரு அலையை உருவாக்கத்தான் நாங்களெல்லாம் போராடினோம். இது நல்ல மாற்றத்துக்கான தொடக்கம்...’’

அரங்க.குணசேகரன்
அரங்க.குணசேகரன்

``தொடக்கத்தில் இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டீர்கள்... எந்தப்புள்ளியில் அவர்களுடனான பிரிவு நிகழ்ந்தது?’’

``என் அப்பா, எங்கள் பகுதியில் பஞ்சாயத்து செய்து பிரச்னைகளைத் தீர்ப்பவராக இருந்தார். சாதியத் தீண்டாமை நிலவிய அந்தக் காலகட்டத்திலும்கூட எல்லாச் சமூகத்தாரும் என் அப்பாவிடம் பஞ்சாயத்துக்கு வருவார்கள். இடதுசாரி இயக்கத் தலைவர்களில் ஒருவரான இம்மானுவேல் ராமராஜ் அப்பாவுக்கு நெருக்கமான நண்பர். வீட்டில் இருவரும் அடிக்கடி தீவிரமாக அரசியல் பேசுவார்கள். அதுதான் எனக்கு வெளிச்சத்தின் தொடக்கமாக அமைந்தது. தஞ்சாவூரில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என் பள்ளிக்கு எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம். அங்கு வந்து போகும் தலைவர்களால் ஈர்க்கப்பட்டு அதற்குள் நுழைந்தேன். மாணவர் பெருமன்றத்தில் தீவிரமாகச் செயல்பட்டேன். அக்காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சையில், சாதியொழிப்பும் நிலமீட்பும் மிக முக்கியப் பிரச்னைகளாக இருந்தன. மிராசுகளும் கார்வாரிகளும் நலிந்த மக்களை மிகுந்த கொடுமைக்குள்ளாக்கிக்கொண்டி ருந்தார்கள். அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான் பிரதான வேலையாக இருந்தது. அரியலூர் மாவட்டம் பொய்யூரில் ஆதி திராவிட மக்களின் நிலங்களைப் பறித்துக்கொண்டு கிராமத்தை விட்டே விரட்டிவிட்டார்கள். அப்போது நான் பியூசி படித்துக்கொண்டிருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி திருச்சி ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்னால் அமர்ந்து போராடினோம். அந்தத் தருணத்திலிருந்து காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் தோழர்களிடமிருந்து முழுமையாக விலக நேர்ந்தது. சாதியொழிப்பு குறித்தும் தேசிய இன விடுதலை குறித்தும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களோடு கருத்து முரண் வந்தது. காலம் நமக்கு அனுபவங்கள் வாயிலாக நிறைய கற்றுக்கொடுக்கிறது. அந்த அனுபவங்கள்தான் இன்றுவரையிலும் நம்மை நகர்த்திச்செல்கிறது.’’

அரங்க.குணசேகரன்
அரங்க.குணசேகரன்
மக்களிடம் மாற்றம் வந்திருக்கிறது!
மக்களிடம் மாற்றம் வந்திருக்கிறது!

``மார்க்சிய லெனினிய அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவர் நீங்கள். அந்தக்காலக்கட்டம் பற்றிச் சொல்லுங்களேன்?’’

``77-78ல் லிபரேஷன் அமைப்பில் சேர்ந்தேன். வெண்மணி அமல்ராஜ், மருத செல்வராஜ், கோபிநாத், பாலசுந்தரம் என வலுவான தோழர்கள் அங்கே இருந்தார்கள். தொடக்கத்தில் மாணவர்கள், விவசாயிகள் மத்தியில் பணியாற்றி இயக்கம் கட்டும் பணி எனக்குத் தரப்பட்டது. நான் அமைப்பில் இணைந்து சில வருடங்களில் நக்சல்பாரிகள் என்றழைக்கப் பட்ட மார்க்சிய லெனினிய இயக்கம், அழித்தொழிப்பைக் கைவிட்டது. ஜனநாயக ரீதியில் தீர்வைத் தேடும் படிப்பினைக்கு நாங்கள் வந்தோம். `தாழ்த்தப் பட்டோர் உரிமைச் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நிலமீட்பு, சாதி யொழிப்பு வேலைகளில் தீவிரமாகச் செயல்பட்டோம். `இந்திய மக்கள் முன்னணி’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றையும் உருவாக்கினோம். மிராசு களுக்கு எதிரான நிலமீட்சிப் போராட்டங்களே அப்போது அவசியமாக இருந்தன. நிறைய அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டோம். திருச்சியில் சிறைப்பட்டிருந்த ஒரு தருணத்தில் புலவர் கலியபெருமாளின் மகன் வள்ளுவனோடு நெருக்கம் ஏற்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப் பட்டிருந்த காலத்தில் புலவரோடு நேரடியாக நெருக்க மானேன். சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு அவரோடும் தமிழரசனோடும் சேர்ந்து நிறைய வேலைகள் செய்தோம். ஈழ ஆதரவுப் போராட்டத்தில் ஒருங்கிணைந்து நின்றோம். ஜனநாயக அமைப்புகளின் அடையாளமே கருத்து வேறுபாடுகள்தானே... அப்படியொரு தருணத்தில் லிபரேஷனிலிருந்து வெளியேறி தமிழ்தேசிய மனித உரிமைக் கழகத்தை உருவாக்கினேன். லிபரேஷனில் இருந்த பல தோழர்கள் என்னோடு வந்தார்கள். பிறகு, திருமாவளவன், அதியமான், எஸ்.டி.கல்யாணசுந்தரம், பொழிலன் அனைவரையும் ஒருங்கிணைத்து `தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் முன்னணி’யைக் கட்டினோம். அதன் தொடர்ச்சியாக ஜாதி ஒழிப்பு ஐக்கிய முன்னணி உருவானது. ஒரு கட்டத்தில் திருமாவளவன் வேறொரு அரசியல் வடிவத்தை நாடினார். முன்னிருந்த அமைப்புகள் கலைந்தன. அதன்பிறகு மார்க்சிய - லெனினிய அமைப்புகளை யெல்லாம் ஒருங்கிணைத்து மக்கள் ஜனநாயக் கூட்டமைப்பை உருவாக்கி னோம். அதிலிருந்துதான் பிரசனைகள் அடிப்படையில் பல கூட்டமைப்புகள் உருவாகின. களம் மாறுமே ஒழிய வேலைகள் எப்போதும் ஒன்றுதான்.’’

அரங்க.குணசேகரன்
அரங்க.குணசேகரன்
மக்களிடம் மாற்றம் வந்திருக்கிறது!

``தமிழகத்தின் அரசியல்சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``திமுகவும் சரி, அதிமுகவும் சரி, மக்களுக்கான கட்சிகள் அல்ல. அவர்கள் முதலாளி களுக்காகத்தான் பேசுவார்கள். உண்மையில் மக்கள், இந்தக் கட்சிகளை நம்பவில்லை. கூடங்குளம் தொடங்கி ஜல்லிக்கட்டு, முல்லைப் பெரியாறு, சாத்தான்குளம் வரைக்கும் மக்கள் வீதிக்கு வந்து நியாயம் கேட்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களின் போராட்டங் களுக்குப் போய் கண்டன உரையோ, வாழ்த்துரையோ ஆற்றத்தான் இந்த அரசியல் கட்சிகளால் முடிகிறது.’’

அரங்க.குணசேகரன்
அரங்க.குணசேகரன்

``இப்போது என்னமாதிரியான வேலைகள் நடக்கின்றன?’’

``நல்லதொரு வலுவான அரசியல் வழிகாட்டுதல் இளைஞர்களுக்குத் தேவைப் படுகிறது. ஆர்வமிக்க இளைஞர்களைக் கொண்டு தமிழக மக்கள் புரட்சிக்கழகம் என்றொரு அமைப்பை வழிநடத்துகிறேன். தமிழகத்தில் துண்டு துண்டாக இருக்கிற இடதுசாரி அமைப்புகள் அனைத்தையும் திரட்டி ஓர் கூட்டமைப்பு உருவாக்கும் முயற்சியில் இறங்கி யிருக்கிறேன். இரண்டு தடவை இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இன்னொரு சிகிச்சையை இதயம் தாங்காது. அதற்குள்ளாக செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்துமுடிக்க வேண்டும்.”

அரங்க.குணசேகரன்
அரங்க.குணசேகரன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு