Published:Updated:

தஞ்சாவூர்: 'கொரோனா பணியிலிருந்த போலீஸிடம் சிபாரிசுக்குச் சென்றாரா திமுக நிர்வாகி! நடந்தது என்ன?'

தி.மு.க நிர்வாகி, போலீஸ் எஸ்.ஐ வாக்குவாதம்
தி.மு.க நிர்வாகி, போலீஸ் எஸ்.ஐ வாக்குவாதம் ( ம.அரவிந்த் )

போலீஸ் எஸ்.ஐ ``இதுக்கெல்லாம் சிபாரிசுனு வர்றீங்க. எங்க ஏரியாவுல ரெண்டு மாசமா தண்ணி வரலை. எங்க வீட்டுலயும் தண்ணி வரலை. அதையெல்லாம் சரிசெய்ய மாட்டீங்க!" என தி.மு.க நிர்வாகியிடம் கேட்டிருக்கிறார்.

தஞ்சாவூரில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக கண்காணிப்பு பணியிலிருந்த போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ ஒருவரிடம் தி.மு.க நிர்வாகி ஒருவர் லோடு ஆட்டோவை விடுவிப்பதற்காக சிபாரிசுக்கு சென்றதாக வீடியோ ஒன்று வைரலாகிவரும் நிலையில், அது குறித்த புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 24-ம் தேதி வரை லாக்டெளன் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் யாரும் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் அவர்களிடம் அபராதம் வசூல்செய்து வருகின்றனர். தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணமின்றி லோடு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதை நிறுத்திய போலீஸ் அதன் டிரைவரிடம் ரூ.200 அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். உடனே அந்த டிரைவர் தஞ்சாவூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்தின் வலது கரம் எனச் சொல்லப்படுகிற தி.மு.க-வின் தஞ்சை மாநகர துணை செயலாளரான நீலகண்டன் என்பவருக்கு போன் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது,

போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ
போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ

போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதிலும், அதைக் கண்காணிக்கும் பணியிலும் போக்குவரத்து போலீஸார் ஈடுப்பட்டுவந்தனர். அப்போது மினி டோர் சரக்கு வாகனம் ஒன்றும், ஒரு டூ வீலரில் நான்கு பேரும் வந்துள்ளனர். இரு வாகனத்தையும் தடுத்து நிறுத்தி போலீஸ் அபராதம் வசூலிப்பதற்கான பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த நீலகண்டன், `நான் எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகத்தின் ஆள்தான் எனச் சொல்லி, லோடு ஆட்டோவை விடுமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த போலீஸ் எஸ்.ஐ ``இதுக்கெல்லாம் சிபாரிசுனு வர்றீங்க. எங்க ஏரியாவுல ரெண்டு மாசமா தண்ணி வரலை. எங்க வீட்டுலயும் தண்ணி வரலை. அதையெல்லாம் சரி செய்ய மாட்டீங்க!" எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ``இதை பப்ளிக்ல கேட்காதீங்க, ரோட்டுல பேசாதீங்க. சம்பந்தப்பட்ட இடத்துல சொல்லுங்க. சரிசெய்வாங்க’’ எனச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அங்கு நின்ற போலீஸார் இருவரையும் சமாதானம் செய்தனர். உடனே நீலகண்டன் அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டார். இதுதான் தற்போது சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

நீலகண்டனிடம் பேசினோம். ``மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்குவதற்காக டூ வீலரை நிறுத்திவிட்டுச் சென்றேன். அந்த சமயத்தில் எஸ்.ஐ லோடு ஆட்டோ டிரைவரிடமும், மற்ற சிலரிடமும் மெடிக்கல் ஷாப் வாசலில் நின்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். என்னவென்று கேட்டுவிட்டு நான் என் வேலையைப் பார்க்கச் சென்றேன். ஆனால் அவர் சம்பந்தமில்லாமல் பேசினார். புரிஞ்சுக்காமப் பேசுறார் என மற்ற போலீஸார் சொன்ன பிறகு நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன். இதைச் சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மேல் தவறு இருப்பதுபோல் சித்திரித்து என் பேரைக் கெடுக்க நினைக்கிறார்கள்" என தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணியிலிருந்த போலீஸ்
கொரோனா தடுப்பு பணியிலிருந்த போலீஸ்

சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.ஐ அர்ப்பணிப்போடு பணி செய்யக்கூடியவர். தனக்கு ஒதுக்கிய பணியை சரியாகச் செய்பவர் என்ற பேச்சுகளும் போலீஸ் வட்டத்தில் கிளம்பியிருக்கின்றன. இந்தநிலையில் நீலகண்டன், குறிப்பிட்ட எஸ்.ஐ மீது தனக்கும் அந்த வண்டிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆளும்கட்சியில் இருக்கும் தன்னைக் களங்கப்படுத்தும் நோக்கில் பேசியதாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி பாரதிராஜாவிடம் பேசினோம், "நீலகண்டன் மருந்து வாங்கத்தான் சென்றிருக்கிறார். அப்போது எஸ்.ஐ-யிடம் சிலர் வாக்குவாதம் செய்துள்ளனர். இதை நீலகண்டன் என்னவென்று யதார்த்தமாகக் கேட்டிருக்கிறார். சிபாரிசுக்குத்தான் வந்திருக்கிறார் எனத் தவறாகப் புரிஞ்சுக்கிட்ட எஸ்.ஐ அவருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். பர்சனல் விஷயத்தை அந்த இடத்தில் பேசவும் அவசியமில்லை. சம்பந்தப்பட்ட போலீஸ் மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது தெரியவில்லை. தவறான புரிந்துணர்வால் இது நடந்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த விசாரணையும் நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு