Published:Updated:

`சிக்கவைக்க சதி.. விளக்கமளித்தேன்!' -ஸ்டாலினைப் புகழ்ந்தது குறித்து பி.டி.அரசகுமார்

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

அரசியல் நாகரிகத்துடன் பேசிய இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு எனக்கு எதிராகச் சிலர் வேலை செய்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவராக வருவார் என்று சொல்லக்கூடிய பட்டியலில் பி.டி.அரசகுமாரும் ஒருவர். மாநிலத் துணைத்தலைவரான இவர், நேற்று புதுக்கோட்டையில் நடந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொண்டார். அங்கு பேசுகையில், `தமிழக முதல்வராக விரைவில் ஸ்டாலின் பொறுப்பேற்பார்' என்று ஸ்டாலின் முன்னிலையிலேயே பேசியது பா.ஜ.க வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

`அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழக பா.ஜ.க-வில் குரல் எழுந்துள்ள நிலையில், கட்சித்தலைமையிடம் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பி.டி.அரசகுமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என்று நீங்கள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?''

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

`` நீண்டகாலமாக என்னுடன் நட்பில் இருப்பவர் ஸ்டாலின். என்னை எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பவர். தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் அவர் ஜனநாயக முறையில் முதலமைச்சராகப் பதவியேற்க உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரின் எண்ணம் வெற்றி பெறும் என்று நாகரிகமான முறையில் பேசினேன். அடுத்த தேர்தலில் அவர்தான் முதல்வர் என்று நான் கூறவில்லை. மற்றபடி இதைத் திட்டமிட்டுப் பேசவில்லை. யதார்த்தமாக வந்த வார்த்தையை சிலர் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.''

`` யார் பெரிதாக்குகிறார்கள்?''

``கட்சியில் என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்களாகக்கூட இருக்கலாம். மாநிலத் தலைவர் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. அந்தப் பதவிக்கு நான் வந்துவிடக் கூடாது என நினைக்கும் சிலராகவும் இருக்கலாம். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று இதுவரை கட்சி கொடுத்த அனைத்து வேலைகளையும் அதையும் தாண்டி கட்சியின் வளர்ச்சிக்காகப் பல வேலைகளையும் செய்துவருகிறேன். அதனால் என் மீது எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் எழுப்ப முடியவில்லை. இப்போது, அரசியல் நாகரிகத்துடன் பேசிய இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு எனக்கு எதிராகச் சிலர் வேலை செய்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை''

`` உங்களுக்கு இன்னும் திராவிட இயக்கங்கள் மீதான பிடிப்பு விடவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது?''

ஸ்டாலின் மீது மரியாதை உள்ளவன் நான். அதைத்தான் பேசினேன். அதுகூட, வருகின்றத் தேர்தலில் அவர்தான் முதல்வராக வருவார் என்று பேசவில்லையே... ''
பி.டி.அரசகுமார்

``அதை எப்படி விடமுடியும். திராவிட இயக்கங்களிலிருந்து வந்தவன்தானே நான். நம் அம்மா, அம்மாச்சியை மறந்து விடுவோமா.. அவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில்லையா. அதுபோலத்தான் திராவிட இயக்கங்களும், அதன் மீதான மரியாதையும். அது எப்போதும் எனக்கு உண்டு.''

`காலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்!' - பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி. அரசகுமார்

`` அதனால்தான் அந்த மேடையில் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினீர்களா?''

`` அரசியல் மேடைகளில் பேசுவது என்பது வேறு, ஒரு குடும்பத்தின் விழாவில் பேசுவது என்பது வேறு. இதில், கட்சிக் கொள்கையின் அடிப்படையில் பேசுவதில்லை. தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் மீது மரியாதை உள்ளவன் நான். அதைத்தான் பேசினேன். அதுகூட, வருகின்றத் தேர்தலில் அவர்தான் முதல்வராக வருவார் என்று பேசவில்லையே... ''

`` நீங்கள் தனியாகக் கட்சி நடத்தியவர், பி.ஜே.பி-யில் இணைந்தாலும் முழுமையாக அதனுடன் நீங்கள் ஒட்டவில்லை என்று சொல்கிறார்களே?''

`` அப்படி எல்லாம் இல்லை. மோடிதான் இந்த நாட்டைக் காக்கக் கூடியவர், திறமையானவர் என்ற அடிப்படையில் அவர் மீதான மரியாதையில் பா.ஜ.க-வில் இணைந்து செயலாற்றி வருகிறேன். அவருக்காக கட்சியில் சேர்ந்த நான் எப்படி ஈடுபாடு இல்லாமல் இருப்பேன்?''

``உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க-வில் சிலர் குரல் எழுப்புவதாகச் சொல்லப்படுகிறதே?''

``ஆம், எழுப்பத்தான் செய்வார்கள். எப்படா என்று காத்துக் கொண்டிருந்தவர்கள், இதைப் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், நான் கட்சித் தலைமையிடம் விளக்கம் அளித்துவிட்டேன்.''

`80 மணி நேரம் ஆட்சி, டிராமா... ரூ.40,000 கோடி நிதி'! - ஃபட்னாவிஸ் பதவியேற்பு குறித்து ஹெக்டே

`` நீங்கள் பி.ஜே.பி-யில் இருந்து விலகப்போவதாகவும், அதனால்தான் இப்படிப் பேசியதாகவும் தகவல்கள் வருகின்றனவே? ''

``நான் விலகுவதாக இருந்தால் வெளிப்படையாக சொல்லிவிட்டுத்தான் விலகுவேன். எனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. இப்போதுவரை கட்சிப்பணிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.''

அடுத்த கட்டுரைக்கு